அண்மையில் படித்த புத்தகம் ஜிந்தாபாத் ஜிந்தாபாத்-சதமிழ்ச்செல்வன்

அண்மையில் படித்த புத்தகம் : ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாலம் , ' the book meet' , சேலம்-4.
இரண்டாம் பதிப்பு : ஏப்ரல்- 2007 , மொத்த பக்கங்கள் 176 விலை ரூ 80 / =

ஒரு தொழிற்சங்கவாதியின் அனுபவம், படிப்பினை, போராட்டம், எண்ணம், எழுத்து என விரியும் தளங்களைக் கொண்ட புத்தகம் இந்த 'ஜிந்தாபாத் , ஜிந்தாபாத் ' என்னும் புத்தக்ம். தனக்கு மனதிற்கு சரியெனப்பட்டதை நேர்மையாகப் பதிவு செய்திருக்கும் ஒரு பதிவாக இந்தப்புத்தகம் எனக்குப்படுகின்றது.

ஜிந்தாபாத் என்றால் என்னவென்றே அர்த்தம் தெரியாத , ஆனால் ஏற்ற இறக்கங்களோடு அம்முழக்கத்தை எழுப்பும் 'நம்பி' வாத்தியாரிலிரிந்து ஆரம்பித்து, இராணுவத்தில் தான் சேர்ந்தது , ' வசந்தத்தின் இடிமுழக்கம் ' என்னும் பத்திரிக்கை தனக்கு தபாலில் வந்ததால் இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது , பின்பு 1978-ல் அஞ்சல்துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தது, தொழிற்சங்க இயக்கங்களை ஆரம்பகாலத்தில் நக்கலடித்தது என்று இந்த நூலுக்கான அடித்தளத்தை முதல் சில பக்கங்களில் சுட்டுகின்றார் ச.தமிழ்ச்செல்வன்.

எடுத்தவுடன் தொழிற்சங்க இயக்கம் பற்றிப்பேசாமல் , தனக்குப் பிடித்த இலக்கியம் பற்றி முதலில் பேசினார்கள் என்பதனை 'பால்வண்ணம் ' என்னும் தோழரின் அறிமுகத்தின்மூலம் சுட்டுகின்றார். பால்வண்ணமும் ,அதனைப்போல வீரணன் என்னும் தொழிற்சங்கத்தோழரும் இந்த நூல் முழுவதும் ச.தமிழ்ச்செல்வனுடன் உடன் வருகின்றார்கள். பல இடங்களில் அவர்கள் பற்றிப்பேசுகின்றார். கோவில்பட்டிபற்றியும் அங்கிருந்த உருவாகிய இலக்கிய படைப்பாளிகள் பற்றியும் இந்த நூலில் நிறையக்குறிப்பிடுகின்றார். (எத்தனை கோவில்பட்டிக்காரர்கள் இந்தப்புத்தகத்தைப் படித்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை- ) கோவில்பட்டிபற்றியும் ,அங்கிருக்கும் காந்தி பொட்டல் பற்றியும் முடிவில் கோவில்பட்டியிலிருந்து பந்தமடை போனவுடன் பட்ட பாடுபற்றியும் , ஏன் தொழிற்சங்கவாதிக்கு இப்படிப்பட்ட ஊர் செண்டிமண்ட் எல்லாம் இருக்குமா என்று கவிஞர் சமயவேல் இவரது தம்பி கோணங்கியிடம் கேட்டது பற்றியெல்லாம் எழுதியிருக்கின்றார்.

தொழிற்சங்க இயக்கத்தில் பங்கெடுப்பு, கோவில்பட்டி அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பில் பங்கெடுப்பு, வீதி நாடகங்கள் போட்டது, நிஜ நாடகங்களை அந்தந்த இடங்களிலேயே தயாரித்து நடித்தது, வீதிகளில் நின்று ஏற்ற இறக்கங்களோடு கோஷம் போட்டது எனப் பல நிகழ்வுகளை அவருக்கே உரித்தான பாதையில் சொல்லிச்செல்கின்றார். தபால்துறை, தொலைபேசித்துறையும் இணைந்து இருந்த நிலையில் ஒன்பது சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டது, அதன் பொதுச்செயலராக தோழர் ஓ.பி.குப்தா இருந்தது , ச.தமிழ்ச்செல்வன் ஓ.பி.குப்தா அணியினருக்கு எதிரணியாக இருந்த 'கே.ஜி.போஸ் ' அணியில் இருந்தது, கே.ஜி.போஸ் கலைக்குழு என்ற பெயரில் கலைக்குழுவாக ஊர் ஊராகச்சென்றது, தொலைபேசித்துறையைச்சார்ந்த தோழர் மோகன்தாஸ் என்பவரது அமைதி, மார்க்சிய அறிவு போன்றவற்றைத் தொடர்ந்து எழுதிச்செல்கின்றார்.

தீக்கதிர் பத்திரிக்கை போடும் சங்கரப்ப நைனா மனதில் நிற்கின்றார். அவர் ச.தமிழ்ச்செல்வனிடம் சொன்னதாக வரும் " ஊர்ல கட்சிக்காரன் 100 பேர் இருக்கான். 20 தீக்கதிரை கொண்டு தள்ளுறதே பெரும் போராட்டமா இருக்கு. ஒழுங்கா துட்டும் தரமாட்டேங்குறான்.எனக்கு இதுதான் பெரிய டென்சன் .பயக சொல்றாப்பிலே நான் கோபப்பட்டு பேசறதனாலே எனக்கு வியாதியே கிடையாது. துட்டு பிரியலேங்கிறது கூட ஒரு விசயமில்லே .'துண்டு விழுந்தா பால்வண்ணம் குடுப்பாரு.சமாளிக்கலாம்.ஆனா பத்திரிக்கை படிக்கிற எண்ணிக்கையைப் பாருங்க. பத்திரிக்கைதான் கட்சி ஊழியருக்கு ஆசிரியன் அப்படின்னு லெனின் சொன்னார். இப்படி அக்கறையில்லாம எனக்கென்ன'ந்னு அலையிறானே , தீக்கதிர் படிக்காம எப்படி இயக்கம் வளரும் ? நம்ம லைன் என்னான்னு தெரியாம எப்படி வேலை செய்யப்போறான் ? " பக்கம் 59.
"உண்மையில் சோவியத் யூனியன் சிதறியபோது எனக்கேற்பட்ட அதிர்ச்சி ஒருபக்கம் இருக்க சங்கரப்ப நைனாவின் தலைமுறையைச்சேர்ந்த (கீழ்மட்டங்களில் பணியாற்றிய) தோழர்கள் எப்படி அதை எதிர்கொண்டார்கள் என்பதைப்பார்ப்பதுதான் எனக்கு அன்று பெரிய துயர்தருவதாக இருந்தது.கோர்பசேவ் இப்படிப்பண்ணிட்டானே தோழர் என்று கதறி அழுத தோழர்களை நான் பார்த்திருக்கிறேன். சொந்த வீட்டில் இழவு விழுந்துவிட்டதுபோல வாயில் துண்டை வைத்து அழுத தோழர்கள் உண்டு. ....அவர்கள் உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வீழ்ச்சி அது. தான் வேறு தன் சர்வதேச இயக்கம் வேறு என்கிற பேதம் அற்ற ஒரு சொந்த வாழ்வை அவர்கள் கொண்டிருந்தார்கள். மரம் செடி கொடிகள் பூப்பதையும் காய்ப்பதையும் போல இயக்க வேலைகள் என்பது அவர்களுக்கு உயிரியல் சார்ந்ததாக இருந்தது." என்று அடிமட்ட இயக்கத்தொண்டர்களின் உள்ளக்குமுறலை எடுத்துக்காட்டுகின்றார்.

குபதா அணி * போஸ் அணி க்கும் இடையில் ஏற்பட்ட தொழிற்சங்க மோதல்களை நிறையக் குறிப்பிட்டுள்ளார். போஸ் அணிப்பக்கமான நியாயங்களை சுட்டியுள்ளார். எனக்கு இதில் மாறுபட்ட கருத்து உண்டு. தொழிற்சங்கப் பணியில் அல்லது பொதுப்பணியில் இருக்கும் தோழர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் இன்னல்களை எடுத்துக்காட்டியுள்ளார். அவரவர் குடும்பங்களை அவரவர் சந்திக்கும் வலிமை இல்லை என்று சொல்கின்றார் .உண்மைதான். குடும்பத்தில் கணவனும் மனைவியும் பொதுப்பணியில், புரிதலோடு இருந்தால் பிரச்சனை இல்லை. சர்வதேசப்பிரச்சனையெல்லாம் மேடைகளில் முழங்கும் தோழர் , சொந்த வீட்டில் செல்லாக்காசாக மதிக்கப்படும் எதார்த்தத்தைப் பேசுகின்றார்.

" தொழிலாளி வர்க்கத்தின் அறியாமை என்னும் வண்டுதான் நாம் தேடி அளிக்க வேண்டிய ஒன்று. அது எளிதான காரியமல்ல. ஏழுமலை, ஏழு கடலெல்லாம் இருக்கிறது . பள்ளிக்கூடம் ஏற்படுத்தியுள்ள 'அறிவு' என்னும் கடலைத்தாண்டி , தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தாண்டி, மீடியாக்களைத் தாண்டி, சாமிகளைத் தாண்டி, சாதிகளைத் தாண்டி, ஆதிக்கக் கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள அழுத்தமான பொதுப்புத்தியை(common sense) த் தாண்டி ,வர்க்க சமரசத் தலைவர்களைத் தாண்டி நாம் அந்த வண்டைத் தேடிப் பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால் இன்று பெரும்பாலான தொழிற்சங்கங்கள் போராடும் குணம் மட்டும் போதும் என்கிற நினைப்பில் மெத்தனமாக இருப்பதால்- இருந்ததால்தான் மிகப்பெரிய பின்னடவை சந்திக்க நேர்ந்துள்ளது. தொழிற்சங்கப்பணி என்பது அவ்வளவு லேசானதல்ல. சந்தா பிரிப்பதும் ஸ்டிரைக் பண்ணுவதும் மட்டுமல்ல, வலி மிகுந்த நீண்ட நெடிய பயண்ம் அது " பக்கம் 69 -உண்மைதான். தொழிலாளி வர்க்கத்தை பிடித்துக்கொண்டிருப்பது அறியாமைதான். அந்த அறியாமையில் தலையாய அறியாமை சாதி உணர்வு. 1930-களில் அண்ணல் அம்பேத்கர் , 'சாதியை ஒழிக்க வழி ' என்னும் கட்டுரையில் , இந்தியாவில் புரட்சி வராது, உழைக்கும் தோழர்களை சாதிப் பெருமித உணர்வு ஒன்று சேரவிடாது என்றார். 100 ஆண்டுகள் கடந்த பின்பும் அதுதான் எதார்த்தமாக இருக்கின்றது. இன்று நவம்பர் -26. அரசியலமைப்புச்சட்டத்தில் தீண்டாமை என்று இருக்குமிடத்தில் சாதி என்று ஆக்கி, சாதியை இந்தியாவில் ஒழிப்பதற்காக தந்தை பெரியாரும் அவர்தம் தொண்டர்களும் 1957-ல் அரசியலமைப்புச்சட்டத்தை எரித்து சிறையேகிய நாள்:. 18 தொண்டர்களை பெரியார் இயக்கத்தினர் சாதி ஒழிப்புக்காக பலிகொடுத்த இயக்கத்தை துவங்கிய நாள். இன்னும் சாதிஉணர்வு ஒழிந்தபாடில்லை. உழைக்கும் தொழிலாளிகள் அனைவரும் ஒன்றிணைந்தபாடில்லை.

தோழர் பால் ராமச்சந்திரன் என்பவரை பக்கம் 84-85 களில் அறிமுகப்படுத்துகிறார். நெல்லையில் ந்டைபெற்ற ஒரு பயிற்சிப்பட்டறையில் கேரளத்திலிருந்து வந்த டாக்டர் எம்.பி.பரமேஸ்வரன் நடத்திய பாடம் பற்றியும் ச,தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகின்றார்.
" தோழர் பாலச்சந்திரனும் அப்பட்டறையில் இருந்தார். கடவுள் இல்லை என்பது அன்று ரொம்பத்தெளிவாக எல்லாருக்கும் விளங்கிவிட்டது. பால்ராமச்சந்திரனுக்கும் அது புரிந்துவிட்டது. ஆனால் அதை அவருடைய உடம்பே ஏற்க மறுத்தது. வியர்த்துக்கொட்டியது அவருக்கு. ஒரு துண்டால் துடைத்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி தண்ணீர் குடித்தார். நிறையக் கேள்விகள் கேட்டார். ஒரு பதிலிலாவது ' கடவுள் இருப்பதற்கு சிறிய வாய்ப்பு இருக்கிறது ' என்று பரமேஸ்வரன் சொல்லிவிடமாட்டாரா என்ற ஏக்கம் அவருடைய ஒவ்வொரு கேள்வியிலும் இருந்தது. பெளதீக சக்தியாக அவரைப் பிடித்திருந்த கடவுள் எனும் கருத்து, சந்திரவிலாஸ் ஓட்டலில் உடைந்து நொறுங்கிக்கொண்டிருந்ததை நான் பின்னால் உட்கார்ந்து கண்ணாரக் கண்டு கொண்டிருந்தேன்." (பக்கம் 85 ). ஒரு நம்பிக்கை அறிவியல் அடிப்படையில் நொறுங்கும்போது ஏற்படும் மாற்றத்தை மேற்கண்ட வரிகளில் மிகத் தெளிவாகக் கொடுத்துள்ளார் ச.தமிழ்ச்செல்வன்.

இந்தப் புத்தகத்திலேயே மிகவும் பிடித்த பகுதியாக சில சுய விமர்சனங்கள் இருக்கின்றன. அதனை இயல்பாகச்சுட்டிச்செல்கின்றார். தொழிற்சங்க இயகத்தில் கடவுள் மறுப்பு இருக்க வேண்டுமா ? என்னும் கேள்வி பலருக்கு எழுவதில்லை. கடவுள் பிரச்சனையைப் பேசவேண்டியதில்லை என்பதுதான் தொழிற்சங்கத்தலைவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. பெரும்பாலான தொழிற்சங்கத்தலைவர்கள் பார்ப்பனர்களாக இருந்ததால், இருப்பதால் அந்தக் கேள்வி எழவில்லையா? எழுப்பப்படவில்லையா ? என்னும் கேள்வி என்னைப் போன்றோருக்கு உண்டு. " நடவு செய்த தோழர் கூலி நாலாணாவை ஏற்பதும், உடலுழைப்பு இல்லாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும் கடவுளானை என்றுரைத்த கயவர் கூட்டமீதில், கடவுள் என்னும் கட்டறக்க தொழிலாளரை ஏவுவோம் " என்றார் புரட்சிக்கவிஞர் . " உடை வெளுக்கும் தோழரைக் கடவுள் முன்னேற்றுமா ? கழுதை முன்னேற்றுமா ? " எனக்கேட்டார். ச.தமிழ்ச்செல்வன் இந்தப்புத்தகதில் தொழிற்சங்கங்களும் கடவுள் நம்பிக்கையும் என்பது பற்றி மிகத்தெளிவாகப் பேசுகின்றார்.

" இன்றுவரை தொழிற்சங்க இயக்கங்கள் தங்கள் ஊழியர்களை கடவுள்களிடமிருந்து மீட்டெடுக்க எந்த முயற்சியும் அக்கறையுடன் எடுக்கவில்லை. இது பெரிய ஆபத்து என்று என் மனம் சொல்லிக்கொண்டேயிருக்கிறது. என்னிடம் ரெண்டுபேர் அகப்பட்டாலும் கடவுள் இல்லை என்பதை அவர்கள் மண்டையில் ஏற்றியே தீருவது என்று கடந்த இருபது ஆண்டுகளாக வைராக்கியமாக இருந்து வருகிறேன். தினசரி ஒரு ஆளையாவது குழப்பிவிடுவது என்கிற துடிப்பு இன்று வரை இருக்கிறது. .....கடவுள் மறுப்பை தொழிற்சங்க இயக்கம் கையில் எடுத்தே தீரவேண்டும் என்பது என் அழுத்தமான கருத்து. (பக்கம் 86) . இது மிக முக்கியமான கருத்தெனக் கருதுகிறேன். அரசு அலுவலங்களுக்குள் பிள்ளையார்கோவில் கட்டுவது , அதில் உயர் அதிகாரிகள், தொழிற்சங்கத்தலைவர்கள் கலந்து கொள்வது போன்ற சம்பவங்களையெல்லாம் சுட்டிக் காட்டுகிறார். மத விழாக்களுக்குப் பதிலாக கலச்சார விழாக்கள் தொழிற்சங்க இயக்கங்களால் நடத்தப்படவேண்டும் என்று சுட்டுகின்றார்.

சில் தோழர்களின் குணங்களை, நோய்களைப் பற்றியும் பதிந்துள்ளார். ஊத்துமலை ராமகிருஷ்ணன்( அத்தியாயம் 15), சி.சுப்பிரமணியன்( அத்தியாயம் 12), வயித்த வலி வி.எஸ்.கண்பதி( அத்தியாயம் 9),தோழர் பால்கந்தன் (அத்தியாயம் 18), தோழர் வானு போன்றவர்கள் நமது நினைவுகளில் நிற்கின்றார்கள். தன்னுடைய புத்தகத்தின் மூலம் தொழிறசங்க இயக்கத்திற்காகப் பாடுபட்ட பலரை வரலாறாக ச,தமிழ்ச்செல்வன் பதிந்திருப்பது பாராட்டத்தக்கது.

அம்பாசமுத்திரம் சென்றது, தியாகராசன் என்னும் தோழர் , முதல் போராட்டம், தயாரிப்பு என தன் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதிச்செல்லும் ச.தமிழ்ச்செல்வன் அறிவொளி இயக்கத்திற்கு சென்ற 5 வருடத்தில் ஒரு நாள் கூட தொழிற்சங்கப்பணி பார்க்கவில்லை என்று எழுதியிருக்கின்றார். பின்பு தொடர்ந்தது, நெல்லைக்கு மாற்றலாகிச்சென்றது, பேரா.தொ.ப. போன்றவர்களிடம் தொடர்பு ஏற்பட்டது என்பதையெல்லாம் எழுதிவிட்டு , மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் பிரச்சனையில் அநியாயமாக 17 தொழிலாளர்கள் தாமிரபரணி நதியில் பிணமாக மிதந்தது தன்னை எவ்வளவு பாதித்தது என்பதனை மிக உருக்கமாக எழுதியுள்ளார். முடிவில் விருப்பஓய்வு கொடுத்து விட்டு 2002-ல் அஞ்சல் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்ததை எழுதியுள்ளார்.

தன் வரலாறு என்றாலும் இந்தப்புத்தகம் ச.தமிழ்ச்செல்வனின் வரலாறு என்ற அளவில் நின்றுவிடவில்லை. பல விவாதங்களை எழுப்பியுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் தொழிலாளர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது என்பது இன்றைய மிகப்பெரிய சவால் என்று எழுதியிருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் அது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இலக்கியம் தொழிற்சங்கத்திற்கு அப்பாற்பட்டது கிடையாது, இன்னும் சொல்லப்போனால் இலக்கியவாதியாக இருக்கும் தொழிற்சங்கவாதி , இன்னும் கொஞ்சம் மேம்பட்டவனாக இருப்பான் என்று சொல்கின்றார்.
" மனித மனங்களை வெல்லுவதற்கான போராட்டம்தானே தொழிற்சங்கப்பணியும் ....தொழிலாளிகளை அரசியல்படுத்துவது என்பதின் மிக முக்கியமான பகுதியாக அவர்களை இலக்கியப்படுத்துவதை நாம் பார்க்க வேண்டும். மதவெறிக்கருத்துக்கள் எவ்வளவு அழகாக எவ்வளவு எளிதாக மக்கள் மனங்களில் பாய்கின்றன என்ப்தை உற்று நோக்க வேண்டும். ...." Writers and artists are the Engineers of the Minds " என்று ஸ்டாலின் சோவியத் நாட்டில் அன்றுபேசியதை இத்தோடு இணைத்துப்பார்க்க வேண்டும். எழுத்தாளர்கள் தொழிலாளி வர்க்கத்தோடு இரண்டறக்கலப்பது அவசியம்.அதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படவேண்டும். தொழிற்சங்க இயக்கம் இது குறித்தும் கவனம் கொள்ள வேண்டும். புத்தகங்களோடும் வாசிப்போடும் ஒரு பிரிக்க முடியாத பிணைப்பை தொழிலாளி வர்ககத்துக்கு ஏற்படுத்துவது நமது கடமை " பக்கம் 105.

" ஜிந்தாபாத் , ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத்.
வீரவணக்கம் ! வீரவணக்கம் !
சிக்காகோவின் தெருக்களிலே
இரத்தம் சிந்திய தோழர்களே !
வீரவணக்கம் ! வீரவணக்கம் " போன்ற முழக்கங்கள்தான் 1984-85 களில் கல்லூரியிலிருந்து வந்த என்னைப்போன்ற தோழர்களை தொழிற்சங்கப் பணிகளின் பக்கம் இழுத்தது. இன்னும் வேறு தொழிற்சங்கத்தைச்சார்ந்தவர்கள் அலுவலகத்திற்கு முன்னால் நின்று ஜிந்தாபாத் , ஜிந்தாபாத் என்றால்கூட நம்மையும் அறியாமல் , மனது அந்த முழக்கத்தைத் திருப்பிச்சொல்லும். உணர்வாய்க் கலந்த அந்த வார்த்தைகளைத் தலைப்பாக வைத்து, தொழிற்சங்கப்போராட்டத்தை, தொழிற்சங்கம் செய்ததை, தொழிற்சங்கங்கள் செய்ய வேண்டியதை சொல்லும் புத்தகம் இந்த "ஜிந்தாபாத் , ஜிந்தாபாத் " என்னும் புத்தகம் . கட்டாயம் படிக்கலாம். ச.தமிழ்ச்செல்வனின் நல்ல பதிவாக இந்தப் புத்தகம் உள்ளது.

எழுதியவர் : வா.நேரு (27-Nov-14, 11:14 am)
பார்வை : 116

சிறந்த கட்டுரைகள்

மேலே