திரைக்கதைதிரைப் பறவை 11

"ஒரு பார்வைதான் பார்த்தாள்..... உயிர் உருண்டு விளையாடுவதைக் காண்கிறேன்......."

இதை ஒரு கதையாக.... நான் இங்கு எழுதியது போலவே எழுதி விடலாம்..... ஆனால் திரைக்கதைக்கு....?

அவள் கண்கள் எந்த கோணத்தில் இருந்தது.. எதற்காக பார்த்தாள்? என்று ஒரு ஆர்வத்தைக் கொடுக்கும் காட்சியாக அது இருக்க வேண்டும்.... ஏன் பார்த்தாள் என்று பின்னால் ஒரு முடிச்சை அவிழ்க்கும் அளவுக்கு, தெரியாத ஒரு முடிச்சு இந்தக் காட்சியில் இருக்க வேண்டும்..
சூழல்... ?அது இரவா பகலா....? கண்களில் சோகமா.. காதலா...? உயிர் உருண்டு விளையாடுவதை உணர்ந்த முகம் எப்படி இருக்கும்.... என்பதைக் காட்ட வேண்டும்... அந்த முகத்தின் உணர்வுகள் துல்லிமாகவோ அல்லது கதைக்கு தகுந்தார் போலவோ.... எதோ ஒரு பிரதிபலிப்பைக் கொடுக்க வேண்டும்.....

குதிரை வருகிறது என்று சுலபமாக எழுதி விடலாம்.... அது கருப்பு குதிரையா, வெள்ளை குதிரையா... புழுதி படிந்த குதிரையா.. எத்தனை வேகத்தில் வருகிறது.. எந்த திசையில் இருந்து வருகிறது.... ஏன் வருகிறது.... எங்கு போகிறது.... அந்த குதிரை வரும் காட்சியின் முன் பின் காட்சிக் கோர்வை எப்படி இருக்க வேண்டும் என்று இந்தக் காட்சி சொல்கிறது..... இப்படி திரைக்கதையின் வால், முடிச்சை போட்டுக் கொண்டே சென்று ஒரு கட்டத்தில் அதே திரைக்கதையினால் ஒவ்வொரு முடிச்சாய் அவிழ்க்க வேண்டும்....... அது தான் ஒரு கதைக்கு சரியான திரைக்கதை... இந்த இரண்டு புள்ளிகளையும் இணைப்பதுதான் காட்சி படுத்தும் இயக்குனரின் வேலை......(கிறுக்கு பிடிக்கற வேலை)

கதைக்கு.... வரிகள் முக்கியம்.... திரைக்கதைக்கு காட்சிகள் முக்கியம்....கதையை திரைக்கு தகுந்தாற் போல மாற்றுவது தான் திரைக்கதை..... எத்தனை நல்ல கதைகள் மோசமான திரைக்கதையால் தோற்று போயிருக்கின்றன......? அதே சமயம் எத்தனை மொக்கை கதைகள் நல்ல திரைக் கதையால் வெற்றி அடைந்திருக்கின்றன.....!

ஏன், கல்கியின் பொன்னியின் செல்வன் இன்னும் அனைவராலும் உணரப் படுகிறது என்றால்.. அது வெறும் கதை அல்ல.. அதில் திரைக்கதை இருக்கிறது....வந்தியத் தேவன்.. குதிரையில் வருகிறான் என்றால் நீங்கள் எழுத்தின் வழியே அந்தக் காட்சியைப் பார்க்க முடியும்....... நந்தினியின் குரூர பார்வையை நீங்கள் ரசிக்க முடியும்.... வானதியின் காதலை நீங்கள் உணர முடியும்....பொன்னியின் செல்வனின்.... புத்திசாலித்தனத்தை.... உள் வாங்க முடியும்.... கரிகாலனின் கால்களை நீங்கள் கண்டு மிரள முடியும்....

கதையின் கால்களில் திரைக்கதையின் கைகள்..... சேரும் போது காட்சியின் பலம் அதிகமாகிறது .... திரைக்கதை ஒரு வட்டம் போட்டுக் கொண்டே செல்லும்.. அந்த வட்டத்துக்குள் உங்கள் கதையை நீங்கள் அடக்க வேண்டும்...... அப்படி அடங்குவது போல ஒரு கதாபாத்திர கூட்டங்களை தேவைகேற்ப நீங்கள் உருவாக்க வேண்டும்....சில திரைக்கதை, கதையையே சற்று மாற்றி விடும்.. அது நீங்கள் எழுதிய கதையை விட நன்றாகவே இருக்கும்.. அதையும் சரியான ஒரு நூலிழையில் பக்குவப் படுத்தி உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்....(அதுவும் திரைக்கதை புத்திசாலித்தனம் தான் )

திரைக்கதை தான் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான நுண்ணிய இழையை ஒட்டுகிறது ..... திரைக்கதையிலேயே நீங்கள் எடிட்டிங் வேலையை செய்து விட்டால்.. எடிட்டிங் சமயத்தில் வேலை சுமை பாதியாக குறைந்து விடும்....

வெறும் வசனங்கள் கதைக்கு போதும்.... அந்த வசனத்திற்கான அழுத்தம் திரைக்கதையோடு கூடிய காட்சியில் தான் கிடைக்கும்..... ( நல்ல நல்ல வசனங்கள் மொக்கை படத்தில் இருப்பதையும் நீங்கள் காணலாம்.....)கதைக்குள் காட்சிகளை நீங்கள் தேட வேண்டும்.. திரைக்கதையில் காட்சிகள் உங்களை வந்தடையும்..... அப்படி ஒரு திரைக்கதையே வெற்றி பெரும்.. கதையின் முதல் ஐந்து நிமிடத்தில் இருந்தே உங்கள் திரைக்கதை வேலை செய்ய ஆரம்பித்து விட வேண்டும்..... அப்படியே அடுத்தடுத்து முடிச்சுகள் போட்டுக் கொண்டே போய் இன்னும் அதிகமான வலுவான முடிச்சாக இடைவேளையில் விழ வேண்டும்... (இடைவேளையில் தேநீரின் சுவை ஆடியன்ஸ்க்கு தெரிந்து விட்டால் உங்கள் திரைக்கதை சுமார் என்று அர்த்தம்) அதன் பிறகு அடுத்த அரை மணி நேரத்தில் பாதி முடிச்சுகள் அவிழ.. மீதி முடிச்சுகள் இப்படித்தான் அவிழப் போகிறது என்று யாரும் கண்டு பிடிக்காத வண்ணம் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும்... அப்போது இறுதிக் காட்சியில் கதை வெற்றி பெற்றுவிடும்.. திரைக் கதையின் கை கோர்த்து....

திரைக்கதை மேதைகள் உலகில் பலர் இருக்கிறார்கள் .... சிட் பீல்ட், ராபர்ட் மெக்கீ, மைக்கேல் ஹாக்கி இன்னும் நிறைய நிறைய..... பிதாமகன்கள்..... இவர்களைப் படிக்கும் போது நாம் (இன்னும்....?) மரத்தை சுற்றியே திரைக்கதை அமைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் கொஞ்சம் வருத்தப் படத்தான் வேண்டும்...... ஒரு படத்தில் ஒவ்வொரு காட்சியையும் புதிதாக ட்ரீட் பண்ண வேண்டும்.. அது தான் திரைக்கதை யுக்தி....

கில்லியில் இடைவேளை காட்சியில்..... விஜய், பிரகாஷ்ராஜ் மக்களிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் போது கண்டிப்பாக இந்தக் கதை இதோடு அம்பேல் என்று உங்களில் பலர் நினைத்திருக்கலாம்..... சட்டென திரிசாவின் கழுத்தில் கத்தியை வைத்து சூடு பிடித்து கிளம்பியது தான் திரைக்கதை யுக்தி...

தேவை இல்லாமல் அடுக்கு மொழி பேசுவது... ஒரு ஹீரோவுக்கு கராத்தே தெரியும் என்பதற்காக தேமேன்னு உக்காந்து டி குடிக்கும் காமெடியனை அடிப்பது....... தேவை இல்லாமல் உதட்டை சுழித்து பேசுவது.... வேண்டும் என்றே ஹக்சி வாய்சில் பேசுவது......... சூழலுக்கு ஒட்டவே ஒட்டாத காஸ்டியூம்ஸ் போட்டுக் கொள்வது ...... நகைச்சுவை என்று காட்டு கத்து கத்துவது .. சும்மா, வள வளவென்று பேசி கொண்டே இருப்பது.... இதையெல்லாம் விட்டாலே நல்ல திரைக்கதைக்கு அருகில் சென்று விடலாம்.... சுலபமாக, அதே சமயம்... புத்திசாளித்தனமாக கதையை நகர்த்தி செல்லும் யுக்தி தான் திரைக்கதை...

இணைந்த கைகள் படத்தில் ராம்கி நீர்வீழ்ச்சியில் விழ போகும் சமயம் ஓடி வந்து எட்டி குதித்து அருண் பாண்டியன் காப்பாற்றுவாரே... அது தான் திரைக்கதை நுட்பம்.... முதல் முறை படம் பார்க்கும் போது யாருக்காவது தோன்றியிருக்குமா...... சக போட்டியாளன் அருண் பாண்டியன் வந்து காப்பாற்ற போகிறார் என்று.. அங்கு ஜெயிக்கிறது ஒரு படம்...

தமிழிலும் திரைக்கதை திறமைசாலிகள் பலர் உண்டு.... ஸ்ரீதர் தொடங்கி..... கார்த்திக் சுப்பராஜ் வரை நிறை பேர்...... தேடித் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கும் திரைக்கதை நம் சினிமாக்களில் பல உண்டு.....அன்பே சிவம் பாருங்கள்..... திரைக்கதையை இன்னும் நன்றாக உள் வாங்க முடியும்......

*திரைக்கதை எழுதும் போது... எ4 காகிதத்தை சரி பாதியாக மடக்கி .. இடது பக்கம்...ஒன் லைனயும்..... வலது பக்கம் வசனத்தையும் எழுத வேண்டும்.... காகிதத்தில் மேல் இடது பக்கம்.. அந்த காட்சியின்.... எண்... கதாபாத்திரங்கள் பெயர்... இரவா, பகலா.. நேரம்........ எல்லாம் குறிக்கப் பட வேண்டும்..... முடிந்த அளவு பென்சிலில் எழுதுங்கள்.. அது, பின்னால் தேவைப் பட்டால்.... மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும்....

இனி வசனம்.......

திரை விரியும்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Jan-15, 4:13 pm)
பார்வை : 277

மேலே