தண்ணீர் இல்லாத நாடு கண்ணீர் விடும் நாடு

தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்துவந்தாலும், பெரும்பாலான இடங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததுதான் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. நீரின்றி அமையாது உலகு என்னும் குறள் வாசகம்தான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அடையாள சின்னத்தில் இடம் பெற்றுள்ளது. வேறு எது வேண்டுமானாலும் இல்லாமல் மனிதன் இருந்துவிடலாம். ஆனால், நீரில்லாமல் வாழ முடியாது. வாழ்க்கைக்கு ஆதாரமே தண்ணீர்தான். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மட்டுமே கடந்த ஆண்டு பருவமழை குறைவு என்கிறது புள்ளிவிவரம். ஆனால், மாநிலம் முழுவதும் பரவலாக குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. திண்டுக்கல் போன்ற நகரங்களில் ஒரு குடம் குடிநீர் ^10 என்று ஒலிபெருக்கி மூலம் கூவி கூவி விற்கும் அவலம்.

குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் படும்பாடு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒரு குடம் தண்ணீருக்காக காடு மேடுகள் வழியாக பல கிலோ மீட்டர் தூரம் நடக்கும் பெண்கள். பள்ளிக்கு செல்வதைவிட்டுவிட்டு தண்ணீருக்கு அலையும் குழந்தைகள். சைக்கிள், டூவீலர் என்று குடங்களை கட்டிக்கொண்டு அலைவதே குடும்பத் தலைவர்களின் வேலையாகிப் போனது. அவ்வளவு பாடுபட்டு கொண்டு வரப்படும் தண்ணீரும் பாதுகாப்பானதாக இல்லை என்பது வேறு கதை. பெரும்பாலான நகர்ப்பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்களில் சப்ளை செய்கிறது. ஆனால், குழாய்களில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ காற்று வருவது நிச்சயம். 5 நாட்கள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குழாய்களில் குடிநீர் வரும் நகரங்கள், கிராமங்கள் பல. வந்தாலும் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோதான் என்பதால் அப்போது குழாயடியில் நடக்கும் குடுமிப்பிடி சண்டைகளுக்கு பஞ்சமில்லை.

ஏன் இந்த சோக நிலை? பெய்யும் மழையை முறையாக சேமிக்காமல் இருப்பதும், நீர் நிலைகளை பாதுகாக்காமல் இருப்பதும், நதிகளில் மழைக்காலங்களில் ஓடும் தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுமே இன்றைய குடிநீர் பஞ்சத்துக்கு முக்கிய காரணம். மழை பெய்யும் காலங்களில் மழை நீரை ஒவ்வொரு கிராமத்திலும் குளங்களில் சேமிக்க வழிசெய்தாலே பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்கு போய் இருக்காது. நாமக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் 1000 அடி தோண்டினாலும் நீரோட்டம் இருப்பதில்லை என்பது சோக செய்தி. ஆனால், பெரும்பாலான கிராம குளங்கள் நீர் வரத்து கால்வாய்கள் அடைபட்டு கட்டாந்தரையாகிவிட்டது. குளங்களுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் வர வழிசெய்ய வேண்டும். அதேபோல் ஒவ்வொரு ஆற்றிலும் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டினால் கரையோரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாது. குடிநீர் பஞ்சமும் வராது. இவை எல்லாவற்றையும் விட நதிகள் இணைப்பு திட்டங்களை முனைப்போடு, துரிதமாக செயல்படுத்தினாலே தமிழக வீடுகளில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்யலாம். தண்ணீருக்காக மக்கள் கண்ணீர் விடும் நிலையை மாற்றிவிடலாம்.

எழுதியவர் : தினகரன் நாளிதழ் (26-Nov-14, 3:35 pm)
சேர்த்தது : Abitha
பார்வை : 4150

மேலே