என் பெண்டாட்டிய கடத்திட்டுப் போயிட்டான்- ஒரு பக்க நகைச்சுவைக் கதை

ஒருவர் வங்கியில் கடன் வாங்கி கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தவில்லை. ஓரளவு கால அவகாசம் கொடுத்த வங்கி அதன் பிறகும் கடன் தொகை வரவில்லையெனில் ஒரு குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு ஜப்தி செய்வதாக நோட்டீஸ் கொடுத்து விட்டது.

குறிப்பிட்ட அந்த தேதியில் தன் பரிவாரங்கள் புடை சூழ அதிகாரியும் சென்று விட்டார். வீட்டில் கடன் வாங்கியவரின் மனைவி மட்டும் இருந்தார். ஜப்தி செய்யும் போது வீட்டு மனிதர் யாரேனும் இருக்க வேண்டும். முன்னிலை என்று போட்டு அவர் பெயரை எழுத வேண்டும் என்பது விதி.

கடன் வாங்கியவரின் மனைவி பெயர் வசந்தி. அதிகாரி சில பொருள்களை ஜப்தி செய்த பிறகு வாடிக்கையாக ஜப்தி அறிவிக்கை (intimation) கொடுக்கச் சொல்லி தன்னோடு வந்த எழுத்தருக்கு உத்தரவிட்டார்.

எழுத்தரும் முன்னிலை : திருமதி வசந்தி முருகேசன் என்று கம்யூட்டரில் டைப்படித்தார். ஜப்தியான பொருள்கள் : என்று தலைப்பிட்டு பொருள்களின் பட்டியலை ஒன்றன் கீழ் ஒன்றாக டைப்படித்தார். பிறகு செலக்ட் செய்து நம்பரிங் கொடுத்தார். இரண்டு பிரிண்ட் – அவுட் எடுத்து அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி ஒன்றை அந்த அம்மாளிடமும், இன்னொன்றை அதிகாரியிடமும் கொடுத்து விட்டார். பரிவாரம் புறப்பட்டது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த அதிகாரி தன் மனைவியை கடத்திச் சென்று விட்டதாக கணவன் போலிசில் புகார் கொடுத்தார். அதற்கு ஆதாரமாக அதிகாரி நீட்டிய பேப்பரையே காண்பித்தார். கணவன்தான் மனைவியை எங்கோ உறவினர் வீட்டில் மறைத்து வைத்து விட்டு பொய்ப்புகார் கொடுக்கிறார் என்று காவல் துறைக்குத் தெரிந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அப்படி என்ன அந்த காகிதத்தில் இருந்தது?

செலக்ட் பண்ணி நம்பரிங் கொடுத்த போது திருமதி வசந்தி முருகேசனையும் சேர்த்து செலக்ட் செய்து விட்டார் எழுத்தர். ஆக, ஜப்தியான பொருள்கள் பட்டியலில் 1. திருமதி வசந்தி முருகேசன் என்று வந்து விட்டது! பிறகு இரண்டு மூன்று என்று எண்ணிக்கையிட்டு மற்ற பொருள்கள் இடம் பெற்றன.

அதிகாரியும் அவசரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டார்!

எழுத்தர் செய்த தவறால் அதிகாரி மீது ஆள் கடத்தல் வழக்கு!

கேசிலிருந்து தப்பிப்பதற்குள் அதிகாரிக்கு போதும் போதும் என்றானது தனிக்கதை!



அருணை ஜெயசீலி.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (16-Feb-15, 2:40 pm)
பார்வை : 1632

மேலே