சந்திரன் தோன்றாமலும் இரவுகள் அழகுதான்

வரப்பின் ஓரங்களில் பொருக்கியெடுத்த முட்கள் குத்தி, கிழிந்தொழுகும் செந்நிற விரல்களுக்கும், வயல்களின் வெடுப்புகளில் கானல் நீரலைந்து வெந்து போன பாதங்களுக்கும் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்தரைத்து பற்று போட்டநிம்மதியில்...

எம் மக்கள் உறங்கி கழிக்கும் இரவுகளில் கைகள் பேனாவை பிடித்துகொண்டு எதாகிலும் எழுதி தீர்க்க என்னை பணிக்கும். மனம் வேறொரு உலகில் வேறொரு நிலையில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும் எங்கிருந்தோ திரும்பிய மேகத்தின் ஈரத்துளிகள் பட்டு எதையாகிலும் எழுத ஆரம்பிக்கும் விரல்கள

தூரத்து உறவுகளெல்லாம் வந்திருந்து மகிழ்ந்த ஒரு தருணத்தில், எப்போதோ ஒருமுறை பார்த்துவைத்த திரைப்படத்தில் எவனோ ஒரு மகாநடிகன் காதலித்து எனக்கும் காதலை பற்றி சொல்லியிருந்தான். என்னையும் கவிதைகள் எழுத தூண்டியிருந்தன். அவன் சொல்லிவிட்டு போன வார்த்தைகள் எனக்குள்ளும் முளைத்திருந்தன காதல் காதலாய்...

முரட்டு பாவிகளோடு நாயகன் மோதும் காட்சியில் ரத்த சொட்டுகளை கண்டால் கண்ணீர் வடித்தபடி தேம்பியழும் நெஞ்சம், காதல் பாடல்களை கண்கொத்தி பாம்பாய் கவனித்தது எனக்கு. அழுதுவடித்த கன்னம் அறுந்து கிடக்கும் சட்டை முனையால் கண்களை துடைத்து விட்டுக்கொண்டு மீண்டும் காதல் காட்சிகளை பார்த்து ரசித்து கைதட்டியது.

மண்ணெண்ணெய் தீர்ந்து விளக்கொளி மங்கும் எத்தனையோ இரவுகளில் அண்ணன்களுக்கும் அக்காவுக்கும் தெரியாமல் யோசித்து யோசித்து காதல் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறேன். காதல் பாடல்கள் எழுத முயற்சித்திருக்கிறேன். காதலென்றால் என்னவென்றே தெரியாத பிஞ்சு நான் காதல் கவிதை எழுதியிருந்தேன் என் பத்து வயதில். அந்த கவிதையின் புலவன் நான்தான். அதன் அர்த்தம் என்னவென்று எனக்கும் தெரியாது.

வாரபுத்தக பக்கங்களில் முகம் காட்டி சிரிக்கும் எத்தனையோ நாயகிகளை நினைத்துதான் என் காதல் கவிதைகள் பெரும்பாலும் தத்தி நடக்க ஆரம்பித்தன. நவீன நடிகைகளின் நாகரிகமற்ற உடையலங்காரம் என் கவிதையை காதலின் தோட்டத்திலிருந்து பெயர்த்து போட்டுவிட்டது ஒருநாள். வருத்தம் மேலிட மனம் பரிதவித்து புலம்பியது.

காலங்கள் பொய்க் காதலை பிடுங்கிக் கொண்டு உண்மையை என்னிடம் தந்தது. பொய்மையில் ஊறி போன எனக்கு உண்மை விளங்குவதாயில்லை அப்போது. திரைப்படங்களில் நாயகனை கண்ட நாயகி வெக்கம் கொள்ளுவதெல்லாம் அப்போதுதான் நடந்தது. நாயகிக்கல்ல - எனக்கு. ஊர் சிரித்தது. காதலை புரட்டி புரட்டி பார்த்தேன். காதலிகளை மாற்றி மாற்றியும் பார்த்தேன். காதலுக்குதான் வலித்ததே ஒழிய எனக்கல்ல.

என் காதல்கள் நீரையும் நிலத்தையும் தான் அளந்தது. மரத்தையும் செடி கொடிகளையும் தான் கடந்தது. இயற்கையை ரசித்த அளவுக்கு இன்னொரு பெண்ணை நான் ரசிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். பெண்களை பாடுவதா காதல்?

வெப்ப மாத அனலை ரசித்தே பல கவிதைகள் பிறந்தது. மழைக்கால இரவுகளில் நனைந்தே பல கவிதைகள் பிறந்தது. கோடை விடுமுறையில் குளத்து நீரில் என் காதல் விளையாடி மகிழ்ந்தது. அம்மாவோடும் அப்பாவோடும் என் காதல் பசுமை வயல்களில் நாற்று கட்டுகளில் பிறந்திருக்கிறது.

நத்தை பிடிக்க அலைந்த நாட்களில், தாமரை பறிப்பதற்காய் ஓடிய தருணங்களில், அப்பாவோடு செங்கல் சூலைக்காய் மண் சுமந்த பொழுதுகளில் இன்னும் இன்னும் என் காதல் என்னோடே என் வழியெங்கும் பயணப்பட்டது.

சில காலங்கள் மாடு மேய்ப்பதர்க்காய் ஏரிக்கரைக்கு சென்ற போது மழைத்துளிகள் தெறிக்கும் தேக்கு மர சரிவில் காதல் பிறந்திருக்கிறது எனக்கு. அது போலத்தான் நண்பர்களோடு வனாந்திரங்களில் திரிந்த சமயங்களிலும் காதல் என் காலை பிடித்துக் கொண்டு அலைந்திருக்கிறது.

என்ன செய்ய? விண்மீன்கள் வரத்தான் வேண்டுமென்கிற அவசியமென்ன இரவுகளில்? விண்மீன்கள் இல்லாமலும் சந்திரன் தோன்றாமலும் இரவுகள் அழகுதான் என்பதை நானறிவேன்.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (27-Nov-14, 9:41 pm)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே