===+++தமிழனின் சிந்தனைக்கு+++===

அன்று மும்மாரி பொழிந்தது வானம், இன்று மாதம் ஒருமுறை மழை வருவதே முற்றிலும் அரிதாகிவிட்டது. எப்பொழுதும் நிரம்பி வழிந்த ஆறுகள் வறண்டு போய்கிடக்கின்றன, சில ஆறுகள் இருந்த இடமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன, சில ஆறுகள் கழிவுநீர் குட்டைகளாகி கிடக்கின்றன. குளம் குட்டைகளும் தூர்ந்துபோய் குப்பைமேடுகளாகிவிட்டன. ஏரிகளும் வறண்ட கழிப்பிடங்களாகிவிட்டன. இப்படி இருக்கையில் மனிதனின் வாழ்க்கைநிலை எப்படி நலமானதாகவோ வளமானதாகவோ இருந்துவிட முடியும்?.

உலகிற்கே முதல் தேவையும், மூலதேவையும் உணவுதான் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. அந்த உணவுப் பொருள்களுக்கெல்லாம் மூலப் பொருளும் மிக மிக முக்கியமான பொருளுமாக இருப்பது தண்ணீர்தான் என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது. ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என்ற பேராசையில் பணத்தை தேடி அலைந்துகொண்டு இருக்கிறான். இந்த நிலையில் தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப்போர் மூளும் என்று நினைக்கையில் இவன் அரிசியைத்தேடி அலையப்போகிற நாள் ரொம்ப தொலைவில் இல்லை என்பதை எண்ணி இப்பொழுதே உள்மனம் ஓலமிடுகிறது.

வருகிற அரசியல் தலைவர்கள் நாட்டை உயர்த்துகிறோம் என்று கூறி, இயந்திர தொழிற்ச்சாலைகளையும், அணு உலைகளையும், அந்நிய கெமிக்கல் கம்பனிகளையும் வளர்த்துகொண்டு இருக்கிறார்கள். ரசாயன உரங்களின் ஊடுருவலுக்கு பரந்த மனசோடு பச்சைக்கொடி காட்டி, பொன்விளையும் பூமியினை மலடாக்கிகொண்டு இருக்கிறார்கள். இவர்களா நாட்டை காப்பாற்ற போகிறார்கள்? அது இவர்களால் முடியாத காரியம் என்பதற்கு தொடர்ந்து அவர்களின் செய்கைகளே நமக்கு ஆதாரங்களாகிகொண்டு இருக்கின்றன.

எமது பாட்டன் காலத்தில் ஏத்தம் கட்டி நீரிறைத்து, யானைகட்டி போரடித்து விவசாயத்தில் தன்னிறைவு கொண்டிருந்த தமிழகம், இன்று கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாகி வந்துகொண்டு இருக்கிறது, விளைநிலங்கள் வீடுகளாகவும், சொகுசு மாளிகைகளாகவும் மாறிவிட்டன, விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் கன்னித்தீவு கதையைப்போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தூர்ந்து போன ஏரிகளையும், குளங்களையும் தூர்வாரி, நதிகளை சீரமைத்து, வங்ககடலிலும், அரபிகடலிலும் வீணாக போகும் நீரை சேமிக்க அரசு முனைப்பு காட்ட முற்றிலும் தவறிவிட்ட நிலையில் இருக்கிறது. அலக்நந்தா நதியும், பாகீரதி நதியும் மேற்கு தொடர்ச்சி மலையில் பிறந்து அங்கிருந்து வந்து இரண்டு நதியும் ஓரிடத்தில் சங்கமித்து பிறகு கங்கையாக உருவெடுத்து வருகிறது. இந்த வற்றாத உயிர்நதியானது வட இந்தியாவோடு தனது பயணத்தை முடித்துகொண்டு கடலில்போய் விழுந்துவிடுகிறது, சீனாவையும் பாக்கிஸ்தானையும் வளபடுத்திகொண்டு இருக்கின்ற சிந்து நதி காஷ்மீரைவிட்டு கீழிறங்க வழியின்றி சென்றுகொண்டு இருக்கிறது. சிந்துவை கங்கையில் இணைத்து, கங்கையை காவிரியில் இணைத்து நாட்டை வளபடுத்த எந்த ஒரு முனைப்பு வழியும் இங்கே இல்லை என்பது உறுதிப்பட்டு கிடக்கிறது.

வருடா வருடம் வெள்ள எழுச்சியின் காரணமாக வட இந்தியா நாசபட்டு போகிற நிலை தொடர்ந்துகொண்டு இருக்கும் போதிலும், அந்த வெள்ளநீர் கீழிறங்கி தென்திசை வர இயலவில்லை, அது வருவதற்கான வழியுமில்லை, ஆகையினால் தென்னிந்தியாவான தமிழகம் தண்ணீர் பிச்சைகேட்டு தவித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழனின் வீழ்ச்சி இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்ற பொருளையே நமக்கு உணர்த்துகிறது. ஒரு மாநிலத்தின் வீழ்ச்சி ஒரு நாட்டின் வீழ்ச்சி, ஒரு மாநிலம் குடிநீருக்காக தவிப்பது ஒரு நாட்டின் தவிப்பு என்பதை உணராதவரை சனநாயகமும் சமதர்மமும் எப்படி நிலைத்திருக்க முடியும்.

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கீழிறங்கி வருகிற நீர், இந்தியாவின் கடைசிகோடி நிலபரப்பாக கீழ்மட்டத்தில் உள்ள தமிழகத்திற்கு வந்துசேரவில்லை, அந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது, இதைப்பற்றி யாருமே கவலைப்படவில்லை. ஆனால் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் மட்டும் பேசப்படுகின்றன. மழையே பொய்த்து போய்விட்ட நிலையில் என்ன செய்யமுடியும்.

முன்பொரு காலம் நமது முப்பாட்டன் கடல்கடந்து சென்று பலநாடுகளை ஆண்டுவந்தான். இன்று தமிழனின் பெருமையும், வராலறும் மூடிமறைக்கப்பட்டுவிட்டன, தமிழன் வாழ்வாதாரங்களை இழந்துகொண்டு இருக்கிறான். கரிகால் பெருவளத்தானும், இராசராச சோழனும் உலகையே கதிகலங்க வைத்த வரலாறெல்லாம் விட்டுவிட்டு, நாம் வேறு எந்த வரலாறுகளையோ புரட்டிக்கொண்டு இருக்கிறோம்.

இன்று தண்ணீருக்காக பிட்ச்சைகேட்கும் நமக்கு அன்றைய தென்னிந்தியாவின் அலக்சாண்டர் என்று போற்றப்பட்ட நமது பாட்டன் ராசேந்திர சோழனை நினைத்தால், நமது இயலாமையை எண்ணி உள்ளம் குமுறுகிறது. இந்தியாவை மட்டுமல்ல கடல்கடந்த பலநாடுகளையும் கதிகலங்க வைத்தவன் இராசேந்திர சோழன்.

சீதையை மீட்க வானரங்களின் துணையோடு பல நாட்கள் கடினமாக உழைத்து கடலில் பாலம் கட்டினான் ராமன் என்ற ஆரிய புராணகதையை என்றும் மறக்காமல் பேசுகின்ற நீங்கள், பாண்டிய நாட்டின் மணிமுடியை மீட்க கடலில் ஆயிரக்கணக்கான படகுகளையும் கப்பல்களையும் வரிசையாக நிறுத்தி அதையே பாலமாக்கி தனது படைகளோடு இலங்கைக்குச் சென்று மகிந்தனை வென்று பாண்டிய மணிமுடியை மீட்ட நமது பாட்டன் ராசேந்திர சோழனின் வரலாற்றினை யாராவது நினைத்து பார்க்கிறீர்களா?

இன்று தண்ணீருக்காக கேரளத்திடமும், கர்நாடகத்திடமும், டெல்லியிடமும் கையேந்தி கிடக்கிறோம். ஆனால் நமது பாட்டனும் முப்பாட்டனும் அப்படி இருந்தார்களா இல்லையே... அப்படியானால் நாம் நமது நிலை தாழ்ந்து கிடக்கிறோம் என்ற உண்மை வெளிச்சமாகிறது.

கடாரத்த்தை வென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு மட்டுமல்ல நமது புகழ். மேலை சளுக்கர்களை வென்று, அதற்கு மேல் இடைப்பட்ட நாடுகளையும் வென்று, சீறியோடிய கங்கையை கடக்க, கங்கையின் இக்கரையில் இருந்து அக்கரைவரைக்கும் யானைகளை வரிசையாக நிறுத்தி, யானைகளையே பாலமாக்கி தனது படைகளோடு கங்கையை கடந்து சென்று, வங்கதேசத்தை கைப்பற்றியதோடு அல்லாமல் நூற்றுக்கணக்கான யானைகளின் மீது, பெரிய பெரிய பானைகளில் கங்கைநீரை தமிழகத்திற்கு எடுத்துகொண்டு வந்து கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவியவன் நமது பாட்டன் ராசேந்திர சோழன் என்பதை நினைத்தால், இன்று தண்ணீருக்கு பிட்ச்சைகேட்கும் நமது இயலாமை நம்மை கொன்று தின்னாமல் இருந்துவிடுமா? உண்மையானத்தமிழன் நிச்சயம் கூனிக்குறுகித்தான் போவான் என்பதில் சந்தேகமில்லை.

நான் ஏதோ உளறுகிறேன் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நமது வரலாற்று கவிஞர்களின் சான்றுகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

கங்கா நதியும் கடாரமும் கைகொண்டு
கங்கா புரிபுரந்த கற்பகம்
கங்கா நதியும் கடாரமும் கைகொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியர் கோன்.

--------------------------------ஒட்டகூத்தர்

களிறு கங்கைநீர் உண்ண, மண்ணையில்
காய்ச்சினத் தோடே கலவு செம்பியன்
குளிறு தெந்திரைக் குரை கடாரமும்
கொண்டு மண்டலம் குடையுள் வைத்தவன்.

------------------------------சயங்கொண்டார்

அன்றே கங்கையை நாம் வென்றவர்கள், இன்று கங்கையை காவிரியோடு இணைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். அதை செய்ய முடியாதென்றால் நமக்கு குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தேவையான தண்ணீருக்கு அரசு ஏதாவது ஒரு நிரந்திர தீர்வினை தரவேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.


=================நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (29-Dec-14, 1:51 pm)
பார்வை : 3271

சிறந்த கட்டுரைகள்

மேலே