வசனம் திரைப் பறவை 12

"நான் உன்ன அப்டி திட்டிருக்கேன்.... பின்ன எப்டி என்ன பிடிச்சது...."

"திட்டின உனக்கே என்ன பிடிக்கும் போது எனக்கு பிடிக்காதா....?"

"அப்போ நிஜமா என்ன பிடிக்குமா.......!"

"நாலு குழந்தை பிறந்த பிறகு கூட கேப்ப போல...."

"ஹே .. நீ இப்டி எல்லாம் பேசுவியா....ரோட்ல போகும் போது ஊமை மாதிரி போற..."

"பொண்ணுங்கன்னா அப்டிதான்.... யாரும் இல்லாதப்போ எல்லாத்தையும் கொட்டிடுவாங்க......"

"இங்க தான் யாரும் இல்லையே.... கொஞ்சம் கொட்டேன்..."

(கையை மடக்கி கொட்டுவது போல.... பாவனை செய்வாள்.... மஞ்சு....(அந்த பெண் கதாபாத்திரம் )

"ஹே.... விளாடாத..... ஆமா உன் பேர் என்ன....?"

"ஒ..... பேர் சொல்லலையா...."

(அவள் குரலிலேயே அவளைப் போலவே பாவனை செய்து அவனும் சொல்லுவான்......)

"சொல்ல்லியே...... "

(அவள் முகம் மூடி சிரிப்பாள்.....)

இப்படி ஒரு வசனம்..... இயல்புத் தன்மை மீறாத காதல் வசனம்.... இடம் பிடத்த படம்.. "பிடிச்சிருக்கு....."

நான் அப்படியே பார்த்துக் கொண்டே புன்னகை செய்த படம்... வசனத்தில் அத்தனை தெளிவு.. காதலை அத்தனை அழகாக வெளிபடுத்திய வசனம்......

அதே படத்தில்....

"தம்பி..... பத்து பேர அடிக்கறவன் மட்டும் வீரன் இல்ல... பத்து பேர் அடிக்கும் போது என் பொண்ணுக்காக நின்ன பார்.. நீ பார்த்துப்ப தம்பி... உன்ன நம்பி என் பொண்ண முழு மனசோட அனுப்பி வைக்கிறேன்" என்று (சரண்யா) அம்மா கதாபாத்திரம் பேசும் போது கலங்காத கண்கள் கல்லுக்குள் சுழல்கிறது என்று அர்த்தம்.....

"காதல்ங்கறது பரீட்சை இல்லைங்க.... அதுல தோக்கறதுக்கு.. அது ஒரு பீலிங்..... முதல் காதல மறைச்சிட்டு தான் நாம வாழ்றோம்.. மறந்துட்டு இல்லன்னு"- விஜய் பேசின பூவே உனக்காக படம்...... மனதுக்கு நெருக்கமான ஒரு படம் என்றால் அது மிகை இல்லை.... நண்பர்களே.......

"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..." மறக்க முடியுமா?!.....

"இவுங்க எல்லாம் வெட்ட வெட்ட வளர்ந்துட்டே தான் இருப்பாங்க" ....என்று நம்பியார் அர்ஜுனிடம் பேசும் பாலகுமாரனின் ஜென்டில்மேன் வசனம்.... நமக்குள் பதிந்து கிடப்பதை நாம் உணர்ந்தே இருக்கின்றோம்....

"நெருப்புல என்னடா தீட்டுன்னு"- ஆர்யா.. பேசும் நான் கடவுளில்...ஜெய மோகனின்... பேனா.... குத்தி கிழிப்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்....

"ஐ" படத்தில் வரும் ஒரு சின்ன வசனம்... முழுக் கதையை உள் வாங்கிக் கொண்டு இருப்பதை உணர முடியும்... அது,

"அதுக்கும் மேல...." (ஆனால் திரைக்கதையில் சொதப்பியது வேறு கதை )

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. பேசா மொழி படங்களிலிருந்து அடுத்த கட்டம் நகர்ந்தது, சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம்...மொழி, மனிதன் கண்டு பிடித்த அற்புத பரிணாமம்.. அது.. இன்னும் இன்னும் மனிதனை எளிமையாக்குகிறது....(ஆங்கிலம் பலரை கடினமாக்கியது மாற்றுக் கண்டடைதலின் விபரீதம்) அது இன்னும் இன்னும் மனிதனுக்கும் மனிதனுக்குமான இடைவெளியை குறைக்கிறது.... வசனங்களால் படங்கள் அழகு பெறுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்...அது காட்சியை, பார்ப்பவனுக்கு விளக்கமாக்கி விவரிக்கிறது...கதாபாத்திரங்களின்.... உடல் மொழியோடு... முக மொழியோடு வரும் வசனங்கள்... நம்மை நாம் காணும் திரைப்படங்களுடன் ஏதோ ஒரு புள்ளியில் இணைக்கிறது... ஒரு கட்டத்தில் நாமே... ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்து(பெரும்பாலும் ஹீரோ) அவனைப் பின் தொடர்கிறோம்.......

திரைப்படம் என்பது பொதுவாக.. காட்சி மொழி சார்ந்தது....முடிந்தளவு வசனங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை... கொரிய இயக்குனர் "கிம் கி டுக்", அந்த வகையில் மிக மிக குறைவான வசனங்களையே உபயோகிப்பார். ஆனாலும் எந்த இடத்திலும்.... புரியாமல் போகாத காட்சி அமைப்புகளால் பிரமிக்க வைப்பார்... வசனங்கள் என்பது தொடந்து கத்தி கத்தி பேசிக் கொண்டே இருப்பது மட்டும் அல்ல... காட்சிக்கு தேவை இருப்பின் அமைதியாக எதுவும் பேசாமல் கடந்து செல்வதும் கூடத்தான்.......கடந்த வருடம் அவர் எடுத்த "மோபியஸ்" படத்தில் ஒரு வசனம் கூட இல்லை.. ஆனால் படம்.... மிரட்டி இருக்கும்... ஆக.. ஒரு இயக்குனர்... எந்த இடத்தில் எந்த வசனம் எந்த அளவு வைக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டாலே அப் படம் பாதி வெற்றி பெற்றதுக்கு சமம்......தமிழில் கூட கமலின் "பேசும் படம்" வசனங்கள் இல்லாத படம்... எத்தனை உணர்வு பூர்வமான படம் அது.... கடைசி காட்சியில் அமலா பிரிந்து போகும் போது, நமக்கும் கண்ணீர் வந்தது தானே....!...மௌனமும் வசனமாகும் சூட்சும நொடி திரையில் நிகழ வேண்டும்.. அதை நிகழ்த்த சரியான கதையும் திரைக்கதையும் இயக்குனருக்கு கிடைக்க வேண்டும்....

சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல... பெரிய நடிகர்கள்... பெரிய இயக்குனர்கள்... பெரிய கலைப் படங்களில் வருவது மட்டும் தான் நல்ல வசனங்கள்.. நல்ல கட்சி அமைப்புகள்.. நல்ல படங்கள் என்ற கருத்தில், நான் முற்றிலும் முரண் படுகிறேன்..... ஒரு கலைப் படத்தை கொஞ்சம் முயன்றால் ஒரு எழுத்தாளன் எடுத்து விடலாம்.. ஆனால் ஒரு கமர்சியல் படத்தை வெற்றிப் படமாக்க பொது அறிவு, மேலாண்மை அறிவு, மார்க்கெட்டிங் அறிவு, நகைச்சுவை பற்றிய அறிவு... காதல் பற்றிய நுணுக்கம்....இன்றைய டிரெண்ட் பற்றிய அறிவு.. இன்றைய இளைஞர் கூட்டத்தின் தேடல் பற்றிய அறிவு.. அவர்களின் நவீன மொழி இத்தனையும் வேண்டும்...இதோடு.... எழுத்தின் எல்லையும் அவன் பக்கம் வலிமையாக இருக்கும் பட்சத்தில் படம்.. நினைத்த இடத்தை போய் சேர்ந்து விடும்.. அதை நுணுக்கமாக கையாளத் தெரிந்தவர்கள் எல்லா கால கட்டத்திலும் சிலர் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்...

பழைய படங்களைப் போல இன்றைய படங்கள் இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து.... அது அவர்களின் அப்டேசனில் இருக்கும் பிரச்சனை....
ஒவ்வொரு கால கட்டத்திலும்.. ஒவ்வொரு மாதிரி கதையோடும்.... திரைக்கதையோடும்.... வசனத்தோடும்.. நல்ல படங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.... இன்னும்..... அண்ணன் தங்கை கதை என்றாலே, அந்த ஒரு படத்தையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி...?.... (அது கொண்டாடப் பட வேண்டிய படம்..அதில் மாற்றம் இல்லை... ஆனால் அங்கேயே நின்று கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை....)ஒவ்வொரு கால கட்டதிலும் முன்னால் வெற்றி பெற்றவனை ஒருவன் ஜெயித்துக் கொண்டே தான் இருக்கிறான்.... இருப்பான்..அது தான் மானுட சாமர்த்தியம்.. மானுட வளர்ச்சி...வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல....

"வானம் பொழிகிறது"... வசனத்தின் உச்சம் தான்....
"அதே சமயம்.... காடுங்கறது... வாழ்க்கை.... அந்த வாழ்க்கைய மரங்கள் தான் கொடுக்குது....அந்த மரத்த எவனது வெட்டினா அவன வெட்டுங்கறது"- இன்றைக்கு தேவையான மாற்று புரட்சி... அதை நான் உற்று நோக்குவதால்..... பூமி விளைவதை நான் புறக்கணிப்பதாக அர்த்தம் இல்லை.....

தகுதி உள்ளவையே தப்பி பிழைக்கும்.. என்பது ஏக காலத்துக்கும் பொருந்தும் வாக்கியம்... இன்றைய சினிமாவுக்கும் அது பொருத்தும்......."இணைந்த கைகள்" போல ஒரு மாற்று சினிமா அந்த காலகட்டத்தில் ஒரு புரட்சி...

"இன்னைக்கு சனிக் கிழமை....சனிப் பொணம் தனியா போகாதாம்"னு அடியாட்கள் சொல்லும் போது..... "ஆமாண்டா மாப்ள.. அது இன்னும் நாலு பேர சேர்த்துக்கிட்டு தான் போகும்னு அருண் பாண்டியன் பதிலுக்கு பேசும் வசனம் ...... அடுத்து நடக்கப் போகும் சண்டையின் வீரியத்தை, சுலபமாக நமக்குள் புகுந்து நம்மை தயாராக்குகிறது........அந்த இடத்தில் அந்த வசனம்.... சாதாரண வாக்கியமாக இருப்பினும்.... ஒரு ரசிகனுக்கு அந்த காட்சியின் மேல் இன்னும் அதிகமான கவனத்தை பெற வாய்பை ஏற்படுத்துகிறது.........

வசனம் வெளி வர வேண்டும்..... புகுத்தப் படக் கூடாது.....

பழைய படங்களின் வசனங்கள் போற்றப் பட வேண்டியவை..... மனதில் இருத்திக் கொள்ள வேண்டியவை.. அதே சமயம் "சதுரங்க வேட்டை"யின் வசனங்களை, நாம் ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து விட முடியாது....

"டேய் உங்கள திருத்தறது என் வேலை இல்ல.. முதல்ல நான் என்ன திருத்திக்கறேன்னு"- கவுண்டமணி பேசும் வசனத்தை கண்டு கொள்ளாமல் போய் விட முடியுமா....?.... வெறும் வசனமா அது, வாழ்வியல் அர்த்தம் அல்லவா.....!

"கேர்ல்ஸ் ஆர் கேர்ல்ஸ்" (தாகூர் கவிதை என்றாலும்) என்று நாகேஷ் "சோப்பு சீப்பு கண்ணாடி" படத்தில் பேசும் போது.. பெண்கள் மீது ஏதோ ஒன்று அதிகமாவதை நம்மால் தடுக்க முடியாது அல்லவா...... !

வசனங்கள் இல்லாத போதும் அங்கு பேசப் படுகின்றன... என்பது தான்.... மாற்று சிந்தனை.... ஜீன்ஸ் பேண்ட்டுக்கு விலை ஏற ஏறத்தான் மதிப்பு கூடுமாம் என்ற பொருளாதார சிந்தனை போல....

அடுத்து இயக்கம்....

திரை விரியும்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (23-Jan-15, 4:33 pm)
பார்வை : 596

சிறந்த கட்டுரைகள்

மேலே