உழைப்பே உயர்வைத் தரும்,

உழைப்பே உயர்வைத் தரும்.,
...................................................

ஓர் ஊரில் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். நாட்டிலேயே, தான் ஒருவர் மட்டுமே சுகபோகத்தை ஏராளமாக அனுபவிப்பதாக அந்தப் பணக்காரருக்கு நினைப்பு. ஒரு நாள் அந்தப் பணக்காரரைத் தேடி ஒரு துறவி வந்தார்.

அந்தத் துறவியை அந்தப் பணக்காரர் வணங்கி உபசரித்தார். பின்னர் அந்தத் துறவியைப் பார்த்து, “உலகம் முழுவதும் சுற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. என்னைவிட சுகத்தை அனுபவிக்கிறவர்களை தாங்கள் பார்த்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார் அந்தப் பணக்காரர்.

இலேசாகப் புன்னகைத்த துறவி, “உன்னைவிட சுகமாக வாழ்கிறவரை வேறு எங்கும் தேட வேண்டாம். அவர் உங்கள் நாட்டிலேயே இருக்கிறார்” என்று அந்தப் பணக்காரரைப் பார்த்துக் கூறினார்.

“என் நாட்டிலா? எங்கே?” என்று கேட்டார் அந்தப் பணக்காரர்.

“வாருங்கள் நேரிலேயே அவரை நான் காட்டுகிறேன்”, என்றார் துறவி. பின்னர் அந்தப் பணக்காரரை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது கடுமையான கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வெய்யில் பற்றிய கவலையே இல்லாமல், வியர்வைக்கு அஞ்சாது, அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஓர் இளைஞனைப் போல் உழவுப் பணியை மேற்கொண்டு இருந்தார்.

அந்தப் பெரியவரை சுட்டிக்காட்டி, “உன்னை விட சுகம் அனுபவிக்கும் சுகபோகி”, என்று பணக்காரரிடத்தில் கூறினார் அந்தத் துறவி.


“இந்தக் கிழவன் என்னைவிட சுகபோகியா? கேலி வேண்டாம்” என்றார், அந்தப் பணக்காரர் துறவியைப் பார்த்து.துறவி அந்தப் பணக்காரரைப் பார்த்து, மீண்டும் புன்னகைத்தார்.

“செல்வந்தரே, இந்தத் தள்ளாத வயதிலும் அவர் உழைப்பை பாருங்கள். கடுமையான உழைப்பு. வெயிலுக்கு அஞ்சாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.

இந்த உழைப்பிற்கு பின்னே அவருக்கு நன்றாக பசி எடுக்கும். கூழோ, கஞ்சியோ, எதுவானாலும், அவருக்கு அமிர்தம் தான்.

மீண்டும் பகல் முழுவதும் உழைப்பார். அந்த உழைப்பின் களைப்பில் இரவில் நிம்மதியாக உறங்குவார்.

சுகபோகம் என்பது, வெயிலையும், பனியையும், புயலையும், மழையையும் ஆனந்தமாய் எதிர்கொள்ளக் கூடியது. அதை எதிர்கொள்ள, அவர் எப்போதும் தயார்.

உழைப்புக்கு பின் வரும் உறக்கம் தான் சொர்க்கம். உழைக்காமல் வரும் எதுவும் சுகபோகமாகாது.

இப்போது கூறுங்கள் நீங்கள் சுகபோகியா? அல்லது அந்த உழைப்பாளி சுகபோகியா?” என்று பணக்காரரைப் பார்த்து கேட்டார் அந்தப் பெரியவர்.

உடனே அந்தப் பணக்காரர், அந்தத் துறவியைப் பார்த்து வணங்கினார்.

“என்னை மன்னித்து விடுங்கள், நான் உழைக்கத் தயாராகிவிட்டேன்” என்று கூறினார்.

ஆம்.,நண்பர்களே.,

உழைப்பே உயர்வைத் தரும்.,

தினமும் கடுமையாக உழையுங்கள்.

வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (17-Feb-15, 5:50 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 1028

மேலே