இயக்கம்- திரைப் பறவை 13

இயக்கம்........ இயங்குவது......

கதை திரைக்கதை ஆகி.. வசனத்தோடு... கதாபாத்திரங்களோடு..... நிற்கையில்.. அதை.... ஒரு கட்டத்துக்குள் கொண்டு வந்து ஒரு வாழ்க்கைக்குள் அடக்குவது தான்...... இயக்குனரின் வேலை.....வாழ்க்கையாக ஆக்குவதும்.....

கேப்டன் ஆப் தி ஷிப்...

எதிலிருந்து எதைப் பிரித்தாலும் ஏதாவது ஒன்று கிடைக்கும்.. ஆனால் எதிலிருந்தும் உழைப்பை எடுத்து விட்டால் அங்கு ஒன்றுமே இருக்காது..... என்பது பொருளாதார விதி.... அது சினிமாவுக்கும் பொருந்தும்.... இயக்குனர் இன்றி ஒரு சினிமா உருவாகவே முடியாது.... அது சினிமா விதி...

சினிமா ஷூட்டிங்- அநேகமாக யாவரும் பார்த்திருப்போம்..... ஆம்.. அது அத்தகைய கடினமான ஒரு வேலை தான்.. ஒரு முழு கதை... காட்சிகளாக பிரிக்கப் பட வேண்டும்... காட்சிகள் ஷாட்டுகளாக பிரிக்கப் பட வேண்டும்.. அந்த ஷாட்டுகள் ஒவ்வொன்றாக படம் பிடிக்கப் பட வேண்டும்.. அந்த ஷாட்,இயக்குனர் நினைத்தது போல வரும் வரை டேக் போய்க் கொண்டே இருக்கும்...(மீண்டும் மீண்டும் எடுப்பது)

ஒரு காட்சியை எடுக்கும் போது அதற்கு முந்தைய காட்சி மற்றும் எடுக்கும் காட்சியின் (தொடர்) அடுத்த காட்சி ஆகியவற்றின் செயல்பாடுகளை மனதில் நிறுத்திக் கொண்டு எடுக்கப் பட வேண்டிய காட்சிகளை எடுக்க வேண்டும்..... கன்டினியூட்டி என்று ஒன்று உண்டு... கதைப் படி தொடர்ந்து இதில் ஆரம்பித்து இதில் முடித்து விடலாம் என்றால் அது வெகு சுலபம்.. ஆனால் சினிமா ஒரு கூட்டு முயற்சி.. பல நடிகர்கள், நடிகைகள் கொண்டு எடுக்கப் படுவது.... ஒரு காட்சியில் நடிக்க வேண்டிய கதாபாத்திரங்கள் மூன்று என்று வைத்துக் கொள்வோம்... மூவரும் ஒரே நேரத்தில் எப்போது வருகிறார்களோ அப்போது தான்...(அவர்களும் வேறு படத்தில் கமிட் ஆகியிருப்பார்கள்... அல்லது வேறு காரணம் கூட இருக்கலாம்...) அந்த குறிப்பிட்ட காட்சியை படம் பிடிக்க முடியும்...... அது கதைப் படி இடைவெளிக்கு பின் வரும் காட்சியாக கூட இருக்கலாம்.. ஆக, அதற்கு முந்திய காட்சிகளை எடுக்காத பட்சத்திலும் இந்த குறிப்பிட்ட காட்சியை எடுக்க அந்த மூன்று கதாபத்திரங்களுக்கு கதையின் ஓட்டத்தை சொல்லி தயார் படுத்தி வேலை வாங்க வேண்டும்..உதாரணத்துக்கு.... அம்மா இறந்த காட்சியை முன்பே எடுத்ததை அம்மாவுடன் அன்பாக இருக்கும் காட்சியை(இறப்பதற்கு முன்னால் வரும் காட்சி) பின்னால் எடுப்பார்கள்... படம் பார்க்கும்போது அன்பாக இருந்தது முன்னாலும் இறந்த காட்சி பின்னாலும் வரும்...... அப்படி வரும் காட்சியில்... அந்தந்த காட்சிக்கு ஏற்றாற் போல கதாபத்திரங்கள் செயலாற்றிக்க வேண்டும்... இம்மி பிசகினாலும்.... "கன்டினியூட்டி இல்லையே" என்று சொல்லி விடுவார்கள்...

"மாப்ள இவர் தான்..... ஆனா போட்ருக்கற சட்டை என்னுது"-ன்னு ரஜினி பேசுவாரே..... அப்போ, சாதாரணமா கவனிச்சாலே இந்த கன்டினியூட்டி பிரச்சனையை பார்க்கலாம்.... முதல் காட்சியில் சட்டை முழுக்க சேர் ஆகி இருக்கும்.. அடுத்த.... காட்சியில்... ஆங்காங்கே இருக்கும்... இது இயக்குனர் கவனித்திருக்க வேண்டிய இடம்...(எப்படி விட்டார் என்று தெரியவில்லை....)

சினிமா, காட்சிகளின் தொடர்புகளால் ஆனவை.... ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் நூலிழையில் உள்ள ஒரு நெருக்கத்தோடு இணைக்க வேண்டும்.. அந்த வித்தையே இயக்குனரின் மிகப் பெரிய சவால்.....கதை எழுதுவது ஒரு கலை.... திரைக்கதை, வசனம் என்பது ஒரு கலை.. பாடல்.. சண்டைக் காட்சிகள் என்பது ஒரு கலை.. எடிட்டிங்... ஒளிப்பதிவு ஒரு கலை... இன்னும் இருக்கும் பல கலைகளோடு இவைகளையும் ஒரு சேர உணர்ந்து (முழுதாக எல்லாம் தெரியாவிட்டாலும்) எல்லாம் கலந்த கலவையின் கலையை ஒரு சதுரத்துக்குள் அளவாக, அற்புதமாக... அக்கறையாக... செதுக்கி செதுக்கி உள் நுழைப்பதே இயக்குனரின் வேலை....

இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.... அவள் எதிர் பார்த்தாளா என்று தெரியவில்லை..... 15 வருட இடைவெளி.... அப்பப்பா.... அதில் ஒரு வாழ்க்கையே நிறைந்திருக்கிறது.... ஏதேச்சையாக திருவிழாவில் சந்தித்தது கொண்டோம்.. அவள் பெயர்...ம்ம்ம்..... இப்போதைக்கு நியந்தா என்றே இருக்கட்டும்.......பள்ளி கால காதல்.... நானும் நியந்தாவும் குடும்ப நண்பர்கள்.... அவள் என்னை விட இரண்டு வருடங்கள் சிறியவள் என்பதால் என்னை அண்ணா என்றே அழைப்பாள்......(ஆனால் இப்போது இல்லை.... கடந்த 20 நாட்களுக்கு மேலாக அவள் என்னை அண்ணா என்று அழைப்பதை நிருத்தியிருந்தாள்) நாங்கள் ஒரு முறை ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தோம்....அப்போதே நியந்தாவின் செயல்பாடுகள் என்னை யோசிக்க வைத்தன.. இருப்பினும்.. நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. நாடகம் முடிந்து..... வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தோம்... கொஞ்சம் காட்டுப் பகுதியில் நடக்க வேண்டி இருப்பதால் எல்லாரும் கூட்டமாகத்தான் நடந்தோம்.... நியந்தா என்னோடு மிக நெருக்கமாக நடந்து வந்தாள்...... அவள் என்னிடம் ஏதோ பேச வருகிறாள் என்று புரிந்தது....... நானும் மற்றவர்களுக்கு வழி விட்டு, அவள் பேசுவதற்கு தகுந்தாற் போல. அவளோடு சற்று பின் தங்கினேன்...

"கொஞ்சம் பேசணும்"- என்றாள்,... .
..........................................................

சட்டென கையைப் பிடித்தாள்....... "ஐ லவ் யூ"- என்றாள்....

இந்த ஐ லவ் யூவுக்கு இப்போது பெரிதாக அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை... ஆனால் அந்த கால கட்டத்தில் இந்த ஐ லவ் யூ என்பது உணர்வுக்குள் புகுந்து உள்ளத்தை புரட்டி போடும் வேலையை செய்து விடும் வாக்கியம்...

எனக்கு ஒன்றும் புரியவில்லை... இன்று கூட அலைபேசியில் பேசும் போது.... அவள் அழுதாள்.... மனம் பட்ட பாட்டை எப்படி சொல்வது.... இத்தனை காதலை ஒருத்தி 15 வருடமாக நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு இருப்பாளா...!

அந்த பனி விழும் இரவில்... வெண்ணிலவின் வாசத்தில்... அவளின் கண்கள்... வட்டமான நட்சத்திரங்களைப் போல ஜொலித்தன...எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... அகன்ற நெத்தியில் சுருண்டு விழுந்த முடிக் கற்றை என்னை ஏதோ செய்தது....... மனம் ஒரு பாறையாகி உருளத் தொடங்கியதாக தோன்றியது....... பாதங்கள் நழுவி நழுவி மீன்களாகி, வானத்தில் நீந்திக் கொண்டிருப்பதாக உள்ளுக்குள் ஒரு உதறல்...அடுத்த நாள், நான் ஊருக்கு போக வேண்டும்.... அவள் என் கண்களை, முகத்தை, கைகளை... மொத்தத்தில் என்னை சுற்றி சுற்றி பார்க்கிறாள்... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... காதலிக்கிறேன் என்று அவள் சொல்வாள் என்று சற்றும் நான் யோசிக்கவில்லை... சிறுவயது முதலே மயிலண்ணா என்று (என் செல்ல பெயர் மயில்) என்று அழைத்தவள் இன்று சட்டென இப்படி சொல்வாள் என்று சற்றும் நான் யோசிக்க வில்லை.... ஆனால் உள்ளுக்குள் எனக்கும் அவளைப் பிடிக்கத் தொடங்கியது... நடந்து சென்ற அரை மணி நேரத்தில் நாங்கள் கை கோர்த்துக் கொண்டோம்...இரவுகள் எங்களை இன்னும் இன்னும் நெருக்கிக் கொண்டே வந்தது..... எனக்கு அவளிடம் ஏதாவது பேச வேண்டும் போல தோன்றியது.. குறைந்த பட்சம் அவளின் கன்னத்தை கிள்ளி விட வேண்டும் என்று கூட தோன்றியது... காதலை திரும்பி ஐ லவ் யூ என்று சொல்ல எனக்கு பயமாக இருந்ததே தவிர... காதல் வந்துவிட்டது....

இத்தனை அழகாய் ஒரு பெண் கையைப் பற்றிக் கொண்டு உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறும்போது எப்படி வேண்டாம் என்று கூற முடியும்....?

எனக்கு புன்னைகைக்க தோன்றியது...... அவளின் வீடு வந்து விட்டது....

அவளின் அம்மா "மயிலு ஒரு வாய் சாப்ட்டு போ.." என்று கூப்பிட்டது...

நியந்தா சிரித்தாள்... அவள் கண்கள் அவளின் அம்மாவையும் என்னையும் மாற்றி மாற்றி சுழன்றன... அர்த்தமான கள்ளத்தனம்.. அவள் முக மொழியில்....

நான்.. "இல்ல அத்தை ....(நான் அப்படித்தான் அழைப்பேன்.. அவளும் என் அம்மா அப்பாவை அத்தை மாமா என்று தான் அழைப்பாள்) "நான் நாளைக்கு வரேன்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பி நடக்கத் தொடங்கினேன்...... நண்பர்கள் சற்று முன்னால் செல்ல... நான் சட்டென திரும்பினேன்.. நியந்தா என்னைப் பார்த்துக் கொண்டே அவளின் வீட்டு வாசலில் நின்றிருந்தாள்....... நான் அவளிடம் ஓடி போய் என் பாக்கெட்டில் இருந்த மிட்டாயை அவளின் வாய்க்குள் திணித்து விட்டு திரும்பி ஓடி போனேன்...

மறுநாள் அவள் தூரத்தில் நின்று வழி அனுப்ப நான் ஊருக்கு போனேன்.......

அதன் பிறகு, அரைப் பரீட்சை லீவு வரை காத்திருந்து ஓடி வந்தேன்....... நியந்தா எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னமே வந்து அதே புல்வெளியில் எனக்காக காத்துக் கொண்டிருந்தாள்....(அவளும் ஊரில் தான் படிக்கிறாள்...) நான்.. இம்முறை... தயாராக, தைரியமாக "நானும் உன்னை காதலிக்கிறேன்" என்று கூறினேன்....

தெத்துப் பல் தெரிய சிரித்தாள்....

"அப்பா... 5 மாசம் ஆகிருக்கு லவ் வர.." என்று கேலி பேசினாள்... நாங்கள் 5 மாத கதையை அரை மணி நேரத்தில் பேசினோம்...... அப்போது என் மாமா.. அந்த வழியே வந்தார்.. இங்கிதம் தெரிந்தவர்... எனை கண்டும் காணாமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டே போவது போல போனார்....(அவர் கூறிய கதைகளின் மொத்தம் தான் ஊறி ஊறி வேறு வேறு பரிணாமமாக இன்று என்னிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது...)

எல்லாரிடமும் வார்த்தைகள் பேசின.... நியந்தாவிடம் மட்டும் கண்கள் பேசின...

நாட்கள் நகர்ந்தன.. அடுத்து முழுப் பரிட்சை விடுமுறை.. அதன் பிறகு... கால் பரிட்சை.... அதன் பிறகு அரைப்பரிட்சை விடுமுறைக்கு நான் போகவில்லை.. அதன் பிறகு நான் போகவே இல்லை.....தொடங்கிய பாதை எங்கு நின்றது என்றே தெரியவில்லை.... காடு கொண்ட வேர் ஒன்று இடம் மாறி சென்று தடம் இன்றி காய்ந்து போன கதையில் சருகளின் தேசம் முளைக்க துவங்கியது காலம்...... மருந்து போடும் காயங்கள் இருந்து கொண்டே இருப்பதில் தான்... உணர்வுகள்... கொந்தளித்துக் கொண்டே இருக்கின்றன...மௌனங்கள் உடைந்த பொழுதில்... மயானங்கள் கூட மறுதலிக்கப் படுகின்றன..... மானுட வாழ்வியல் அப்படி....

தேகம் சிலிர்க்கும் கூடுகளில் சில் வண்டுகள்.. கண்காட்சிப் பொருள்களா.. என்பதோடு காட்சி..... யோசிக்கும் பொழுதில்... இன்றும் 15 வருட இடைவெளியை வெற்றுப் புன்னகை நிரப்பிக் கொண்டிருந்தது... நண்பர்கள், "எப்டி இருக்கீங்க... எங்க இருக்கீங்க.."என்று விசாரித்து... எல்லாம் பேசி உதிர்க்கையில் அவள் மட்டும்.. மென் பொருள் தீர்ந்த கணிப்பொறியின் கடைசி உறுமலென...தன் பொருள் உணர்ந்த கவிதைக் கருவென.. காக்கை ஓடங்கள் கடந்து போகும் நள்ளிரவு மழைத் துளியின் பின்னிரவு பரிதவிப்பை... புரியாத வானத்தில் சிறகு வேண்டி பெரு மூச்சு விட்டபடி மூச்சு தன்னைக் கொண்டிருப்பதாக நான் உணர்தேன்... தானும் அப்படியே என்று அவளும் உணர்திருப்பாள்.....சக உணர்தல் இன்னும் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.. அன்பும் காதலும்.. ஒரு போதும் தீர்வதில்லை... முகமூடி போட்டுக் கொள்வதில் அவைகள்... காடு தொலைத்த பனிப் பொழிவாக ஒரு மூடு மந்திரம் விதைக்கின்றன...

இரண்டு நாட்களுக்கு பின் என் அலைபேசி எண் கண்டு பிடித்து பேசினாள்....பேச்சுக்கள் மழைத் துளிகளாய் வான் நோக்கி வீசத் தொடங்கின.... மௌனித்த மறுமுனை கண்ணீரில்.... என் கண்களை நனைத்துக் கொண்டிருந்தன.... பூக்கள் பூக்காத போதும் வாசங்கள் வந்து போவது போல... இல்லாத தேடலில் இருக்கின்ற தொலைதல்.. என்னவென்று உறுதிப் படுத்த... ஒன்றுமில்லாத வாழ்க்கையில் ... ஒன்று மட்டும் நிஜம்.. அது அன்பு..

அன்பு தேசத்தின்... தேடலில் அவள் சொன்ன வார்த்தைகள்.. இந்த 15 வருடத்தில் நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியாது .. .... ஆனா என்னைக்காது பாப்பேன்னு நம்பினேன்.... ஒவ்வொரு சிக்னல்லயும்.... இங்க இருந்து வந்திட மாட்டீங்களா.. அங்க இருந்து வந்திட மாட்டீங்களானு ஏங்கி ஏங்கி பார்த்திருக்கேன்.... தெரியுமா.. இன்னும் என் நெஞ்சுல உங்க பேர குத்தின பச்சை இருக்கு.. .. என்று அவள் கூறிய போது நான் 15 வருடங்கள் பின் தங்கிய அவளுக்கான முத்தத்தில் கரைந்து கிடந்த நாள் என்னை கேள்விக்குறியாக்கி வளைய வைத்துக் கொண்டிருந்தது ...

"நான் உங்க மேல வெச்ச வெறித்தனமான நிஜமான அன்பு உங்களை என்கிட்ட கூட்டிட்டு வந்து சேர்த்திருச்சு" என்றாள்.... செத்தே போனேன்...'ஓ' வென அழத் தொடங்கிய அவள்... எனக்குள் 15 வருடங்களை சுருக்கத் தொடங்கினாள்... நான்... பின்னோக்கி குறையத் தொடங்கினேன்.. என்பதாக காட்சி தன் தீவிரத்தை.... சுழற்றிக் கொண்டே சுழன்று கொண்டிருந்தது.........

இந்தக் கதையை கதையாக நீங்கள் பின் தொடர்ந்து விட்டீர்கள்... படமாக எப்படி பின் தொடர்வது .. முதலில் நியந்தாவின் கதாபாத்திரம்... என் கதாபாத்திரம்.. நாங்கள் யார்.. எங்கள் குணாதியசம் என்ன....? இந்தக் கதை எந்த ஊரில் நடக்கிறது.... கதை முன் பின் நகரும் ஒரு திருப்புக்காட்சிகள் கொண்ட கதை..... இப்போது நியந்தாக்கு கல்யாணம் ஆகி விட்டதா.... இல்லையா..... நானும் நியந்தாவும் சந்திக்கும் திருவிழா நாளை கண் முன்னால் கொண்டு வர வேண்டும்... என் நடிப்பு.. நியந்தாவின் நடிப்பு... முக மற்றும் உடல் பாவனைகள்.. மொழி உச்சரிப்பு ....இடம்.... நண்பர்கள் கதாகதாபாத்திரங்கள்...நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது அட்மாஸ்பியரில் யார் யாரெல்லாம் இருக்கிறாகள்.. ஆங்காங்கே திருவிழாவுக்கு வந்த தலைகள்... மேளச் சத்தம்... கோவிலில் பாடும் பாட்டு சத்தம்... கண்கள் பார்க்கும் போது க்லோசில் பார்வையின் வீரியம்...... மாற்றி மாற்றி பார்க்கும் போது பாய்ன்ட் ஆப் வியூ............

யார்ட்டயுமே சொல்ல முடியாம உள்ளுக்குள்ள எத்தன நாள் அழுதிருப்பேன் தெரியுமான்னு நியந்தா பேசும் போது பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்று கூட முன் கூட்டியே தீர்மானிக்க வேண்டும்... பிரேமுக்குள் இயக்குனருக்கு தெரியாமல் ஒரு ஈ கூட நுழைய முடியாது.. கூடாது..என் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கும் போது எதிரே நியந்தா இருக்க போவது இல்லை... ஆனால் நியந்தா இருப்பதாக நியந்தாவுடன் பேசுவது போல நான் பேச வேண்டும்... நியந்தாவின் அடுத்த வசனத்துக்கு நான் எதிர்வினை காட்ட வேண்டும்... அதே போலதான் நியந்தாவும்... பின் இருவரையும் காட்டும் ஒரே பிரேமில்... முன்பு நாங்கள் தனி தனியாக காட்டிய அதே முக உடல் பாவனைகளை இம்மி பிசகாமல் காட்ட வேண்டும்.. அதில் வல்லவர்கள் ... சிவாஜி... கமல், விக்ரம்.. வடிவேலு... நந்திதா தாஸ்...ராதிகா... ரேவதி.... இன்னும் பலர் இருக்கிறார்கள்...

ஒரு இயக்குனர்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போவதற்கு முன் புல் ஸ்கிரிப்ட்... ரெடி பண்ணி விட வேண்டும்... காட்சிகளில் அவ்வபோது நடிகர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் காட்சிகளை விரிவு படுத்திக் கொள்ளட்டும் ... ஆனால் கருவின் வழியைத் தாண்டி நடிப்போ.. விரிவு படுத்தலோ போனால் அங்கு கட்டு படுத்தி விட வேண்டும்.... இயக்குனரனின் மிகப் பெரிய பொறுப்பு கட்டுப் படுத்துதல் .. அது இல்லை என்றால் வண்டி தாறுமாறாக ஓடி பெட்டிக்குள் சுருண்டு விடும்....மேல் சொன்ன கதை முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்ட கதை.... அதில் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது..... என் நடிப்போ.. நியந்தாவின் நடிப்போ..... சரியான புள்ளியில் இணைய வேண்டும்....

காரணமே இல்லாமல் பிரிந்து போன ஒரு காதல்.. 15 வருடத்திற்கு பின்.. எதிர் பாராத ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறது... உள்ளுக்குள் அலையாய் பொங்கும் அழுகை... 15 வருட இடைவெளியை தழுவிக் கொள்ளத் தூண்டும்...... பார்வையின்... தூசு விழுந்த பழைய நினைவு....... ஆழ் மன வலி ... இயலாமை... அன்பு.... ஏக்கம்.. பரிதவிப்பு.. அத்தனையும் அங்கே பீரிட்டெழ வேண்டும்... அந்த காட்சி சரியாக வரும் வரை இயக்குனர் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு போதும் என்று உட்கார்ந்து விடக் கூடாது... ஏன்.. இந்த காட்சி கிளைமேக்ஸ்சா கூட இருக்கலாம்.. அங்கு இருந்து இந்தக் கதை பின்னோக்கி நகரலாம்.. எப்டி வேண்டுமானாலும் கதையை எடிட்டிங் மேஜையின் மீது அமர்ந்து தீர்மானித்துக் கொள்ளலாம்... எல்லாவற்றுக்கும் இயக்குனரின்... சமயோத புத்திசாலித்தனம் எப்போதும் இருக்க வேண்டும்... முடிவெடுக்க வேண்டிய இடத்தில் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும்...ஒரு சிற்பியின் வேலைப்பாடு போல.. ஒரு இயக்குனர்... கதையை நகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும்.... அத்தனை கூட்டத்தையும்... கட்டுக்குள் வைத்துக் கொண்டு... நகருவது சாதாரண வேலை அல்ல.... கதையையும் திரைக்கதையையும்.... வசனத்தையும்.. சரியாக ஒரு புள்ளியில் இணைக்கும் வித்தை தெரிந்த இயக்குனரே வெற்றி பெறுகிறார்...... கதாபாத்திர தேர்வு.... காட்சி நடைபெறும் இடம்... சூழல்.... என்று இன்ச் இன்சாக சேர்த்துக் கட்டிய மாபெரும் ஒரு மாயம் தான் 2.30 மணி நேர சினிமா.... பார்க்க பார்க்க மெய் சிலிர்க்க வைப்பது இந்த சினிமா.... நான் சிறுவயதில் ஊருக்குள் திரை கட்டி போடும் சினிமாவை சுற்றி சுற்றி பார்த்திருக்கிறேன்.. ஊரே சினிமா பார்க்கும் போது நான் திரைக்கு பின்னால் நின்று எப்படி இதில் ஆட்கள் வருகிறார்கள்...பேசுகிறார்கள்.... என்று தலையை பிய்த்துக் கொண்டு நின்றிருக்கிறேன்...... ஓடி வந்து ப்ரோஜக்டரை... வெறித்து வெறித்து பார்த்திருக்கிறேன்.. திரையை பிரித்துப் பார்க்க முயற்சி செய்திருக்கிறேன்...... எனக்கு அன்றும் ஆச்சரியம் தான்,.. இன்றும் ஆச்சரியம் தான்... சினிமா இல்லாமல் இந்த... விஜய்.. கவிஜி ஆகிருக்கவே முடியாது.. எனக்கு ஒவ்வொரு சினிமாவும் ஒரு ஆசான்.... நான் சினிமாவைக் கொண்டாடுகிறேன்...... எனது சோகமோ சந்தோஷமோ.. எல்லாவற்றிக்கும் ஒரு சினிமா போதுமாய் இருக்கிறது....அது பல மேடு பள்ளங்களைக் கடந்து கம்பீரமாய்.... திரையில் பளிச்சிடுகிறது..... அதனால் தான் அதை உருவாக்குவது சவாலான ஒன்றாய் எப்போதும் இருக்கிறது...சவால்கள் நிறைந்த வாழ்க்கையை கொண்டிருப்பதால்தான்.... இயக்குனர்.... எப்போதும்....

கேப்டன் ஆப் தி ஷிப்....

திரைப் பறவை.... சற்று ஓய்வெடுக்கிறது...... மீண்டும் தன் சிறகை விரிக்கும்......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (30-Jan-15, 1:54 pm)
பார்வை : 279

சிறந்த கட்டுரைகள்

மேலே