தேன்மொழி - 04 - இராஜ்குமார்

தேன்மொழி - 04 - இராஜ்குமார்
=============================

அய்யோ ...பள்ளிகோடமா .. ...அங்க நா போவுனுமா ......எதுக்கு ....????
என சொல்லி கொண்டே கலையை பார்த்தது குழந்தை ..
குழந்தையின் பார்வை அன்னையிடம் ஏதோ சொல்லியது ....அதன் அர்த்தம் கலை மட்டுமே அறிந்தாள் ...

சில வாரம் சென்றது ...குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டிய வாரமும் வந்தது ..
பள்ளியில் சேரும் நாளுக்கு முந்தைய நாள் இரவில் ....

குடிசையின் வாசலில் குழந்தை , கலை , தாத்தா மூவரும் இருந்தனர் ..குழந்தை இரவு வானில் அழகாய் சிரிக்கும் இரண்டு நிலவையும் கண் சிமிட்டி கொண்டே காதல் செய்தது ..

இந்த தேசம் சற்று கற்பனை தேசமே ...வித்தியாசம் விண்ணிலும் மண்ணிலும் ...பார்க்கும் இடத்திலும் நடக்கும் தடத்திலும் ...புது வழியில் புது பாதை அமைத்து கொண்டே செல்லும் தேசம் இது ..அதிகம் குளிரும் ...சில சமயம் வியர்க்கும் ..கான்கிரீட் சுவரில் எந்த வீடும் கிடையாது ...இங்கு அனைத்தும் மரத்தால் ..மரத்தில் உருவான வீடே ..மரமே வீடாகவும் இருக்கும் ...

காதலை கண் முன் காணலாம் ..அனைவரின் கண்ணிலும் காணலாம் ...அன்பு மட்டுமே அனைவரின் ஆசை ..ரூபாய் நோட்டுக்கள் இல்லை ..பொற்காசுகள் புழக்கத்தில் இருந்தது ....பொற்காசும் பலரின் மனதை இழுத்து வைத்தது ...வறுமை கோடு வழக்கம் போல் நீண்டது ... மனிதம் வளர்த்து அதன் நிழலில் நிம்மதி காணும் மனிதர்கள் இங்கே அதிகம் ..பூக்களின் வாசம் புது மணம் தூவும் .. இனி பயணிக்கும் பாதையில் சிதறும் இத்தேசத்தின் கற்பனை கணுக்களை விழிகளில் விதைத்து வைப்போம் ...

தேசத்தின் பெயர் " தேனுலகம் " ...இங்கு பகலில் ஒரு நிலவு ..இரவில் இரு நிலவு ..சூரியன் சுத்தமாய் இல்லவே இல்லை ..

பகலில் வரும் நிலவு சூரியனின் ஒரு துண்டுப் போல ஒளிரும் ...இந்நிலவு வெண்ணிறமாய் தெரியும் ..எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும் ..பகலிலும் இருக்கும் இரவிலும் இருக்கும் ...இந்நிலவு மாதத்தில் ஒரு நாள் இரவு வேளையில் மட்டுமே இல்லாமல் போகும் ..அந்நாள் அமாவாசை .. இந்த வெண்ணிற நிலவின் பெயர் " வெண்ணிலவு " ..

இன்னொரு நிலவு தினசரி இரவு வேளையில் ஒளிரும் ...மஞ்சள் நிறத்தில் வானில் வலம் வரும் ...இரவில் மட்டுமே இருக்கும் ...மாதத்தில் ஒரு நாளான அமாவாசையில் மட்டுமே இந்நிலவும் இல்லாமல் போகும் ..இந்நிலவின் பெயர் " மஞ்சள் நிலா " ...தினசரி இரவுகளில் இரண்டு நிலவுகளும் வானை வண்ண மயமாக்கும் ...நமது விழிகளை இமைக்காமல் ஈர்க்கும் ..வான் முழுக்க " வெண்ணிலவு " வெண் நிறத்திலும் , " மஞ்சள் நிலா "மஞ்சள் நிறத்திலும் ..மனதை ரசனையில் மயக்கி வானில் மிதக்க வைக்கும் ..

அப்படிதான் மிதந்தது குழந்தையின் மனம் ரசிப்பில் ...குழந்தையின் விழி வானையே ரசித்தது ..கலையின் வீடு வேப்ப மரத்திலான சிறு குடிசை ...அவ்வீட்டு வாசலில் இப்போது மூவரும் ..

குழந்தையை பார்த்து தாத்தா ...

" என்றா பண்ற "

" ம்ம் ....மேல நிலாவா பாக்குறேன் "

"நாளிக்கி பள்ளிகோடத்துக்கு போலாமா "

" நா போவுல ..நா போவ மாட்டேன் ..நீ வேணுனா போ .."

"அடிங் படவா ..நீ வர .."

"ம்ம்...அம்மா வந்தா நா வரேன் ....இல்லனா வரல ..."

"அம்மா வராது ..அம்மாவுக்கு இங்க வேல கீது .."

" நீ பொய் சொல்ற ...அம்மா இங்க வரப்புக்கு போனவே வடிவம்மா வந்து சண்ட போடுவா ...அப்பாரம் எப்டி நம்ம அம்மா வேல செய்யும் "

"ம்ம் ..அதே தான் ..அவங்க சண்ட போடறதே உன்னால தான் "

"என்ன தாத்தா ..... நானா ..நா என்ன பண்ணேன் "

" நீ ஒன்னும் பண்ணல ...நீ பொறந்தது தான் தப்பா தெரிது அவங்களுக்கு ....நீ மட்டும் ஒழுங்கா பள்ளிகோடம் போய் படிச்சா இவங்க சண்டையே போடா மாட்டாங்க ...நீ இங்க இருந்தா தான் சண்ட போடுவாங்க ...புரியுதா ??"

"ம்ம் ..புரிது தாத்தா ...சரி வா ..நாளிக்கு காத்தால பள்ளிகோடம் போலாம் "

என்று குழந்தை சொல்லி விட்டு மீண்டும் வானில் இருந்த இரு நிலவையும் பார்த்து ரசித்தது ...

குழந்தை தாத்தாவிடம் பேசியதை அசையாமல் பார்த்து கொண்டிருந்தாள் கலை ...அவளை அறியாமல் கண்ணீர் மட்டும் கன்னம் தொட்டது ..

இரவு குளிரோடு முடிந்து மறுநாள் காலை வந்தது ..
ஒற்றை வெண்ணிலவு மிக அழகாய் கிழக்கில் ஒளிர்ந்தது ..

தாத்தாவும் குழந்தையும் பள்ளிக்கு கிளம்பினர் ..செல்லும் வழி முழுக்க முழுக்க ஒரு சிறு கொடி தடம் ...குழந்தை பார்வை தடத்தை சுற்றி வேடிக்கை பார்த்தது ..தடத்தின் ஓரங்களில் முள் செடியும் , பூ செடியும் சிரித்தன .ஒரு ஓணான் நடு மரத்தில் நின்று மெல்ல தலையை தூக்கி தூக்கி அசைத்தது ...விழிக்கு முன் பட்டாம் பூச்சி ஒன்று பறந்தது .. மழலையின் மனது புது அனுபவம் கற்றது ...பயணத்தின் தொடக்கம் இந்நாள் என்பதை உள்மனம் உள்வாங்கியது ..

பள்ளியின் வாசல் வந்தது ...இது ஒரு அரசு தொடக்கப்பள்ளி .குழந்தையின் சொந்த ஊரிலே உள்ள பள்ளி இது ....ஊரின் பெயர் " பனிமலர் கிராமம் " தருமபுரி மாவட்டம் ...

இப்பள்ளி முழுவதும் மரத்தால் வடிவமைக்க பட்டுள்ளது தலைமை ஆசிரியர் குழந்தையை பள்ளியில் சேர்க்க ஒரு பதிவேட்டை எடுக்கிறார் ..

இந்த தேசத்தில் எழுதுவதற்கு தாள்கள் கிடையாது ..பேனா கிடையாது .. ஆசிரியர் எடுத்த சேர்க்கை பதிவேடு முழுக்க முழுக்க இலைகளால் ஆனது ..இலைகள் கோர்க்கப்பட்டு இலையின் மேற்பரப்பில் தகவல்கள் எழுதப்பட்டு இருந்தது ...இங்கே எழுதுவதற்கு இறகின் நுனியும் , காம்பின் நுனியும் பயன்படுகிறது .. எழுதுவது அழியாமலிருக்க ஒரு வகை சாறில் நனைத்து எழுதுகின்றனர் ..இன்னும் பல இவர்களின் கைவசம் ...இயற்கையோடு இணைந்த வாழ்வியல் இவர்களின் இலக்கு ..

குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க அனைத்து தகவலும் ஒரு இலையில் எழுதப்படுகிறது ...எழுதும் போது ....

" பேரன் பேரு என்ன தாத்தா "

" பேரன் பேரு ராமசாமி ...ங்க "

"அப்பா அம்மா பேரு "

" அப்பன் பேரு முத்து , அம்மா பேரு கலைமகள் " .....என தாத்தா சொல்லும் போதே .. குழந்தை மிக வேகமாய் ..

"தாத்தா ...எனக்கு ராமசாமி பேரு வேணா ...பேரை மாத்து ...பேரை மாத்து "

" என்னடா பேரு வைக்கிறது "

" எனக்கு இளங்குமரன் அப்படின்னு வை "

இதை பார்த்த தலைமை ஆசிரியர் அவராகவே இளங்குமரன் என பதிவேட்டில் எழுதிவிட்டு ...குழந்தையிடம் ..

" தம்பி ..இங்க வா ..உன் பேர இளங்குமரன் அப்படின்னு நா எழுதி வைச்சிட்டேன் ...நீ போய் அங்க உக்கார் "

" ம்ம் .. சரி ..."

இளங்குமரன் நான்காம் வரிசையில் அமர்ந்தான் ...நமக்கு பேரை நாமே வைத்து வைத்து கொண்டோம் என்பதில் ஓர் இன்பம் அவனுக்கு ..தாத்தா வெளியே சென்று ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் இளங்குமரனை காண வந்தார் ..கையில் ஒரு கவரோடு ...கவர் முழுக்க வெள்ளை நிற மிட்டாய் ..அதை அப்படியே வாங்கி அனைவர்க்கும் கொடுத்தான் குமரன் ..

அடுத்த நாள் பள்ளிக்கு ஆசையோடு சென்றான் குமரன் ..கொடி தடம் ரசித்து ...ஒரு வெள்ளை நிற துணி பையை தோளோடு எடுத்து சென்றான் ...பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்த தொடங்கினார் ..

சற்று நீளமான வாழை இலை விரிக்கப்பட்டு அதில் எழுதி எழுதி பாடம் நடத்தினார் வகுப்பாசிரியர் " மாதையன் ".....மாணவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் சிறு சிறு இலைகள் வைத்து அதில் எழுதினர் ..பசங்க பை நிறைய இலை நிறைத்தது ..அந்த இலைகளே அவர்கள் எழுதவும் ..எழுதி பழகவும் உதவின .. பள்ளியை சுற்றி மரங்கள் அசைந்து அசைந்து தென்றலை வீசியது ...இலைகள் இன்பமுடன் இன்னிசை பாடியது ..இயற்கை தனது மனதை மனிதன் மனதோடு தைத்து கொண்டது ... அதன் பலனாய் காணும் காட்சி யாவும் விழியின் புருவம் தொட்டு பேசின ....

ஒரு வாரம் சென்றது ..பள்ளியில் முதல் வகுப்பு சேர இரண்டு பசங்க வந்தனர் ...இருவரும் சற்று உயரம் அதிகம் ...அதில் ஒருவனை மட்டும் குமரன் வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ..காரணம் அந்த ஒருவன்
அழுது கொண்டே இருந்தான் ...அழுகையை நிறுத்தவே இல்லை ... குமரன் அந்த பையனின் கண்களை பார்க்காமல் ...கையை தான் பார்த்தான் ...பார்த்து கொண்டே இருந்தான் ..

அந்த பையன் யாரோ ? ...ஏன் அழனும் ...?....அவனது கைக்கு என்ன ?....அதனால் என்ன ...?
இவன் ஏன் வச்ச கண் வாங்காம பாக்குறான் ..?

.........தொடரும் ,.........................

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (26-Nov-14, 12:15 am)
பார்வை : 243

மேலே