மிச்சக்காசு

மிச்சக்காசு

காலை நேரம். கதிரவன் தன் கதிர்களை அகிலமெங்கும் பரப்பி பனிக்குளிரை போக்கி உடலை இதமாக்கி கொண்டிருந்தான். அந்த இதமான வெப்பத்தில் வேலையும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது

வேகமாக நடந்து கொண்டிருந்த எனது கால்களை சிறு சல்லிக்கற்களை கொண்ட சரிவு நிலத்தில் வைக்கவும் ஒரு சிறு சருக்கல். உடனடியாக நிதானத்திற்கு வர முடியாததினால் சிறு பள்ளத்தில் இருந்த கருங்கல் கட்டுமானத்துடன் மோதுண்டு நின்றேன். முழங்காலின் கீழே சிறு காயம். காலைநேரம் என்பதால் அதிக இரத்தம் வெளியேறவே கூட இருந்தவர்கள் என்னை தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றி அருகிலிருந்த வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்த இடத்தில ஊரைப் பற்றிய சிறு விபரிப்பு.-

ஊரும் சிறிது. மக்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான வசதிகளும் குறைவு. ஒரே ஒரு அரச வைத்தியசாலையும் ஒரே ஒரு தனியார் மருந்தகமும். இரண்டுக்கும் ஒரே ஒரு மருத்துவர்.

காயத்தினை பார்த்ததும் மருந்து சீட்டினை எழுத தொடங்கினார்.

"ஊசியும் வாய்வழி எடுக்கிற மருந்துகளும் கடையில தான் வாங்கணும்.... வாங்கிகொண்டு ஆஸ்பத்திரிக்கு வாங்கோ... ஊசி போட்டுக்கலாம்." என்றார்.

வெளியில வந்ததும் கூட வந்த ஒருவர் மருந்து சீட்டுடன் மருந்தகத்தினுள் சென்றார். சில மணிநேரத்தின் பின்னர் மருந்துகளை வாங்கிகொண்டு வந்து என்னிடம் தந்தார். கூடவே ஒரு பிளாஸ்டர் வேற.

மருந்துகளை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்ட நான் பிளாஸ்டர் ர பார்த்து 'இது எதுக்கு. காயத்துக்கு இதை ஓட்டுறதா. சுத்த முட்டாளா இருக்காரே...' என யோசித்திட்டு இருக்கும் போதே

"ஆஸ்பத்திரிக்கு போயி தான் மருந்து கட்டனும்" கூட வந்தவர் கூற.

'மருந்து கட்டுறது அங்க என்றால், பிளாஸ்டர் எதுக்கு?' மீண்டும் யோசனை.

ஆஸ்பத்திரியினுள் நுழைந்த போதே தலை சுற்றியது. அவ்வளவு கூட்டம். சனம் முன்னாடியே வந்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். மருந்து கட்ட விடியுமே என் யோசித்துக்கொண்டு இருக்கும் போது கூட வந்தவர் என்னை பின்புறமாக வர சொன்னார். அங்கு சென்றதும் எனக்காகவே காத்துகொண்டு இருந்தவர்கள் போல ஓடி வந்து சிகிச்சை அளித்தார்கள்.
ஊசியும் போட்ட பின்
"ஊசி வாங்கிட்டு வந்தீர்களா?" என கேட்க
"ஆம்" என்றவாறு எடுத்து கொடுத்தேன்.
அதை வாங்கி அலுமாரியினுள் வைத்துக்கொண்டார்கள்.

'நல்லாத்தான் மருந்து வியாபாரம் நடக்கிறது' என்று எண்ணியவாறு வெளியில் வந்து வாகனம் வரும் வரை காத்துக்கொண்டு இருந்த போது மீண்டும் அந்த பிளாஸ்டர் என்னை உறுத்திக்கொண்டு இருந்தது.
அருகில் நின்றவரிடம் அப்பாவிபோல கேட்டபோது கிடைத்த பதில்,
.
.
.
"மிச்சக்காசுக்காக தந்தது"







(மிகுதி பணத்திற்காக இனிப்புக்கள் கொடுத்த காலம் போய் பிளாஸ்டர் கொடுக்கிற காலம் வந்துவிட்ட இந்த சுவாரசியமான நிகழ்வை எனது 'உயிரின் உறவிடம்' சொல்லப் போய் கடைசியில் நான் காயப்பட்டத்தை தெரிந்து மங்களம் வாங்கிக்கட்டிக்கொண்டு இன்றுவரை காயத்தைப் பற்றியே பேசாது இருப்பது தனிக்கதை.)

[மிச்சக்காசு - மிகுதிப் பணம், Balance money ]

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (4-Feb-15, 11:43 pm)
பார்வை : 321

மேலே