கொடுமணம்வரலாற்று தடம்

பயணங்கள் தரும் தியானம்.... உணருதலின் உள் சங்கமம்....தீரவே முடியாத தாகத்தை நமக்குள் தெளித்துக் கொண்டே செல்லும்... வெற்றிட மழை அது....கவனத்தை ஒரு மனதாக சேர்க்கும் நுட்பம் எல்லா பயணங்களுக்கும் உண்டு என்றே நம்புகிறேன்....முடிய முடிய நீளும்... முடியாத நீட்சியின் தொடுவானத்தில் ஒரு முனை நம்மோடே வருவதில் தான் நூலிழை திருப்பங்கள் பயணம் எங்கும்....கிறுக்கல்களை கவிதையாக்கும்... காகித பூக்கள் எனது பயணமெங்கும்....நான் பயணிக்க பயணிக்க பயணமாகவே மாறி விடுவதில் எனக்குள் இருக்கும் நான் செத்து போகிறான்.... நானுக்குள் இருக்கும் நான் பிழைத்துக் கொள்கிறான்....தேடல்களில் இல்லாத எதுவும் சிந்தனையாய் இருக்க முடியாது என்பதாக எனது சிந்தனையும்... தேடலாகவே மாறி விடுவதில்தான் எனது பயணம், நான் நினைத்தது போல அல்லாமல் வேறொன்றாக இருக்கிறது...

வேர் தேடி செல்லுதல் எவைக்கும் உண்டு... அவை கொண்ட சுவைக்கும் உண்டு...பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கும் நவீன வசனம் போல ஒரு துளி இப்பக்கம்.. மறு துளி அப்பக்கம்.. இடையினில் நீண்டதொரு வாசகமாய் நான் என்ற நான்...

எப்பக்கமும் என் பக்கமாய் அப்பக்கத்தில் நான் பக்கமாய்...சிறகு முளைத்த வானம் போல வானமெங்கும் பறவையாகிய போதுதான்... கண்கள் முழுக்க காடாய் விரிந்து கிடந்தது கொடுமணல்... என்ற பகுதி....

கொடுமணல் என்பது ஒரு தொல்லியல் களம்... இது ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளகோயில் மற்றும் சென்னிமலைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்...ஈரோடு நகரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டரில் இருக்கிறது....காவிரி ஆற்றில் கலக்கும் எங்கள் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருப்பதில் பெரு மகிழ்வு....ஆனால் நொய்யல் அங்கு இல்லை என்பது பேரதிர்ச்சி.....(கோவை தோழர்கள் கவனிக்க) ஒரத்தபாளையம் அணை அத்தனை அற்புதம்.... ஆனால் நீருக்கு பதில் முழுக்க கழிவு நீர்....(இது வேறு கட்டுரை)

சங்க இலக்கிய பதிற்றுப்பத்தில் இவ்விடம் கொடுமணம் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...சேர நாட்டின் தலைநகரான கரூரை மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இவ்விடம் இருந்திருப்பது சமீம கால தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது....கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவ்விடத்தில் கால் வைக்க வைக்க எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளை என்னவென்று வர்ணிப்பது.... அது ஒரு வகை அமானுஷ்யம்.... நம் மூதாதையர்களுடனான ஒரு வித தொடர்பை நான் பெற்று விட்டதாகவே எனது கற்பனை கண்கள் விரிந்தன....அங்கும் இங்கும் நடந்தேன்.. ஓடினேன்... கிடைத்த மண்டை ஓடுகள்.. கற்கள்... நடுகல்களுடன்.. என்னை இணைத்துக் கொண்டே இருந்தேன்.... அங்கிருந்த காலம் சற்று நின்று விற்றதாக ஒரு எண்ணம்....

கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய அடக்க களமாகக் காணப்படுகின்றன. இதனை சுற்றி சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.... அங்கிருந்த ஆடு மேய்ப்பவர்களும் செவி வழி செய்தியாக அதை உறுதி படுத்தினார்கள்....இக்களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் இராசு, செல்வி முத்தையா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. நான் கண்ட சில புதைகுழிகள்....கீழிடையாக இரு அறைகள் கொண்டதாகவே இருந்தன.... சில இடங்களில் நடுகல்கள் பாதி பனைமரம் அளவுக்கும் சற்று அதை விட குறைவான உயரத்துக்கும் இருந்தன... அது எப்படி இத்தனை காலம் அப்படியே நிற்கிறது என்ற பிரமிப்பில் நான் மிரண்டு சுருண்டு மூளையை இன்னும் கொஞ்சம் இழுத்து இழுத்து யோசிக்க வேண்டியாதாகப் போனது...

கொடுமணலில் நடந்த அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக் கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக் கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.

சேர நாட்டைச் சார்ந்த இந்த தொழில் நகரம் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தோடு வியாபாரச் சாலைத் தொடர்புகொண்டிருந்தது என்பது தேட தேட கிடைத்துக் கொண்டே இருக்கும் உண்மை என்பதற்கு இதை விட சான்று வேறு என்ன இருக்க முடியும்.... இத்தனை பக்கத்தில் இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம் இருப்பதில் ஒரு கணம் ஸ்தம்பிக்காமல் இருக்க முடியவில்லை...

இதோடு மட்டுமலாமல் கொடுமணலில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின்போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள், இரும்பு உருக்காலை, சிப்பி, கிளிஞ்சில் அழகொப்பனை வளையல்கள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள் போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன.
ரோம் பேரரசில் புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் பலவும் கிடைத்தன. மேலும், செப்பால் ஆன சிங்கச் சிலை மற்றும் இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு கொடுமணல் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய நகரமாக அறியப்பட்டுள்ளது. கிமு 500க்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையின் சிதிலங்களையும் பல ஆபரணங்களையும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது கூடுதல் செய்தி....


சுற்றியும் புதையப் பட்டிருக்கும் கல்களின் நடுவே மண்ணுக்குள் கண்டிப்பாக ஒரு தாலியோ அதற்கு மேற்பட்டவையோ இருக்கலாம், அதற்குள் மனித பிணங்கள் இருக்கலாம் என்பது அதன் சுற்று வட்டார குடிகளின் எண்ணம்.... அது நிஜமாகதான் இருக்கும் என்றே எனக்கும் படுகிறது... ஏனெனில் கண்ட காட்சிகள்... வெறும் காட்சிப் பிழையாக இருக்க முடியாது... காலப் பிழையாக வேண்டுமானால் இருக்கலாம்.... காலப் பிழை என்பது பின்னால் வரும் உயிர்கள் கண்டு கொள்ள, விட்டு செல்லும் அடையாளம் என்பது மறுக்க முடியாத உண்மை...ஆம்.... மனிதகுலம் ஒவ்வொரு கால கட்டத்திலும் தன் வரலாறுகளை ஏதாவது ஒரு வழியில் பதிந்து விட்டு தான் செல்கிறது.... அது தான் நம் எதிர்காலத்தின் நூலிழை தொடர்பின் பாதைகள் என்பது எத்தனை யோசித்தும் கிடைக்காத மூலக் கவிதை....கவிதையின் கால் தடம் எனது தேடலின் பயணமாய் இருப்பதில் நான் மீண்டும் மீண்டும் மீண்டு விடுகிறேன்.... ஒரு மீட்சியென அல்லது ஒரு நீட்சியென....

கொடுமணம்......வரலாற்று தடம்...

நன்றி விக்கிபீடியா...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (24-Feb-15, 9:38 pm)
பார்வை : 129

சிறந்த கட்டுரைகள்

மேலே