வேண்டுகோள்

எழுத்து தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் & வாசிக்கும் சக நண்பர்களுக்கு,

எந்த ஒரு கட்டுரை, கவிதை அல்லது கதையை நீங்கள் வாசித்த பின்பும் எழுதியவரை உற்சாகப்படுத்த விரும்பும் நமது மனோநிலை இயல்பானதுதான் என்றாலும், மிகச் சாதரணமாய் அல்லது அசுவாரஸ்யமாய் எழுதப்படும் படைப்புகளில் போய் நாம் நட்பு பாராட்டுகிறோம் என்பதன் பெயரில் அந்த ஆக்கத்தை மிகைப்படுத்தி கருத்திடும் போது....

அந்த கட்டுரையை எழுதியவர் தன்னை சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. 40 கருத்துரைகளில் 35 கருத்துரைகள் ஆகா...ஒகோ, அட்டகாசம் என்ற ரீதியில் இருந்து விட்டால் தான் சரியான பாதையில் செல்வதாக அந்த எழுத்தாளர் நினைத்துக் கொண்டு மேலும் மேலும் தரம் தாழ்ந்த, கருத்து செறிவில்லாத, வாசகனைக் கிளர்ச்சியடையச் செய்யாத படைப்பாக தொடர்ந்து படைக்கத் தொடங்கி விடுகிறார்.

என் வீட்டு விஷேசத்திற்கு நீ எழுதிய மொய்க்கு உன் வீட்டு விஷேசத்தில் நான் இன்னும் அதிகமாக மொய் செய்வேன் என்ற ஒரு பிரதிபலன் செய்யும் சித்தாந்தத்திற்குள் சிக்கி சரியில்லாத விசயங்களைத் தட்டிக் கொடுத்துக் கொண்டு ஏனோ தானோவென்று படைக்க ஆரம்பித்து விடுகிறோம்.

நேரமின்மையால் அவ்வப்போது எழுத்து தளத்தின் கட்டுரைகளை நான் வாசித்தாலும் இங்கே படைப்பாளிகளை விட நிறைய நுட்பமான வாசகர்கள் கூட்டமொன்றும் இயங்கி வருவதை நான் கவனித்திருக்கிறேன்.....

ஒரு படைப்பு சரி இல்லை எனில் சாட்டையடியாய் அந்த படைப்பில் இருக்கும் குறைகளையும் வெற்று வார்த்தைப் புலம்பல்களையும், ஒப்பனைகளையும், முரண்பட்ட கருத்துக்களையும் பற்றி விமர்சிக்க சக படைப்பாளிகளும், வாசகர்களும் முன்வரவேண்டும். நேர்மையான விமர்சனங்கள் படைப்பினை மட்டுமே உற்று நோக்கி அதன் தன்மையினைப் பற்றி விவாதிக்கும். அப்படியான விவாதங்களை ஒரு உண்மையான படைப்பாளி தன்னை தன் படைப்புத் திறனை கூர் தீட்டிக் கொள்ள கொடுக்கப்பட்ட ஒரு மிக வாய்ப்பாய் எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த படைப்புகளில் தன்னை மிகச்சரியாய் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதை நாம் சரியாகத் செயல்படுத்தாவிடில் .....கருத்துக் குப்பைகளையும், தரமில்லாத படைப்புகளையும் மட்டுமே நாம் நமது சந்ததியினருக்கு விட்டு செல்ல வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய சூழல் ஏற்பட்டு விடும்.

நல்ல படைப்புகளை நம் பாட்டன்கள் படைத்தளித்ததால் தானே... இன்று நாம் நெஞ்சு நிமிர்த்தி ஒப்பற்ற கவிதைகளுக்கும், கதைகளுக்கும், காவியங்களுக்கும் சொந்தக்காரர்கள் என்று சொல்லி கொள்கிறோம்....

இப்பேறு நிலையை நம் சந்ததியினர் பெற வேண்டாமா...?


ப்ரியமுடன்
தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா... (31-Jan-15, 2:41 pm)
Tanglish : ventukol
பார்வை : 420

மேலே