உன் பேர் சொல்ல ஆசை தான்

உன் பேர் சொல்ல ஆசை தான்....

உள்ளம் உருக ஆசை தான்... உயிரில் கரைய ஆசைதான்....பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னைப் படைத்த தாலே..... என்னால் இந்தப் பாடலை இதற்கு மேல் கேட்க முடியவில்லை.... கேட்பதும் கேட்காமல் போவதும் காற்றின் அலைவரிசையின் கொண்டை ஊசி வளைவுகளுக்கு தெரிவதில்லை... இல்லையா...?....அது கணக்கின் விரல் பிடித்து காதுகள் தேடும் சூட்சுமம்.... நான் கூட அப்படித்தான்.... கடிதம் எழுதி துக்கம் கொண்டாடும்... 80களில் பிறந்த ஹிப்பி தலையன்தான்....

இப்படித்தான்.... தொடர்பற்ற சிந்தனையில்... தொடர்பே அற்றவனாக அறுந்து விழுந்து உன் பாதம் தீண்டும் நொடிக்காக தெருக்களின் முக்காக கிடக்கிறேன்.... என் கடிதங்களின் திசைகள் வியந்த வண்ணம்தான் இன்றும்... இன்னும்... தீரா விதையைத் தூவிக்கொண்டே இருக்கின்றன...... மலை உச்சிக் காற்றில் கை கோர்த்துக் கிடந்த நாட்களைப் போல... அது திறவாத சங்கேத குறியீடாகவே....இன்னும் நம் இடைவெளியில் அனாதையாக கிடக்கிறது.... பட்டு விடாமல் இருக்கும் விரல்களில் பட்டுக் கொண்டெ இருந்தது நம் காதல்.... பார்த்து பார்த்து திரும்பிக் கொண்ட கண்களில், ஒரே நேரத்தில் நாம் சொல்லிய ஒரு காட்சி... உனதாய் இருந்த நீ என் புகைப்படங்களில் நானாக மாறிய பொழுதுதான் ஆகச் சிறந்த மனவெளி... உளி இல்லாத உன் விழிகளில்தான் நான் முதன் முறையாக ஒரு சிற்பி ஆனேன்... தத்து பித்துக் காதலா என்று கேட்ட பிறகு தனிமைச் சிறையில் அழுதும் சிரித்தும் அரட்டிக் கொண்டே இருக்கும் முழு பைத்தியமான பொழுதொன்றில் நான் கடவுளானேன்... அங்கும் நீ கடவுளி ஆனாய்......

தவறென்று பார்க்கத் தொடங்கினால்... சரி என்று ஒன்றே இங்கில்லை.... சரி என்று பார்க்கத் தொடங்கினால் தவறென்பதே இங்கில்லை... எதிர்முனைகள் பற்றிய யோசனை.. எதிர்முனைகளில்தான் இருக்கின்றது.. நீ என் முனை என்பதே என் முனை சொல்லும் முனைகளின் கோட்பாடு....நீண்டு கிடந்த பாதையில் நீட்சியென நடந்த பொழுதில் கடும் வெயிலின் அருகாமை துரத்திய உன் இமை..... ரிலேட்டிவிட்டி தியரிக்கு சிறந்த எடுத்துக்காட்டு... படிக்க படிக்க புரிந்து கொள்ளவே முடியாத புதுக் கவிதயாய் நீ நீண்டு கிடப்பதுதான் நம் சாலையின் முடிவு , என திரும்பிய நான் கையில் கொண்ட சிறு புத்தகம் கொண்டு உன் தலை அடித்த கணத்தை நெருடாவின் ஹைகூவில் கண்டேன்...நெருடாவின் ஹைகூவாக...

ஜிப்ரானின் ஜன்னலின் திறப்பாய் ஒவ்வொரு முறையும் அழைக்கும் உன் குரலில் நான் திறந்து கொண்டே இருக்கிறேன், தட்டப் படாத கதவுகளை.. சிலுவைகளால் செய்யப் பட்ட உன் கோபத்தில் நான் இடது பக்கமா...!..... வலது பக்கமா...?

கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நான் நடுவில் தொங்குபவராகவே இருந்து விடுகிறேன்.. கிரீடம் உன் விரல் ஆகும் பட்சத்தில் நான் பக்கங்களைத் தொலைத்த பாலைவன தேடலின் நிறைந்து வழியும் கிணறாக இருப்பதுதான் உத்தமம்...யுத்தங்களில் இல்லாத பூந்தோட்டம் உன் விரல்களில் பூத்துக் கிடக்கும்... யாகம் நடத்த வேண்டியதில்ல.. யாகமாக யாசிக்கும் நேசிப்புகளால் நான் இருந்தும் இறந்துதான் விடுகிறேன்.... உன்னால் கொல்லப் பட்ட பிறகு உயிர் கிடைக்கும் உன்னதம் எனக்குள்ளான காதல்.. அது தீர்க்கவும் முடியாது தீர்ந்திடவும் முடியாத திருப்பங்கள் ஒன்றுமே இல்லாத மீண்டும் வரைந்திட்ட ஒரு கோட்டோவியக் காடு....பாரதியின் அக்னிக் குஞ்சாகத்தான் என் காடு விரிகிறது..... அதில் இலைமறை காயாய் இல்லாமலே இருக்கிறது தீர்த்தக் கரை...

சொன்னாலும், சிவசக்தி, அறிவைப் பிடுங்கிக் கொண்டு செல்லுதல் முறைதான்...... உன் கண்ணாடித் துகள்களின் சாயல் போதும் என்ற கணத்தில் பட்டும் படாமல் கை பட்ட கால் பட்ட இடைவெளியில் வீணைகளின் நரம்பு அறுந்து விழுந்த அத்தி மரக் காட்டின் விதை ஒன்றாய் என் வானம் தூவிக் கொண்டே இருப்பதில் எங்கெங்கும்... நீளப் புரியாமை.... புரிந்தாலும் அது ஒன்று மில்லை... உன்னை அன்றி அசைந்த அனுவைக் கூட நான் பிளந்து விடுகிறேன்...பிளக்க பிளக்க கடவுளாகிப் போவதுதான் உன் பெரும் கோபத்தின் நிறங்களா..?...

வண்ணங்களற்ற வானவில்லில் மறைந்திட்ட தருணம் என் யோசனை.. புரியச் செய்வதில், மீண்டும் தோரணம் கட்டும் சிறு வெயில் பெரு மழை என... பூமி தலைகீழாய் ஒரு வவ்வால் சுமக்கிறது... பெரும் புயல் தேசத்தில் பறந்து கொண்டே கலவி செய்யும் சிறு பறவையென தேகம் நடுங்கி... உயிர் துடிக்கிறேன்...சூத்திரங்கள் இல்லாத கணக்குகளின் கவிதை உடைத்து விட்ட பென்சிலின் கூர் முனை என்பது சிந்தித்தால் வராத கவிதை போல... மீண்டும் மீண்டும் உடைத்துக் கொண்டே இருக்கும் காகிதத்தில் நான் எழுதாமல் விட்ட ஓரம்.... தூரங்களின் தொலைவு... வேர் பிடித்த, மா மரத்தின் புழுக்களின் வாசமென.. பக்கத்து வீடு இலையுதிர் காலங்கள் சுமக்கும் தத்துவங்களில் நானும் கூட ஹெலல்தான்.... வாய்க்குள் கற்கள் போட்டு கத்தி கத்தி பேசும்... ஆற்றக் கரை தத்துவமாய்.... கூலாங்கற்கள் படைக்கும் போதியாகி போ...

நீ யோசனை செய்யாதவள் அல்ல... யோசித்தலை ஆளுபவள்... விபரீதங்களின் விழிகள் கொண்ட காதல்காரி... உடைத்த பின்னும் வீடு வரும் உறவுக்கு வாழ்வுண்டு தோழி... உடைய உடையதான் குமிழ்கள் அழகு... பிரிய பிரியத்தான் உண்மைக்கு வலிமை.. நீ சொன்னது போல உன்னை பிரிந்த பிறகு தான் உயிரின் வலிக்கு ஓசையும் உண்டோ என்று தோன்றுகிறது..... தோன்றலின்... தோன்றாமை நன்று என்ற பின்னிரவு முயக்கத்தை உன் சூடு இல்லா மார்புகளின் தவிப்பு குதிக்கிறது எனதெங்கும்...... அறையெங்கும் என் ஆலமரம், விழுதுகள் மட்டுமே சமைக்கின்றன...காதலின் வலியும் வலிமையும் உனைக் கண்ட பின்தான் முழுதாக உணர்ந்தேன்... நான் கவிதை எழுதிய காதல் நீ.......... நீ எழுதிய நான்தான் காதல் என்பது மறக்க வேண்டிய வாக்கியமா.. கோடிட்ட பின்னும் அழுத்தம் வேண்டாத பாக்கியமா...?...என் தடங்களில் ஊன்றிய கால் தடங்களில் உனதும் எனதும் மாறி மாறி.. யாருடையது என்று யோசிக்கும் முன்னே இரண்டும் அழிந்து கொண்டே போவதுதான்... மணல்வெளியின் மானுடம் கசிந்த சொல்லாட்சி... எவனோ எழுதிப் போகும் கவிதையா நம் வானம்... எவனோ எழுதாமல் விட்டதா நம் வெண்ணிலா... வானும் நிலவும்... அறை மாறிக் கொண்ட இவ்விரவில் நாம் எங்கிருந்தோம்..... வெளியிலா....!!!!!!....

எங்கிருந்தும் அழைக்கும் உன் மௌனத்தில் நான் பிழை மறந்த வெற்றிடம்... இது உனக்கென்றால் உனக்கு.. எனக்கென்றால் எனக்கு.. நமக்கே இல்லை என்றாலும்.. இதில் இருக்கும்... கோடுகளில்... ஓவியம் வரைந்து கைதாகி கிடக்கிறது, வான்காவின் விரல்களின் கண்கள். மிச்சப் பயிரில் மீண்டும் உயிர்ப்பிக்கும் விதிகளாகிப் போவதில்தான்... என் வீணை அறுந்து கிடக்கிறது உனது வீதிகளின் வழித் தடங்கலாய்....... சொல்லற்றுக் கிடப்பதும் சொல்லொன்றாய் கிடப்பதும்... சுகித்துக் கிடக்கும் யுகங்களென..... பால் வண்ணம் பருவம், மீண்டும்..மீண்டும்........

பெண்ணே....ஓடி ஓடிப் பார்க்கும் இடத்தில் நீ இல்லை... பார்க்க முடியாத கடத்தலிலும் நீ இல்லை... நீ நீயாக இருக்க வேண்டும் என்று சொல்லும் உனது கண்ணாடிக்குள் நான் பாதரசம் பூசிக் கொண்ட ஒப்பனைக்காரன்.. உற்றுப் பார்.. நீ தான் தெரிவாய்.. தெரிய தெரிய தீர்வாய் போவதில்தான் காதலும் கனிந்து விழுந்து மடிந்து போகிறதோ....... சொல்லடி.... சுடர்மிகு அறிவே.......நீ எங்கு தேடினும் நான் மட்டுமே கிடைக்கும் வரங்கள் வாங்கிக் கொண்ட நம் ஏதேன் நீ சொல்லி நான் விதைத்ததுதான்.... விதைப்பதும் அறுப்பதும்.... யுகங்கள் தாண்டிய சிறகுகள் தான்....... சொல்லுடைத்த புதினமாக நீ.... சொல்லே இல்லாத புதிய தினம் நான்.. எப்படி யோசிக்கும் போதும்.. உன்னை அன்றி போகும் நாள்காட்டியில் நான் வழி மறந்தே போகிறேன்....... போக போக கிடைக்காமல் போகும் சேருமிடத்தில் நீ இருந்தும் இல்லை... பள்ளத்தாக்குகளின் வீழ்ச்சியில் கீழேயே வளர்ந்து நிற்கும் மரங்களின் கூட்டத்தில் என் மரம் மட்டும் இலை உதிர்த்துக் கொண்டே இருப்பது உனக்கும் தெரியும்....என்பதே புறப்பட்டு விட்ட அம்பின் கூர்மை...நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்... நியந்தாவாக இருப்பதும் உன் விருப்பமே.... ஆசை யாரை விட்டது.... என்னை விட.....

தெருக்களின் மதிய நேர அமைதியென.. அமானுஷ்யங்களின் விரல்களில் என் முகம் மெல்ல மறந்து கொண்டிருக்கிறது....... யார் கண்டார்.. உனையும் ஒரு நாள் மறக்கக் கூடும்... மறதிகளின் மரணத்தில் என் பெயரே... இல்லாத ஒரு வெறும் கவிஜியாக ஒரு தினம் புதைக்கப்படலாம்... அதே திசைகளற்ற நான் உன்னோடு உலவிக் கொண்டிருக்கும்... ஆத்மாவென... கடிதம் முடிகிறது.... நீ படிக்காத கடிதத்தில் இது மூடியே கிடக்கட்டும்.... கடைசி விருந்தைப் போல... ஒரு புகைப்படமாய்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (25-Mar-15, 10:38 pm)
பார்வை : 494

மேலே