கடலோர கவிதைகள்

அலை வந்து
தொட்டுப்போகும்
ஈர மணற்பரப்பில்
உனது காலடிச்சுவடுகள் .....

நான் வைத்த பெயர்,

கடலோர கவிதைகள் !

==================

விழுங்கிக்கொண்டே
இருக்கிறேன்
உன்னை
எனது விழிகளால் .......
நீயோ
தீர மாட்டேன்
என்கிறாய் !

==================

நீ
சேலைக்கு மாறினாய்
சுடிதார்கள்
சிறகொடிந்தன !

==================

முன்பக்கம்
பின்பக்கம்
என
இரண்டே பக்கங்களினாலான
கவிதைத்தொகுப்பு
நீ !

==================

காட்சிகளைக்
குடிக்கும்
எனது கண்களுக்கு
கள்ளாக
நீ !

==================

நீ
கட்டிப்பிடித்து
உறங்கிய
தலையணைக்கு
இந்திர லோகத்தில்
அடிதடி !

==================

நீ
நகம் கடித்துத்
துப்பினாய் !
எறும்புகள்
மூக்கு வியர்த்தன !

==================

உனது
ஆடைகள்
கவிதையெழுத
நான் கொடுத்த
தலைப்பு
சுகமான சுமைகள் !

==================

உனது
பிறந்தநாள் ,
கேக்குகளின்
நாட்காட்டியில்
தீபாவளி
என்றிருக்கிறது !

==================

வெயிலுக்குள்
நீ
நுழைந்தால்
சூரியன்
ஸ்ட்ரா தேடுகிறான் !

==================

எப்போதும்
எருமை போலத்தான்
இருப்பேன் ...
உன்னைப்
பார்க்கும்போது மட்டும்
காற்றின் சிறு
சலனதிற்கே
உடைந்து விடும்
நீர்க்குமிழியாகிறேன் !

==================

உனது
தேர்வுத்தாளில்
நீயெழுதிய
தவறான விடை,
சரியான விடையைப் பார்த்து
கொக்காணி காட்டுகிறது !

==================

நீ
தொண்டை செருமினாய் ......
ஏழு ஸ்வரங்களும்
ஜுரத்தில் படுத்தன !

==================

ஏதோ
சொல்லவந்து
மறந்து விட்டேன்
என்றாய் !
நீ
சொல்லாத
அந்த வார்த்தைகள்,
மறுநொடியே
வார்த்தைகளின்
உலகினின்று
சஸ்பென்ட் ஆயின !

==================

நகைக்கடைக்கு
நீ
சென்றாய் .......!
உனது
புன்னகை
வேண்டுமென்று,
பாப்பா நகை
அம்மா நகையிடம்
அழுது அடம்பிடித்தது !

==================

நீ
வெளியில்
வருகிறாய்
என்று தெரிந்தால்
கொஞ்சம்
தென்றலைப் பூசிக்கொண்டு
தன்னை
டச்சப் செய்துகொள்கிறது
சூழல் !

==================

பூக்களை வைத்து
ஒத்திகை
பார்த்துக் கொள்கிறேன்
நீ தந்த
முத்த அனுமதிக்கு !

==================

நீ
மடியில்
வைத்துக்கொண்டால் மட்டும்
டவர் காட்டுவதென
சதியாலோசனையில்
ஈடுபட்டன
உனது
லேப்டாப்பும்
மோடமும் !

==================

குளிக்கும்போது
நீ
ஹம்மிங் செய்த பாட்டு ......
ஆஸ்காருக்குப்
போகாமலேயே
ஆஸ்கார் வாங்கியது !

==================

கிளி பேசுகிறதே
என்று
ஆச்சர்யப்பட்டாய் !
ஆப்பிள் பேசுகிறதே
என்று
அது
ஆச்சர்யப்பட்டது !

==================

உன்னுடன்
பெட் கட்டித்
தோற்ற பிறகுதான்
தோல்வி
எனக்குப் பிடித்தது !

==================

தேவதைகள்
சிறகுகளோடுதான்
திரிவார்கள
என்கிற மரபை
உடைத்துப் போட்டவள்
நீ !

==================

நீ
வாசிக்கும்போது மட்டும்
எனது கவிதைகள்
சுவாசிக்கின்றன !

@@@@@@@@@@@

எழுதியவர் : கிருஷ்ணதேவன் (6-Mar-15, 7:49 am)
Tanglish : kadalora kavidaigal
பார்வை : 809

மேலே