வந்துவிடேன் பிரேமி

எண்ணிப்பார்க்கிறேன் பிரேமி,,,
அன்று உன் முகம் முழுக்க அத்தனை
பூரிப்பு,,
இருக்காதா பின்னே,,
எத்தனை கோவில்,,
எத்தனை வேண்டுதல்,,
ஏழு வருடமாய் ஏங்கி ஏங்கி
நீ செய்த தவத்தின் பலனாய்
நம் செல்லக்குட்டி உனக்குள்
சங்கமித்த செய்தியை
கேட்டதும்
சீனிக்கண்ணீரால்
என் தோள் நனைத்த கணம் அப்படியே
பசுமையாய் நிழலாடுகிறது
என் கண்ணில் இன்றும்,,
மேடுதட்டிய வயிறை
தொட்டு தொட்டு நீ கண்ட
கனவுகள் தான்
எத்தனை எத்தனை,,
அத்தனையும் பிரசவசித்த
கையோடு கண்மூடிக்கொண்டாயே,,
நீ போன அன்றிரவே நானும்
உன்னோடு வந்திருப்பேன்,,
மிகச்சரியாய் அந்நேரம் அழுத
நம் அம்முக்காகவே தான்
இன்று வரை பிடித்துவைத்திருக்கிறேன்
இவ் உயிரை,,
புட்டிப்பால் குடிக்க அடம்பிடித்தவளை
எப்படியோ தாக்காட்டி சமாளித்துவிட்டேன்,,
தாலாட்டு பாடத் தெரியாது
போனாலும்
முதுகேற்றி அம்பாரி ஆட்டம் காட்டி
தூங்க வைக்க கற்றுக்கொண்டேன்,,
நல்ல வேளையாய் நம் பட்டுக்குட்டி
உன்னைப் போல் சமத்துக்குட்டியாய்
அழாமல் பள்ளிக்கு அவளே
கிளம்பிவிடுகிறாள் இப்போதெல்லாம்,,
இரவானால் உன் நினைவில்
நான் மூழ்கிப்போனாலும்
காலைத் தேநீரோடு அவளை
எழுப்பவேனும் நான் விழித்துவிடுகிறேன்
விடியும் முன்னமே,,
நீயும் நானுமாய் இதுவரை
நானே இருந்து வளர்த்துவிட்டேன்,,
சிறு பாரமும் உணராத எனக்குள்
ஏனோ இன்று பெரும்பதற்றம்,,
சற்றுமுன் அழைப்பில் வந்த
அம்முவின் ஆசிரியை
உடனே உன்னை பள்ளிக்கு அனுப்பும்படி சொல்லிவிட்டு
பயம்வேண்டாம்,,
நல்ல விசயம் தான் என சூசகமாய்
சொல்லிவிட்டு இணைப்பைத்
துண்டித்தவுடன்,,
துடிக்கும் இதயத்தை ஆசுவாசப்படுத்திக்கொண்டே
சென்று கொண்டிருக்கிறேன்
அம்முவின் பள்ளி நோக்கி,,
இலைமறை காயாய் காரணம்
புரிய புரிய
மனம் தேடுகிறது உன் அருகாமையை!
பருவமாற்றத்தை புரிந்தும் புரியாமல்
தேம்பி நிற்கும்,,
நம்ம பொண்ண
அணைத்து தேற்ற
ஒருசில நாழிகை மட்டும்
மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிடேன்
பிரேமி,,,,,,,,

எழுதியவர் : புதுமை தமிழினி (22-Feb-15, 5:04 pm)
பார்வை : 656

மேலே