திரைப் பறவை 7

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதன் "எர்னெஸ்டோ சேகுவேரா"

வெயிட்டர் சால்ஸ் இயக்கிய " தி மோட்டார் சைக்கிள் டையரிஸ் "(2004) என்ற படம் இரு நண்பர்களின் பயணத்தை முன் வைக்கிறது....... விடுமுறையைக் கொண்டாட தன் அண்ணனின் நண்பன் ஆல்பர்டோவுடன் (தனக்கும் நண்பனே) ஒரு பைக்கில் லத்தின் அமெரிக்கவை சுற்றி வர தீர்மானித்து கிளம்புகிறார்.....வீட்டில் இருந்து கிளம்பும் போது.. வாசலில் சே வின் குடும்பமே கட்டி அனைத்து கை அசைத்து வழி அனுப்பி வைக்கிறார்கள்....... வீட்டைத் தாண்டும் வளைவிலேயே எதிரே வரும் ஒரு லாரியில் பைக் மோதப் பார்த்து பின் சமாளித்துக் கொண்டு செல்கிறது...... அந்த ஆரம்பமே சே வின் வாழ்வை பற்றிய எதிர்கால குறியீடாக ஒரு மிகப் பெரிய யுத்தத்தை தனக்குள் பொதிந்து வைத்திருப்பதாக காலம்....மௌனம் காக்கிறது.............

தன காதலியை சந்தித்து அவள் வீட்டில் தங்கி அந்த இரவைக் கழித்து விட்டு .. பின் பிரிய மனமில்லாமல் முத்தமிட்டு பிரியும் வேளையில் காதலின் துயரம் எத்தகையது என்று அடுத்த காட்சியில், நண்பன் பைக் ஓட்டும் போது சோகமான முகத்துடனும் கனத்த மனதுடனும் பின்னால் அமர்ந்து இருக்கும் சே..... இளமையின் வலியான காதலை தன் பயணங்களால் தெளித்துக் கொண்டே செல்கிறார்............

இடையினில் பைக் ரிப்பேர் ஆகி நிற்க, குளிருக்குள்.... தூரத்தில் தெரியும் ஒரு வீட்டிற்கு சென்று இன்று ஒரு இரவு மட்டும் தங்கிக் கொள்ள அனுமதி கேட்கும் போது, இலக்கு இன்னும் எத்தனை தூரம் இருக்கிறது.... இலக்கை அடைய இன்னும் எத்தனை சிரமப் பட வேண்டி இருக்கிறது.... என்று ஒரு மூடு பனி நம்மை பயமுறுத்துகிறது....

சிலி ,அத்தனை குளிர் நிறைந்த பிரதேசம்..... ... பனிக்குள் உறைந்து நிற்கும் இடங்களில் பயணங்கள்.... வெள்ளை முகமூடி அணிந்து கொண்டு வழி விட மறுக்கிறது.....

ஒரு கட்டத்தில் பைக்கை விற்று விட்டு மீண்டும் பயணத்தை தொடரும் போது.....இந்த பையன் விளையாட்டுப் பையன் இல்லை என்று யோசிக்கிறோம்.... சிறு வயது முதலே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட ஒரு ஆள் இந்த சே...

அவ்வப்போது மூச்சு விட முடியாமல் துடிக்கும் காட்சியில்.... இப்படிப் பட்ட ஒரு ஆள் எப்படி துப்பாக்கி தூக்கிக் கொண்டு சண்டை போட்டு கியூபா விடுதலைக்கு துணை நின்றுப்பார் என்று ஐயம் வருவதைத் தடுக்க முடியவில்லை.... சே வின் மனநிலையை கணிக்கத் தொடங்க வேண்டிய இடம் இது தான்.......

தொழு நோய்.... மருத்துவமனையில் பாதி (படித்துக் கொண்டிருக்கிறார்) மருத்துவனாக சேவையில் ஈடுபடும் காட்சியில்..... சே வின் விரல்களில் துப்பாக்கி மட்டுமல்ல..... உள்ளத்தில் ஆத்மாக்களே அமர்ந்திருக்கின்றன.... என்பதைப் புரிந்து கொள்ள முடியும்..

எல்லா மருத்துவர்களும் கை உரை அணிந்து கொண்டு தொழு நோய்க்காரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது சே வெறும் கையுடன் துணிந்து மருத்துவம் பார்க்கையில்.... தொழு நோய்க் காரர்களின் மன நிலையில் ஒரு நம்பிக்கை பிறக்குமே......அங்கு இரண்டாம் முறையாக சே வின்... மானுடம் விதைக்கப் படுகிறது....முதல் முறை விதைக்கப் படும் மானுடம் எப்போதும் சரியாக கணக்கில் வருவதில்லை....சே வுக்கும் வரவில்லை......நிஜம் பேசும் தருணம் ஆகட்டும்..... மூச்சுக்கு போராடும் இடமாகட்டும்.... மிகப் பெரிய போராட்டத்தை எதிர் கொள்ள தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார் என்று யூகிக்க முடிகிறது...தன் நண்பன் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் போது தன் பயண அனுபவத்தை தன் நாட்குறிப்பில் எழுதிக் கொண்டிருக்கும் சே.. வின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக விரியத் தொடங்கத் தொடங்குவதை நாம் உணர தொடங்குகிறோம்....

நிலக்கரி சுரங்கத்தில் கூலியாக வேலை செய்யும் மக்களைப் பார்க்கையில் தான் வாழ்வின் போராட்டம் புரிகிறது.... ஒரு வேளை உணவு என்பது லத்தின் அமெரிக்க மக்களுக்கு சாதாரண விஷயம் அல்ல என்று உணருகிறார்.........

"நீ வா.. நீ வா.. நீ வா... நீ. நீ.. நீ... சரி........ மற்றவங்க எல்லாரும் போலாம்" என்று சொல்லி விட்டு... வேண்டிய ஆட்களை ஆடு மாடுகள் போல பணம் படைத்தவன் தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு போகும் போது தான் உலக சமதர்மம் பற்றிய யோசனை பிறக்கிறது.......முதல் முறை கேட்ட கேள்வி உதாசீனப் படுத்தப் பட்ட போது தான் கேள்வியின் வீரியம் புரிகிறது..... தொடர் கேள்விகளால்...... சே வின் வெளி உடைகிறது......இந்த பூமி பொதுவானது... அதை எப்படி ஒரு சாரர் மட்டும் உரிமை கொண்டாட முடியும்.. என்று அடிமடியிலேயே கை வைக்கும் சிந்தனை வெளி வருகிறது..... சித்தாந்த தேடலில் எல்லாம் பொதுவானது என்று சீறிடும் பேனாவில் எழுதத் தொடங்குகிறார்....

பேனா பிடித்த கையில் துப்பாக்கி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை..... நண்பர் ஒருவர் மூலம் பிடல் கேஸ்ட்ரோவின் அறிமுகம் கிடைக்கிறது ...... ஆழ் மனதுக்குள் அரித்துக் கிடந்த அத்தனை கேள்விகளுக்கும் அங்கே பதில் கிடைக்கிறது... ஆல்பர்டோ வீடு திரும்ப சே காட்டுக்குள் பயணிக்கிறார்..... அதன் பிறகு சே வை ஒரு மாமனிதனாக நீண்ட வருடங்களுக்குப் பின் தான் நெருங்கவே முடியாத ஒரு சிங்கத்தைப் போல தான் கண்டதாக ஆல்பர்டோ கூறுவதாக படம் முடிகிறது.....

அதன் பிறகு நடந்தது தான்.......ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சே வின் .புரட்சி.....

புரட்சிகள் எப்போதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன..... பூனை கொண்ட மதில் கூட புரட்சியின் ஆயுதமே.......

விடுதலை..... அது தரும் உணர்வை சொல்ல ஒரு காற்றிடம் கதை கேட்கும் எதிர்க்காற்றாய் இருக்க வேண்டும்........ அது உயிர் கொண்ட மொழியின் மறு பார்வை... என்னை அடைத்து வைக்க யாருக்கும் உரிமை இல்லை.... ஒரு மனிதனை பிடித்து சித்திரவதை செய்ய இன்னொரு மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது...கேள்விகளால் துளைக்க தோட்டாக்கள் இல்லாத போது கிடைக்கின்ற ஒவ்வொரு சிறு துரும்பும் தோட்டாக்களே என்று திகிலோடு என்னை இருக்கையின் நுனியில்.... இல்லாமலே செய்த பிரென்ச் படமான "எ மேன் ஏச்கேப்டு"(1956) கருப்பு வெள்ளையில்..... அட்டகாசப் படுத்திய படம்.....

சிறைக்குள் அடைபட்ட ஒரு போராளி.... தன மூளையை மட்டுமே நம்பி சிறை தாண்டி தப்பித்து வருவதே படத்தின் முழுக் கதை..... ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் அபாரமாக செயல் படும் கதையின் ஹீரோவின் மனமும்.. ஆற்றலும்.... யோசனையும்.. அபாரம்....
சக கைதிகளின் ஏளனப் பார்வையும்.... ஆறுதலும்.... நம்பிக்கையும்... நம்பிக்கையின்மையும்..... எல்லாமும் தவிர்த்து தன் நோக்கம் மட்டுமே வட்டமாய் சுழலும் கழுகின் பார்வையைப் போல கூர்ந்து கூர்ந்து...... ஆழ்ந்து குவியப்படும் வேளையில்... நான் கண் சிமிட்டவே இல்லை..... சிமிட்ட விடவே இல்லை அடுத்ததடுத்த காட்சிகளின் கோர்வை..... கிடைக்கின்ற கரண்டி முதல்... கட்டிலில் பதிந்துள்ள கம்பிகள் வரை... படுக்கையில் உள்ள நார்கள் முதல்....தனக்கு கிடைத்த துணிகள் வரை அனைத்தையும் கிழித்து லாவகமாக மடித்து திரித்து கயிறாக மாற்றும் போது.... மனிதனின் பரிணாமம் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க வைத்தது.. முதல் முறை மனிதன் கயிறு இப்படித்தான் செய்திருப்பான் போல என்று திகைக்க வைத்தது..... கிட்டத்தட்ட காவல்காரர்களின் சந்தேகம் கதை நாயகன் மீது விழும் சமயம், இனியும் தாமதித்தால் மாட்டிக் கொள்வோம் என்று மனதுக்குள் மணி அடிக்க அன்று தப்பித்து விடலாம் என்று திட்டம் போடுகிறான்...... ஆனால் அன்று ஒரு சிறுவனை அந்த அறையில் அவனுடன் தங்க விட்டு விடுகிறார்கள்....
"என்ன செய்வது..... சொல்லலாமா..? வேண்டாமா....!... இன்று விட்டால் நாளை நடக்கும் அறை சோதனையில் தயாரித்து வைத்திருக்கும் தப்பிக்கும் யோசனையை.... உதவும் பொருட்கள் காட்டிக் கொடுத்து விடும்..... என்ன செய்வது.... இவனோ சிறுவன்..... எப்படி புரிய வைப்பது......"-
இனி வேறு வழி இல்லை... இரவுக்குள் சிறை மிதக்கத் தொடங்குகிறது.. கதையை திறந்து விட்டான் கதை நாயகன்..
சிறுவனோ.. பயந்தபடியே எனக்கும் சம்மதமே என்று கூறுகிறான்..... அவன் கண்களில் வாழ்வதற்கான இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்து விடுமா என்ற ஏக்கம்.... நிறைந்து திறக்கிறது.....

கதை நாயகனுக்கு உள்ளுக்குள் நடுக்கம் இருந்தாலும்.... தியானம் செய்வது போல.... அவனின் எதிர்கால வாழ்வை நினைத்துப் பார்த்து, நினைத்துப் பார்த்து... மனதை திடப் படுத்துகிறான்.... இந்த உலகின் அவன் மட்டுமே இருப்பது போல அவனைச் சுற்றி ஒரு வட்டம் உணர்கிறான்... தப்பித்தே ஆக வேண்டும்.. மீறி மாட்டிக் கொண்டால் மரணம் மட்டுமே.. அதில் எவ்வித மாற்றமும் இல்லை.... நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறது......சரி.. கிளம்பு என்று நகரத் தொடங்குகிறார்கள்..... இனி இதயம் பலகீனமானவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது... ரத்தமில்லை.. சத்தமில்லை... இசை கூட அவ்ளவாக இல்லை ... வெறும் நகர்வுகள் மட்டுமே..... அப்பப்பா...... நான் திரைக்குள்ளேயே சென்று விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்... கண்களில் கண்ணீர் திரண்டு நிற்கவே ஆரம்பித்து விட்டது.... அது விழுந்தால் கூட... காட்சி மாறி விடுமோ என்ற ஒரு மாய காட்சி என்னை மூடு மந்திரமாய்.... தந்திரம் செய்யத் தொடங்கியது.........10 நிமிடத்துக்கு ஒரு முறை சிறைசாலையை ஒட்டி இருக்கிற தண்டவாளத்தில் ரயில் போகும்... அப்போது வரும் சத்தத்தில் அவர்கள் வேகமாக ஆனால் பூனை போல நடக்க வேண்டும்..... ரயில் போய் விட்டால் அடுத்த ரயில் வரும் வரை... சுவரோரம் ஒடுங்கி... நடுங்கிக் கொண்டே நிற்க வேண்டும்.. அப்போது சைக்கிளில் ரோந்து வரும் காவல்காரன் கண்ணில் மாட்டாமல் பதுங்க வேண்டும்.. தோளில் கனத்த கயிறு வேறு......

அதிகாலை மணி 4.....
என்ன செய்வதென்றே தெரியாமல் கடைசி கட்டடத்தைத் தாண்டவா.. வேண்டாமா.....? மாட்டிக் கொள்வோமா..! என்று திக் திக் நொடிகளில் அமர்ந்திருக்கிறார்கள்....ரயில் வருகிறது........இதோ இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் படம் முடியப் போகிறது . ரயில் போய்க் கொண்டிருக்கிறது......
ஸ்லொ மோஷனில் ராம்கியும் நிரோஷாவும்.... ரயிலின் கடைசிப் பெட்டியை பிட்த்து விட ஓடும் காட்சி... தமிழ் சினிமாவில் மறக்க முடியாத குறியீடு... தரத்தில் அடுத்த இடத்துக்கு கொண்டு சென்ற பெருமை தயாரிப்பாளர் ஆபாவாணன் அவர்களைச் சாரும்....

கதை ஆபாவாணன் எழுத இயக்கம் பி ஆர். தேவராஜ்.
செந்தூரப் பூவே (1988) ஒரு காதல் கதை.. அதில் எத்தனை வேகம்.. விறுவிறுப்பு.... ரயில் காட்சிகள் அனைத்தும் உலகத் தரம்....
கடைசிப் பெட்டியில் நின்று கொண்டு சந்திரசேகர்.. வாங்க வாங்க.. என்று கத்தும் காட்சியில் இருக்கையில் இருந்து எழுந்து ஓடி போய் அவர்களுக்கு கொஞ்சம் உதவி செய்து விடலாமா என்று கூடத் தோன்றும்... இதில் அடியாட்கள் வேறு ராம்கியை ஓட விடாமல் துரத்திக் கொண்டு சண்டையிட அவர்களையும் சமாளித்து.... நிரோஷாவையும் பெட்டியில் ஏற்றி விட வேண்டும்.... அத்தனை உயரத்தில் ராம்கி கம்பீரம்... ஓடும் போது ஸ்லோ மோஷனில் முடி மேலும் கீழும் ததும்பும் காட்சியில்.... அமர்ந்தபடியே நாமும் ஓடுவது போல ஒரு பிரமை வரத்தான் செய்கிறது...

ஒரு வழியாக பெட்டியில் ஏறி விட்டு....... அதன் பிறகு அவர்களின் பார்வை தூரத்தில் ஏதோ ஒரு புள்ளியாய் நகர்ந்து வரும் ஒன்றின் மீது பட்டு...... கேப்ப்ப்பப்பட்டன்......(அன்றைய கேப்டன்....) என்று கத்தும் போது.... தியேட்டரே கதி கலங்கும்.....இசை இந்த இடத்தில்.... அத்தனை அட்டகாசப் படுத்தியிருக்கும்.....மனோஜ் கியான் அத்தனை அற்புதமான இசை அமைப்பாளர்....... ரயில் சத்தத்துக்கும் அந்த நேர இசைக்கும் கேப்டனின் ஓட்டத்துக்கும், சண்டைக்கும்.... அப்டியே..... அந்த 20 நிமிடங்கள்..... உலகம் மறக்கச் செய்யும்.... காட்சி அமைப்புகள்.... எந்த வித தொழில் நுட்பங்களும் அவ்வளவாக இல்லாத அந்த கால கட்டத்தில் இப்படி ஒரு ரயில் சேஸிங் காட்சி....... பிரமிப்பு......

செந்தூரப் பூவே பாடலில் தொடங்கும் காதல்... ஆத்துக்குள்ளே ஏலேலோ செண்பகப் பூ..... அகிலகிலா.....வில் கண்கள் பார்த்து... சின்ன கண்ணன் தோட்டத்துப் பூவாக என்று வளர்ந்து நிற்கும் காதலை இன்னும் சில நாட்களில் சாகப் போகும் கேப்டன் சேர்த்து வைப்பது தான் படம்... ஆனால்.. திரைக் கதையில், காட்சி அமைப்பில்... கிளாசிக் படமாய் கண்ணுக்கு விருந்தளித்திருப்பார்கள்......ராம்கி நிரோஷா.... அத்தனை பொருத்தம்... நெருக்கம்.... (இந்த படத்துக்கு பின் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்....)

இந்தப் படத்தை நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் போது பார்த்தது... அப்போதே ராம்கி போலவே உடை அணித்து கொண்டு தலையை அப்படி இப்படி என்று சிலுப்பிக் கொண்டு செல்ல.... எனக்கும் ஒரு நிரோஷா கிடைத்தாள்.. பேர்... கிரேஸ் மேரி.....(அது தனிக் கதை) என் சிறுவயது நினைவுகளைக் கிளறி விட்டதில் இந்த படம்.. ஆத்மார்த்தமாக எனக்கு மிகவும் நெருக்கமான படம்.... இடைவேளை காட்சியில் அவர்களோடு சேர்ந்து நனைந்த தத்ரூபம்..... இன்றும் ஆழ்மனதில் சலசலக்கிறது.......... நீரோடையின் பின்னோட்டமாக..... கால் நனைத்த மனதுக்குள் கை விரித்த கண்களாக... காற்றும் கவிதையும்... காலத்தோடு நகரும் கண் கொள்ளா நினைவுகளை இந்தப் படம் எனக்குள் மிதக்க விடுகிறது என்னையே.....
இப்போது மீண்டும் ஒரு முறை இந்தப் படத்தைப் பாருங்கள்..... இது கூட ஒரு விடுதலையின் வேட்கை தான்... சித்தியின் கொடுமையில் இருக்கும் ஒரு பாவப் பட்ட ஜீவனுக்கான விடுதலையை நிர்ணயிக்கும் பாடம்.. வில்லி...யாக நம்ம விஜயலலிதா.....வெளுத்து வாங்கியிருப்பார்.... எப்பவும் போல - (இங்கு கண்ணடிக்கும் பொம்மை)

காதலின் வலிமை..... உணரச் செய்த படங்களில் இதுவும் ஒன்று.... எத்தனை போராட்டங்கள் வந்த போதும் பிடித்த கையை விடாமல் இருப்பதில் (இன்று வரை) ராம்கி ஒரு முன்னுதாரணம்.....
வெண்ணிற ரோஜா தன்னிறம் மாறி மாலை சூடுதோ..... அந்த வானம் பூக்களைத் தூவாதோ...... புது வாழ்த்துக் கவிதைகள் பாடாதோ.....



திரை விரியும்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (7-Jan-15, 10:59 am)
பார்வை : 172

சிறந்த கட்டுரைகள்

மேலே