கவிஜி பக்கங்கள்- நினைவோ ஒரு பறவை

மேனி தெரிய ஆடை உடுத்தும் மீனம்மா...
நீ சேலை கட்டுற சேதியைக் கொஞ்சம் கூறம்மா....
தமிழ் பண்பாடு இங்கே திண்டாடுது....
அது கம்ப்யூட்டரில் வந்து கொண்டாடுது.....

இன்று காலை தொலைகாட்சியில் " நான் பேச நினைப்பதெல்லாம்" என்ற படத்தை சற்று நேரம் பார்க்க கிடைத்த நேரத்தில்.... நினைவுகளில் பின்னோக்கி பறக்கத் தொடங்கினேன்.........
நான் பேச நினைப்பதெல்லாம்..... எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்... தமிழ் சினிமா தவற விட்ட மிகச் சிறந்த நடிகன் ஆனந்த் பாபு......

படம் பார்க்கும் போது மேற் கூறிய பாடலுக்கு திரைக்கு முன் நின்று ஆடிய நினைவுகளில்... இன்றும் ஆழ் மனதில் புது சிறகு ஒன்று முளைத்துக் கொண்டிருப்பதை.... உணர வைத்த தருணத்தில் தான் இந்த கட்டுரை..... என்னை எழுதுகிறது.....

முதல் இரண்டு வரிகளை அன்று கொண்டாடினேன்.... பின் இரண்டு வரிகளை இப்போது உணர்கிறேன்......

"நாட்டுக்கு ராஜா ஆனவர் எல்லாம் போனது எங்கே தெரியவில்லை......
பாட்டுக்கு ராஜா ஆனவர் மட்டும் பூமியில் இன்றும் மறையவில்லை......
காலங்களால் நான் அழிவதில்லை....
நானும் வாழுவேன்.. நானும் பாடுவேன்.. இன்னும் கோடான கோடியுகம்....."

படம் ஓடிக் கொண்டிருந்த அந்த ஒரு மாசத்தில்.... பத்து முறைக்கு மேல் பார்த்திருப்பேன்.... அந்த வருட கோவில் திருவிழாவுக்கு அரைக்கை சட்டையை சுருட்டி விட்டுக் கொண்டு.. சட்டையின் கடைசி இரு பட்டன்களை கழற்றி முடிச்சு போட்டு ஆனந்த் பாபு போலவே மேடையில் ஆடியது..... இன்னும் மூளைக்குள் பனி விதைக்கிறது....

என்னை எல்லாருக்கும் பிடித்த தருணம் அது..... ஆடி முடித்து கீழே இறங்கிய பின் எத்தனை கைகள்.... கை கொடுத்தன.....!!! நிஜமாகவே சிறகு முளைத்த இரவு அது.....

விக்கிரமன் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடத்த படம் இந்த "நான் பேச நினைப்பதெல்லாம்...."

பாடகி சந்தியாவிற்கு பதிலாக மோகினி சந்தியாவை விவேக் கூட்டிக் கொண்டு வந்ததில் இருந்து கதையின் போக்கு மிக அழகாய் செதுக்கப் பட்டிருக்கும்............ சிறு வயது முதலே வயிற்றில் அடித்துக் கொண்டு பாட்டு பாடி தன் முறைப் பெண்ணை படிக்க வைத்துக் கொண்டிருப்பவர் ஆனந்த் பாபு... அந்த பெண்ணின் மீது தன் உயிரையே வைத்திருக்கும் ஒரு கலைஞன்.... பாடுவதையும் ஆடுவதையும் தவிர வேறு எதுவமே தெரியாத ஏழை........ ஒரு படைப்பாளி இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் பிழைக்க முடியுமா.....?

படைப்பாளியைக் கொண்டாடாத சமூகம் உருப்படவே உருப்படாது என்று சாரு நிவேதிதா சொல்வதை நினைத்துப் பார்க்கிறேன்......

ஒரு இக்கட்டான சூழ்நிலையில்... மோகினி அவர்களுடன் தங்குவதும் வேறு ஒரு சூழ் நிலையில் தன் முறைப்பெண், வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு ஆனந்த் பாபுவை "உனக்கு என்னைக் கல்யாணம் செய்து கொள்ள என்ன தகுதி இருக்கிறது" என்று கேட்கும் தருணத்தில்.... உயிர் போகும் வலியில் ... ரயிலின் முன்னே சாவைத் தேடி நடக்கிறார்... இடைவேளை......

முதல் முறை பார்க்கும் பொது அந்த வயதில் கூட பெண்களை புரிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவனாகவே இருந்தேன்..... அப்படி ஒரு கோபம்.... கண்கள் கலங்கி.... எப்போதும் இடைவேளையில் சாப்பிடும்... தேங்காய் பன்னைக் கூட அன்று சாப்பிடவில்லை....

அப்போதே கதையை உள் வாங்கும் திறன் இருந்ததாகவே உணர்கிறேன்...... கண்டிப்பாக ஆனந்த் பாபு இப்போது சாக மாட்டார் என்று நம்பினேன்.... எப்படி என்றெல்லாம் தெரியாது..... ஆனால் சாக மாட்டார்...... அதே போல் மோகினி வந்து காப்பாற்றி விடுவார்.. பின் ஒரு பக்கத்துக்கு வசனம்... "காலம் காலமா காதல் தோல்வின்னா தாடி வளக்கறதும், தற்கொலை பண்றதும் தான்.. தீர்வா.. அதை ஏன் மென் நீ மாத்திக் காட்ட கூடாது ..." என்று பூஸ்ட் கொடுக்கும் வசனங்கள்.. அதே போல் மோகினியின் காதல் கதை அதிலும் ஒரு தோல்வி....

பின் ஒரு நல்ல முடிவில்... ஆனந்த் பாபு மோகினியை IAS படிக்க வைக்கிறார்.... ஒரே பாட்டில் தான்..... பாட்டு என்றதும் தான் நினைவுக்கு வருகிறது.. படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் அவ்ளோ அழகு.... அதுவும் சில முக்கியமான காட்சிகளுக்கு பின்னால் வரும் ஒரு வகை.. லலல லலலா.. என்ற தீம் இசை.... அன்றைய கால கட்டத்தில் அத்தனை நெகிழ்வைக் கொடுத்தவை..... இன்று நிறைய பேர் அந்த காட்சிகளை கலாய்ப்பது வேறு விஷயம்... ஐன்ஸ்டீனையே கலாய்க்கும் ஆட்கள் தானே நாம்....

ஒரு கட்டத்தில் அவரும் IAS ஆகிறார்.. ஆனால்... ஆனந்த் பாபுவையும் விவேக்கையும் அவர் கண்டு கொள்ளாமல் போக.. அப்போது ஒரு வசனம் பேசுவாரே.... ஆனந்த் பாபு.....

இந்த சீன்ல அவரின் நடிப்பும்.. வசனமும்... சூழ்நிலையும், எந்த உலக சினிமாவுக்கும் குறைந்தது அல்ல...

"இந்த பொண்ணுங்களே இப்படித் தாண்டா... வேணுங்கும் போது யூஸ் பண்ணிட்டு, வேண்டாத போது தூக்கி போட்டுட்டு போய்டுவாங்க..." என்று கண் கலங்கி சொல்லிக் கொண்டே சாலையில் ஒரு ஓரமாய் அழுக்கு உடையில் கலைந்த தலையோடு நடந்து வரும் போது ... அயோ தப்பி தவறிக் கூட காதல் பண்ணிறக் கூடாது என்று ஒரு கூச்சல் உள்ளுக்குள் வரும்... வந்தது...... ஆனால்..... கடைசியில்.... கிளைமாக்சில்..... கதையை அப்படியே மாற்றி மோகினி தன்னை ஏமாற்றியவனை பழி வாங்கும் போது.........

"இது ஒத்தையடிப் பாதை..
இதில் தேரும் வரும் நாளை...
எல்லாம் நாளை மாறி விடும்..
நிலவும் கூட பூமி வரும்.."- எத்தனை தன்னம்பிக்கையான வரிகள்....தியேட்டரே அதிர அதிர பாடல் ஒலிக்க.....கலங்கிய கண்கள் மெல்ல சிரிக்க தொடங்கியது....... பரவால்ல... பொண்ணுங்க எல்லாருமே அப்படி இல்ல.. நல்லவங்களும் இருக்காங்க.. தைரியமா காதல் பண்ணலாம் என்றும் முடிவெடுத்தேன்.....

சரசக்கா.... "டே விஜிப் பையா... அந்த பப்லு மாறி ஆடிக் காட்டுடா.." என்று கேட்கும் பொழுதெல்லாம்.. கொஞ்சம் கூட தயங்காமல்... சட்டையின் நடுவே ஆள் காட்டி விரலாலும் பெருவிரலாலும் பிடித்து இழுத்துக் கொண்டு .. கண்ணடித்து... தலையை ஒரு வெட்டு வெட்டி.... வா என்பது போல ஒரு நளினத்தில்.. ஒரு ஆட்டம் ஆடத் தொடங்கினால்.....மேனி தெரிய ஆடை உடுத்தும் மீனம்மா....... சேலை கட்டுற சேதியைக் கொஞ்சம் கூறம்மா............. ஹே....ஹே....ஹே.....ஹே....ஹே....ஹே.........

சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கூடி... "இந்த பையன் சீக்கிரம் சினிமாக்கு போயிடுவான்னு" சொன்னார்கள்...இப்போ சினிமா பேய் புடிச்சு ஆடுது..... பாப்போம்.....

நினைவுச் சிறகில் கிடைத்த வானம்... பதின் பருவத்தை பொழியும் வானவில்லை... வளைக்காமல் நீளச் செய்யும் கவிதையாகிறது.... படித்தாலும் புரிந்தாலும்.. மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்... என் ஆழ் மனக் காகிதத்தில்... இன்னும் இன்னும் நினைவுகள் பார்த்துக் கொண்டே இருக்கிறது..... வாழ்வைக் கொண்டாட்டமாய் கண்ட பால்யம்............கொண்டாட்டத்தையே வாழ்வாய் கண்ட பதின் பருவம்....சுற்றிய தெருக்களில், ஊர்களில், காடுகளில்.... அணு அணுவாய் பிரிந்து வெற்றிடமாய் கூடு கட்டியிருக்கிறது......அது தன்னை எப்போதும் உயிர்ப்பித்துக் கொள்ளவே காத்துக் கொண்டு இருக்கிறது... சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும்... தன்னை தானே பார்த்து வியந்து, சிரித்து, அழுது... உணர்ந்து.... தன்னை வானமாக்கிக் கொள்ளவே மானுடமாகிறது... நினைவுகள் இல்லாத தேகத்தில் மரணம் கூட வாய்ப்பதில்லை....

நினைவு சிறகடிக்கும்......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (19-Nov-14, 5:13 pm)
பார்வை : 236

மேலே