அறுபது வயதுக்கு மேல்

அறுபது வயதுக்கு மேல் எழுதுவது என்பது மிக கடினமான ஓன்று. ஆனால் பல எழுத்தாளர்கள் வயதான பின் தான் நிறைய எழுதுகிறார்கள் (என்னையும் சேர்த்து = நான் எழுத்தாளனா இல்லையா என்பது தனியான கேள்விக்குறிய விஷயம்)

எழுதுவது கடினம் என்பது எழுத்தாளர்களின் திறமையைக் குறைவாக மதிப்பிட்டோ அவர்கள் கற்பனைத் திறன் குறைவு என்பதாலோ அல்ல. வயதின் முதிர்வால் தோன்றும் மறதியை மனதில் கொண்டே . ஒரு அருமையான கரு தோன்றி ஸ்கெட்ச் போட்டு எழுதலாம் என்று நினைத்தால் மனதில் தோன்றியது சிறிது நேரத்தில் சுத்தமாக மறந்து விடுகிறது. எவ்வளவுதான் மூளையைப்(?) போட்டு கசக்கி எண்ணியதை நினைவு கொள்ள முயன்றால் எதுவும் நினைவுக்கு வருவதில்லை.

சாதாரண வாழ்க்கையிலேயே நினைவுகள் பல முறை கை கொடுப்பதில்லை. குறிப்பாக பெயர்கள். பழய அலுவலக நண்பர்கள், தொழில் நிமித்தம் சந்தித்தவர்கள் இவர்களைக் காணும் பொழுது முகம் நன்கு பரிச்சயமானதாக இருந்தாலும் பெயர் விடாப்பிடியாக நினைவுக்கு வர மறுக்கிறது. அதை விடுங்கள ஒரு பொருளை எடுக்க அடுத்த அறைக்குச் சென்ற பிறகு எதற்கு சென்றோம் என்பது மறந்து விடுகிறது. பிறகு வந்த வழி திரும்பி வந்து பின்னோக்கி நடந்து / சிந்தித்த பின் சில சமயங்களில் நினைவுக்கு வருகிறது. பல சமயங்களில் வருவதில்லை. சம வயது நண்பரைக் கேட்டால் அவருக்கும் அப்படித்தான் என்றும் இது வயதானால் வரும் ஒரு வகை நோய் "Dementia" என்றார். கூகளில் போய் பார்த்தால் சற்று பயமாகத்தான் இருக்கிறது.

ஆனால் எவ்வளவு பழய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கிறது,. குழந்ததையாய் சிறு வயதில் செய்த குறும்புகள், அப்பாவிடம் சொன்ன பொய்கள், மூணாம் க்ளாஸ் படிக்கும் போது முன்னால் சென்ற மாணவியின் குடையை என் குடையால் குத்தியது, படிச்ச சில குறள்கள், பாடல்கள்.... அம்மா சொல்லிக் கொடுத்த ஸ்லோகம், பெரியப்பாவிடம் காசு வாங்கிக் கொண்டு ஓடி ஓடிப் போய் 'பறக்கும் பாவை' படம் பார்த்தது, இன்னும் பல... இவை எல்லாம் ஞாபகம் இருக்கிறதே! பெயர்கள் மட்டும் சுத்தமாக நினைவில் இல்லை.., ஆனால் வின்சென்ட் பெயர் மட்டும் ஞாபகம் இருக்கு. நாற்பது பேர் கொண்ட மூன்றாம் வகுப்பில் நானும் வின்சென்ட் மட்டுமே மாணவர்கள்.., மற்ற முப்பத்து எட்டு பேறும் மாணவிகள்.... நம்புங்கள் ஒருவர் பெயரும் ஞாபகமில்லை.... (ஞாபகம் வந்து என்ன பயன் என்கிறீர்களா...? அதுவும் சரி) இத்தனைக்கும் ஒரு மாணவியைப் பின் தொடர்ந்து வீடுவரைச் சென்றது கூட ஞாபகம் வருகிறது,

சமீபத்து நிகழ்வுகள் தான் சிக்கல் போல .... சாப்பாட்டிற்குப் பின் சாப்பிட வேண்டிய மாத்திரையை சாப்பிட்டேனா?

ஆனால் எத்தனை வயதான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அருமையான கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுகிறார்கள். நான் நினைக்கிறேன் ஞாபகத் திறனும் எழுத்துத் திறனும் வேறு வேறென்று. கற்பனையில் ஊற்றெடுக்க நாம் கவிதையில் / கதையில் லகுவாக வடிக்க முடிகிறது.. இதில் ஞாபகத் திறன் அதிகம் பயன் இல்லை... அப்படி ஏதாவது மறந்தாலும் பிறகு சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா...

அதனால்தான் இப்பொழுதெல்லாம் என்ன எழுதுவது என்று சிந்தனை செய்து எழுதுவதெல்லாம் கிடையாது., அப்படி சிந்தித்தாலும் நினைவில் எதுவும் நிற்பதில்லை... எழுதுவது என்று முடிவெடுத்தால் உட்கார்ந்து மனதில் தோன்றுவதை எழுதிவிடுவது. (இந்தக் கட்டுரையும் அப்படித்தான்... ) என் கவிதைகளும் அப்படித்தான்... இதோ பாருங்கள் கீழே உள்ள கவிதை(?) அதுவும் இப்படித்தான்...

"எழுதியது ஒரு வரியே
மற்றவை எல்லாம்
என் கவிதை"

நான் எழுதுவதில்லை.... என் கவிதையே எழுதுகிறது!

அது சரி கண்ணும் விரலும் தடுமாற தப்புத் தப்பா தட்டச்சிடுவதை தவிர்ப்பதற்குள்... அப்பப்பா முடியல சாமி.,.

எழுதியவர் : முரளி (26-Jan-15, 4:24 pm)
பார்வை : 252

மேலே