சாதி ஒழி மதம் ஒழி சாதி - பொங்கல் கவிதை போட்டி-2015

மதங்கள் என்றுமே மனிதநேயம் வளர்க்கத்தான் ;
பண்பையும் அன்பையும் அவனியில் விதைக்கத்தான் ;
மதங்களின் முகமூடியிட்டு இங்கு சாத்தான்கள்
பகைமையும் வெறுப்பையும் மட்டுமே விதைத்தன !
அந்த நச்சுப் புதர்கள் பெருங்காடாய் மாறியின்று
மலர்வனங்களையும் கனிமரங்களையும் அழித்தன !

மானுட மனதின் மாய நீரோட்டத்தை
சீர்படுத்தவே மதங்களின் கரைச்சுவர்கள் !
அந்த சுவர்களின் கற்களை பறித்தெடுத்து
நாட்டின் எல்லையை தீர்மானிக்கிறார்கள் !
மனிதர்களை சிதறடிக்கும் ஜாதிகள் !
மானுடத்தை வேட்டையாடும் உட்பிரிவுகள் !

யுகங்களாய் ஒடுக்கப்பட்ட மானுடர்க்கு
நீதி செய்ய தேவையாயின ஒதுக்கீடுகள் !
ஒதுக்கீடு வேண்டியின்று பரண் மேலிருந்த
ஜாதிகள்கூட கட்சி முலாம் பூசப்பட்டு
காளான்களாய் தினம்தினம் முளைவிட
ஒடுக்கப்பட்டவன் இன்றும் தடுப்புக்குள்தான் !

எம்மதமும் சம்மதம் என பக்குவப்படும்வரை
நம்வீட்டுக்குள்ளே இருக்கட்டும் மத நம்பிக்கைகள் !
வீதிக்குள் நீள வேண்டாம் மத யானை தும்பிக்கைகள் !
உங்கள் பிள்ளைகளுக்கு சாதிகளைவிட்டு
சாதிக்கக் கற்றுகொடுங்கள்; கல்வியும் காதலும்
காலத்தோடு சேரும்போது மாய்ந்திடும் இந்த அவலங்கள் !

எழுதியவர் : ஜி ராஜன் (6-Jan-15, 1:24 pm)
பார்வை : 122

மேலே