நெஞ்சு பொறுக்குதில்லையே ​- ​மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி

அறியா மழலையாய் பிறந்தவர் இங்கே
அறிவால் உயராமல் அரிவாளை ஏந்தும்
அறியாமை இருளில் நாளும் மோதுவது
அகலத்தில் நெஞ்சு பொறுக்குதில்லையே !

ஆதிகால மனிதன் அறிந்திடாத சாதிமதம்
ஆதிக்கம் செய்திட புரிந்திடும் அரசியலால்
ஆதியும் அந்தமும் அறியாத அப்பாவிகள்
அழிவதால் நெஞ்சு பொறுக்குதில்லையே !

மலராத மலர்களும் மடிகிறது மண்ணிலே
மனிதமே இல்லாத மனங்களின் வெறியாலே
மஞ்சளே பூசிடாத பிஞ்சுகளும் பலியாகுதே
மனிதஇனமே நெஞ்சு பொறுக்குதில்லையே !

பகுத்தறிவு கொண்டு வகுத்தறியா நெஞ்சங்கள்
பகிர்ந்து உண்ணா பறித்திடும் கொள்கையிங்கே
ஈன்றிட்ட பெற்றோரோ முதியோர் இல்லத்திலே
ஈரமிலா மனிதரால் நெஞ்சு பொறுக்குதில்லையே !

வரிசையில் உள்ளன வருத்தங்கள் கொட்டிடவோ
வரம்பும் உள்ளனவே விதியெனும் போட்டியினால் !
வளரும் தலைமுறையே சிந்திப்பீர் இனியேனும்
வளர்வீர் பண்போடு தமிழன்என்ற உணர்வோடு !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Feb-15, 9:25 am)
பார்வை : 529

மேலே