வெள்ளந்தி மனிதர்கள் 9 எம்எஸ் சார்

வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் என்னைப் பாதித்த, செதுக்கிய, பாசம் காட்டிய உறவுகள் குறித்த நினைவுகளை கொஞ்சமாய் அசைபோட்டு வருகிறேன். அந்த வகையில் இந்த பகிர்வில் நினைவாய் மலரப்போவது எனது அன்பிற்குரிய பேராசிரியர். திரு. எம்.சுப்பிரமணியன் (எம்.எஸ்) அவர்கள்.

எங்கள் ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரியின் இயற்பியல் துறைப் பேராசிரியராய் இருந்தார். கல்லூரியில் முதல் வருடம் படித்த போது இவருடன் அவ்வளவு நெருக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அமையவில்லை என்பதைவிட நான் படித்த துறைக்கும் இவரின் துறைக்கும் சம்பந்தம் இல்லாத காரணத்தால் இவருடன் பழகும் வாய்ப்புக் கிட்டவே இல்லை. எனது தோழர் தோழியர் இவரின் துறையில் படித்ததால் இவரைப் பற்றி நிறைய அறிய முடிந்தது.

இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எங்கள் ஐயாவுடன் பேசியபடி செல்லும் நாட்களில் திருப்பத்தூர் ரோட்டில் இருந்த எம்.எஸ்.சாரின் கண்ணா பேப்பர் ஸ்டோரின் கல்லாவில் அமர்ந்திருக்கும் அவரைப் பார்த்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பார். அப்போது நாங்களும் அங்கு நிற்போம்... அப்போது சிநேகமாய் சிரிப்பார். கடையில் வேலை பார்த்த ஜீவா ஐயா மீது மிகுந்த பற்று வைத்திருந்தான். ஐயா வீட்டுக்கு அடிக்கடி வருவான். அவனுடன் எங்களுக்கும் நெருக்கமானது. இவனைப் பற்றி மற்றுமொரு பகிர்வில் பார்ப்போம். ஐயாவுடன் எங்களைப் பார்த்ததும் என்ன ஐயா, ரெண்டு மாணவர்களையும் எப்பவும் பக்கத்துலயே வச்சிருக்கீங்க என்று சொல்லிச் சிரிப்பார்.

அதன் பின் மே மாதம் புத்தகம், நோட்டு வியாபாரம் சூடு பிடிக்கும் சமயத்தில் ஒத்தாசைக்கு ஆளு வேணும் காலேசு இல்லாதப்போ மாலை நேரத்துல வந்து நில்லுவே என்று ஜீவா சொல்ல, மே,ஜூன் இரண்டு மாதமும் கணிப்பொறி மையம் ஆரம்பிக்கும் வரை கடையில் நின்று வியாபாரம் பார்க்க ஆரம்பித்தேன். முருகன் வரமாட்டான். நானும் ஜீவாவுக்கு வேண்டிய சில நண்பர்களும் எங்களால் ஆன உதவியைச் செய்வோம். அப்படியே நெருக்கம் தொடர, குமார் வரலையா? என்று கேட்க ஆரம்பித்தது அவரின் நேசம்.

பின்னர் கணிப்பொறி மையம் அது இதுவென கொஞ்சம் அவருடனான உறவு பார்க்கும் போது பேசுவதோடு மட்டுமே தொடர்ந்தது. கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த பின்னர் எம்.எஸ். சாருடன் நெருக்கம் அதிகமாகியது. குறிப்பாக சபரிமலைக்கு அவர் தலைமையில் நான்காண்டுகள் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தபோது சாரின் அன்பில் மீண்டும் நனைய ஆரம்பித்தேன். மலைக்குச் செல்லும் போது நானும் முருகனும் மாணவர்களாய் அவர் முன் என்றாலும் எங்களை அன்பாய் பார்த்துக் கொள்வார். எந்த வேலை என்றாலும் எங்களைத்தான் அழைப்பார். மலைக்குச் செல்ல இருமுடி கட்டுவதற்காக தேங்காய் தேய்த்து எடுப்பது மற்றும் மற்ற வேலைகள் என சார் வீட்டில்தான் இருந்து செய்வோம்.

எம்.எஸ்.சார் மிகுந்த தெய்வ பக்தி உள்ளவர். ஆனால் அவரின் குடும்ப வாழ்க்கை அவருக்கு மிகுந்த சோகத்தையே கொடுத்தது. பையன்கள் இருவருக்கும் ஒரு வித நோய்... குழந்தைகள் இருவருமே நோயின் பிடியில் என்பதால் அவரின் மனைவியோ விரக்தியின் பிடியில்... எப்பவும் இருவருக்கும் ஒத்துப் போவதேயில்லை... எல்லாவற்றையும் தாங்கினார்.... இரண்டு மகன்களையும் இழக்கும் வரை...

நாங்கள் கல்லூரியில் வேலை பார்த்த போதுதான் அவரின் இளைய மகன் இறந்தான். அவரது வீட்டு ஹாலில் கிடத்தியிருந்தார்கள்... பார்க்க சகிக்கவில்லை... சாரின் அழுகையும்... துடிப்பும்... இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் வரக்கூடாது என்று நினைத்தாலும் எங்காவது மீண்டும் மீண்டும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. எனது மைத்துனனை அவருக்கு நன்றாகத் தெரியும்... எங்களுடன் சபரிமலைக்கு இரண்டு வருடம் வந்தான். அவன் தற்கொலை பண்ணிக் கொண்டதைக் கேட்டு பதறியவர், நித்யாவுக்கு ஆறுதல் சொல்லு... அவங்க அப்பா அம்மா எப்படி இதைத் தாங்குவாங்க... கிறுக்குப்பய இப்படிப் பண்ணிட்டானே என்று புலம்பியவர்தான்... அன்று தனது மகனை இழந்து புலம்பிக் கொண்டிருந்தார்.

அபுதாபி வந்த பிறகு ஊருக்குப் போகும்போதெல்லாம் அவரைக் கடையில் சென்று சந்திப்பதுண்டு... எப்பவும் போல் பேசினாலும் ஒரு சோகம் அவருக்குள் ஒளிந்தே கிடக்கும்... குமார், சபரிமலைக்கு மறுபடியும் ஒரு பயணம் போற மாதிரி விடுமுறை எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொல்லுவார். அவரது பணி நிறைவுக்குப் பின்னரும் தேவகோட்டையில்தான் இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடைக்குப் போனபோது அவரின் தம்பிதான் கடையில் இருந்தார். சார் எப்படியிருக்காங்க என்று கேட்டதுக்கு நல்லாயிருக்கார் என்று சொன்னார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.

அதன் பின்னான நாட்களில் நண்பர்கள் மூலமாகத்தான் அவரின் மூத்த மகனும் இறந்து விட்டதாகவும் மதுரையில் போய் செட்டிலாகிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். அவரின் தம்பியிடம் விசாரிக்க, 'ம்... அண்ணோட பையன் இறந்த பின்னால... அண்ணனுக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பு இல்லை... அண்ணிக்கும் இங்க இருக்க பிடிக்கலை... மதுரைப் பக்கமே பொயிட்டாங்க... நானும் கொஞ்ச நாள் கடையைப் பாத்துட்டு வித்துட்டுப் போக வேண்டியதுதான்' என்றார். எனக்கு அதிர்ச்சியாகவும் அதே நேரம் ரொம்ப வேதனையாகவும் இருந்தது.

கல்லூரியில் எந்த மாணவனையும் கோபமாகப் பேசாத, எல்லாருக்கும் பிடித்த எம்.எஸ். சாராக, சபரிமலைக்கு தொடர்ந்து செல்லும் ஒரு பக்தனாக, அடுத்தவரை எடுத்தெறிந்து பேசாத மனிதராக வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற... அந்த மனிதரின் வாழ்வு மட்டும் ஏன் இப்படியானது என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

எம்.எஸ்.சார்... தங்களின் புத்திர சோகத்துக்கு ஆறுதல் சொல்ல முடியாது. உங்கள் வாழ்வின் இழப்புக்கள் அதிகம்... மீட்க முடியாத இழப்புக்களால் வாழும் கடைசி நாள் வரை உங்களை இறைவன் அழ வைத்து விட்டான்... ஆற்றுப் படுத்த முடியாத சோகம் உங்கள் வாழ்க்கையில்... என்னைப் போன்றோரை செதுக்கிய சிற்பிகளில் தாங்களும் ஒருவர்... கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் என்று சொல்ல முடியாத நிலை என்றாலும் இனி வரும் காலங்களில் உங்கள் மனைவி உங்களிடத்தில் அன்போடு இருந்து உங்களை... உங்கள் வாழ்க்கையை கொஞ்சமாவது சந்தோஷமாக கொண்டு செல்லட்டும்.... செல்ல வேண்டும் என்பதே ஆசை.

இந்த முறை விடுப்பில் செல்லும் போது மதுரையில் இருக்கும் மனைவியின் அம்மா வீட்டுக்கு போகும்போது கண்டிப்பாக எம்.எஸ்.சாரை பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எங்க எம்.எஸ்.சார் இனி வரும் நாட்களில் வசந்தத்தை பார்க்காவிட்டாலும் வலிகளை மறந்து வாழ இறைவனைப் பிரார்த்தியுங்கள்.
-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (27-Mar-15, 4:24 pm)
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே