சனிப்பெயர்ச்சிப் பலன்

ஒளியாண்டுகள் கடந்து ஓடும் சனிபகவான்
நிலமீது வாழ்வை நிச்சயிப்பதை நம்புகிறாய்,
கோயிலில் அமைந்தஅவர் கோலச் சிலைவிட்டு
நாலடி தள்ளி நண்பா, விளக்கிட்டால் ஆகாதா?

ஆண்டெல்லாம் அங்கேயே ஆண்டவன் அமர்ந்திருக்க
ஆண்மீக நாளிதழ்கள் அரைகுறையாய்ப் படித்து
நாள்பார்த்து வந்து நசுக்கும் கூட்டத்தில்
ஆள்பார்த்துப் பாராது அவசரத்தில் அணிபுகுந்து

சண்டைகள் போட்டு சாமர்த்தியம் காட்டி
முன்னேறி முன்னேறி மூலவரை மூக்குரசி
கண்பார்க்க வென்று காலடியில் கரியாக்கி
எண்ணெயப் பிசுக்காக்கி எரியவிட்டு இறுமாந்து,

பின்னால் இருப்பவர்கள் பேறடையா வண்ணம்
உன்பாவக் கணக்கைமட்டும் உண்டியலில் சேர்ப்பித்துத்
தன்பாட்டுக்(கு) இயங்கும் சனியனை வம்புக்கு
நன்றாக இழுத்து நலமெல்லாம் பெற்றாயோ?

எடுத்தப் பிறவிக்கு ஏற்றம் செய்தாயோ?
கொடுத்த காசுக்குக் கோளவன் காப்பான்
அடுத்த ஆண்டிற்கு அவனிடம்வந்(து) இறக்க
அடுத்த ‘மூட்டை’யை ஆரம்பி, போய்வா!
*******************************************

நகைமுரண் கவிதையிதால் நாத்திகன் என்றென்னை
பகைமுரணிக் கொள்ளாதீர், பக்தர்காள்! பக்தன்நான்,
நெறிநின்று உள்ளம் நிமிர்த்தும் நெறியினன் நான்
அறிவகற்றா(து) அவனை அணுகும் அடியவன் நான்!

எழுதியவர் : விஜயநரசிம்மன் (22-Dec-14, 8:07 pm)
பார்வை : 187

மேலே