உடையாத நீர்க்குமிழி

கே.பாலச்சந்தர் -

திரைவானில் நீ ஏவிவிட்ட
கணைகள் யாவும் -இன்று
நட்சத்திரங்களாய்
ஒளிர்கின்றன !

கலையுலகில்
நீண்ட பெரும் மலைத்தொடரை
எழுப்பிவிட்ட சிகரம் நீ !
உன்முன்னால் கைகூப்பி
நிற்கும் இரண்டு மாமலைகள் !


புதுமைப்பெண்களை
புதுக்கவிதைகளாய் - திரையில்
படைத்து விட்ட நீ
பட உலகத்தின் பாரதி !

வறுமையின் நிறம் சிகப்பென்று
பொறுமையை விடச்சொல்லி -
இளைய தலைமுறைக்கு
எதிர்நீச்சல் கற்று கொடுத்தாய் !

தண்ணீர் ! தண்ணீர் !-என்ற
கண்ணீர்க் கூக்குரலை
வெள்ளித்திரையில் எதிரொலித்த
வற்றாத நீர் ஊற்று நீ!

உன்வயது
எண்பத்து நாலென்று
செய்தியிலே சொன்னபோது
நம்பவில்லை நாங்கள் யாரும் !

அச்சமில்லை ! அச்சமில்லை !-என்ற
பச்சை தமிழன் நீ -வானத்து
வெண்மீன்கள் குறைவென்று
அங்கேயும் புத்தம் புது
தாரகைகளை படைக்கப்
போய்விட்டாயோ !

ஒரு வெற்றிடம் உருவாக்கி
சென்றுவிட்ட உன்னை எண்ணி
கலையுலகம் வடிக்கும்
கண்ணீர்க் கடலில் -
என்றுமே உடையாத நீர்க்குமிழி நீ !

எழுதியவர் : ஜி ராஜன் (24-Dec-14, 11:34 am)
பார்வை : 158

மேலே