மனசின் பக்கம் முணு வித பேச்சு முழுமையாய்

போட்டிப் பேச்சு...

தமிழ்க்குடில் நடத்திய போட்டிகளுக்கான பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை சொன்னபடி அனுப்பிவிட்டார்கள். சான்றிதழ்களை தமிழ்க்குடில் அறக்கட்டளை வலைப்பூவிலும் முகநூலிலும் பகிர்ந்திருந்தார்கள். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கான சான்றிதழும் பரிசுத்தொகைக்கான காசோலை வந்து சேர்ந்து விட்டதாக மனைவி சொன்னார். சான்றிதழை ஸ்கைப்பில் காண்பித்தார். போட்டியை சிறப்பாக நடத்தி, அதற்கான பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை விரைவாய் அனுப்பியமைக்கு குடில் நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் அவர்களின் சிறப்பான மக்கள் தொண்டு.

குடிலை நீங்களும் வாசிக்க : "தமிழ்க்குடில்"


***
சகோதரர் ரூபன் மற்றும் திருவாளர் யாழ்பாவாணன் இருவரும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான கடைசி தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கதைகளை அனுப்ப கடைசித்தேதி பிப்ரவரி-15. இன்னும் பதினைந்து தினங்கள் இருப்பதால் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு வெற்றிக்கனியைத் தட்டிச் செல்லுங்கள். தொடர்ந்து வலையுலகில் போட்டிகள் நடத்தி சிறப்புச் சேர்க்கும் அந்த இரண்டு எழுத்தாளர்களையும் வாழ்த்துவோம்.

போட்டி குறித்து அறிய : "ரூபனின் எழுத்துப்படைப்பு"

***
சேனைத்தமிழ் உலா நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான கடைசித் தேதி 10/02/2015. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். மேலும் சேனையில் இணைந்து உங்களது எழுத்துக்களைப் பகிர்ந்து நல்ல நட்புக்களின் உற்சாகமான உணர்வுப் பூர்வமான கருத்துக்களைப் பெற்று உங்கள் எழுத்தை மேலும் மெருகூட்டுங்கள். தாங்கள் இணைந்தீர்கள் என்றால் கண்டிப்பாக அவர்களின் அன்பில் நனைந்து இன்புறுவீர்கள்.

சேனையின் குடும்ப சிறுகதைப் போட்டி குறித்த விவரங்களுக்கு : "சேனைத்தமிழ் உலா"

***
எழுத்து.காம் நடத்தும் கவிதைப் போட்டிக்கான கடைசி தேதி : 08/02/2015. போட்டியில் பங்கு பெற எழுத்து.காமில் உறுப்பினராய் இருக்க வேண்டும்.

போட்டி குறித்த விவரம் அறிய : "எழுத்து.காம்"

*********************

நம்ம பேச்சு

சிறுகதைகள் மட்டுமே எழுதி வந்த என்னை தொடர்கதை எழுத வைத்தது சில நண்பர்கள்தான் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறேன். 'கலையாத கனவுகள்' என்ற முதல் தொடர்கதை (இது தொடர்கதை இல்லை மெகா தொடர்ன்னு மைண்ட்வாய்ஸில் சிலர் திட்டுவது கேக்குது... வேணாம்... விட்டுடுங்க...) பெற்ற வரவேற்பைவிட தற்போது எழுதும் 'வேரும் விழுதுகளும்' நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எல்லோருமே கிராமத்து நடையில் பயணிக்கும் கதையை விரும்பிப் படிக்கிறார்கள். நம்ம எழுத்துக்கு... அதுவும் தொடர்கதைக்கு பெரியவர்கள் எல்லாம் சொல்லும் கருத்துக்கள் உண்மையில் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது.

***
நேற்று பள்ளி ஆண்டு விழாவில் ஸ்ருதியும் விஷாலும் 3000 ரூபாய்க்கு மேல் செலவு வைத்து நடனம் ஆடியிருக்கிறார்கள். எப்பவுமே ஸ்ருதியின் நடனம் அருமையாக இருக்கும். பெரும்பாலும் பின் வரிசையில் வைத்து விடுவார்கள் என்பதே வருத்தமாக இருக்கும். இந்த முறை முதல் ஆளாக நின்று கலக்கலாய் ஆடியிருக்கிறது. விஷாலும் முதல் ஆள்... ஆட்டத்தில் அக்காவை தூக்கி சாப்பிட்டுவிட்டான். விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எனது நண்பனும் தேவகோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவருமான பேராசிரியர். கரு.முரு(கன்) மேடையிலேயே 'மாப்ள கலக்கிட்டேடா' என தூக்கிக் கொஞ்சினானாம். நானும் வீடியோ பார்த்தேன்... குமாருக்கு அப்படியே நேரெதிர்... என்னமா ஆட்டம் போடுது... அவங்க அம்மாக்கிட்ட சுத்திப் போடச் சொல்லியிருக்கேன்... பின்னே பெத்தவங்க கண்ணுதான் படக்கூடாதுன்னு சொல்லுவாங்க.

***
இன்னைக்கு இது என திட்டமிட்டு சென்ற வாரம் புதன் கிழமை சிறுகதை / கட்டுரை மட்டும் பதியாமல் மற்ற ஆறு நாட்களும் வெற்றிகரமாக பதிவுகளை இட்டு பேரைக் காப்பாற்றிக் கொண்டேன்... இனி தொடருமா தெரியாது... ஏன்னா சொல்லி எழுதுவதை விட எதாவது எழுதிப் போடுவது சுலபமாத் தெரியுது... ஹி...ஹி...

***
அலைனில்தான் இந்த மாதமும் ஜாகை... அறையில் கேட்டு சமைப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டேன். இன்று புளிக்குழம்புடன் ஆரம்பிச்சாச்சு. இனி ஹோட்டல் சாப்பாட்டில் இருந்து விடுமுறை.

**********************

நடப்புப் பேச்சு

அலைனில் தங்கியிருக்கும் அறையில் ஊருக்குப் பொயிட்டு நேற்றுத்தான் ஒரு மலையாளி வந்திருக்கிறார். சென்ற மாதம் அவருக்குப் பதிலாகத்தான் நான் இருந்தேன். இந்த மாதமும் தங்க வேண்டிய சூழல் வந்ததால் அவர்கள் எனக்கு ஒரு கட்டில் போட்டுக் கொடுத்தார்கள்... மலையாளிகள் என்றாலும் நல்லவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரில் இருந்து வரும்போது ஏர்போர்ட் டூட்டி ப்ரியில் பாட்டில்களை அள்ளி வந்து விட்டார் போலும். நேற்று நான் அபுதாபியில் இருந்து வரும் போது புல் போதையில் இருந்தார். இன்று பணிக்குப் போகவில்லை போலும்... மதியம் நான் வேலை முடிந்து வரும் போது உடம்பில் இருந்த கைலி தனியே கிடந்தது கூட அறியாமல் புல்லாகக் கிடந்தார். இப்போத்தான் எழுந்தார்... வேகவேகமாக தலை சீவினார்... பாட்டிலில் தண்ணீர் பிடித்தார்... டூட்டிப்ரி பாட்டிலுடன் பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டார். இப்படியும் மனிதர்கள்...



***
நான் அலைன் வந்ததில் இருந்து தினமும் மதியம் சாப்பிடும் மலையாளி ஹோட்டலில் பணி செய்யும் பையனை, இரவு சாப்பிடச் செல்லும் கடையில் மசாலா தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். என்ன இங்க என்றதும் எங்க ஹோட்டல்ல மசாலா தோசை கிடைக்காதுல்ல என்றவன், என்னுடன் பேச ஆரம்பித்தான். 'சேட்டா... நானு பாம்பேல பிஎம்டபிள்யூ ஷோரூம்ல பணி செஞ்சேன். எனக்கு கீழ 10 பேர் வேலை பார்த்தாங்க. ஊருக்குப் போனப்போ விபத்துல நல்ல அடி. பின்ன தேறி வரும்போது அப்பா இவட கூட்டியாந்தாச்சு... இங்க 1200 திர்ஹாம் சம்பளம். காலையில் 8 மணிக்குப் போன இரவு 2 மணியாகும் போயி கிடந்து உறங்க... அங்கயே இருந்திருக்கலாம்... படைச்சவனுக்கு பிடிக்கலை போல என்று புலம்பினான். ஜான் ஆபிரகாமுடன் நிற்கும் போட்டைவை மொபைலில் இருந்து எடுத்துக்காட்டி... அவட இருந்திருந்தா இன்னேரம் நல்ல சம்பளம் கிடைக்கும் என்றான்... உண்மைதான் 17, 18 நேரம் பணி எடுத்து 20.000 இந்திய ரூபாய் சம்பளமாகப் பெற்று அதில் செலவு போக மிஞ்சுவது என்ன...? வாழ்வின் இழப்பை ஈடு செய்யுமா இந்த மிச்சம்..?

மனசின் பக்கம் அடுத்த வாரம் வரும்
-பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (1-Feb-15, 11:20 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 184

மேலே