கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை காதலர்களுக்கு மட்டும் நூல் ஆசிரியர் கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை !
(காதலர்களுக்கு மட்டும்)

நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

முதற்சங்கு பதிப்பகம், 19, மீட் தெரு, கல்லூரிச் சாலை, நாகர்கோயில்-1.
செல் : 94420 08269 விலை : ரூ. 70.


நூலாசிரியர் கவிஞர் நாவல் காந்தி வளர்ந்து வரும் கவிஞர். இவரின் “இன்னும் இருக்கிறது” என்ற நூலில் படித்த கவிதைகள் இன்னும் இருக்கிறது நினைவில்.கொஞ்சம் காதல் கெஞ்சும் கவிதை நூல், காதலர் தினத்தில் வெளிவந்துள்ள காதல் கவிதை நூல். ( காதலர்களுக்கு மட்டும்) என்று எழுதி உள்ளார். இந்த உலகில் உள்ள அனைவருமே காதலர்கள் தான். காதலை விரும்பாதவர்கள் யாருமில்லை. காதலை சொந்தக் குடும்பத்தில் எதிர்த்தாலும் திரைப்படத்தில், நாவலில் ஆதரிப்பார்கள். நூல் முழுவதும் காதல்! காதல்! காதல்!

இந்நூல் காதலை காதலிப்பவர்களுக்கு மட்டும் என்று காணிக்கையாக்கி உள்ளார். நாகர்கோயில் இந்து கல்லூரி முதல்வர் முனைவர் பெருமாள், முதியவர் போ. முருகேசன், நாவலாசிரியர் மலர்வதி ஆகியோரின் அணிந்துரை மிக நன்று. நூலின் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக ஒளிர்கின்றன. முதற்சங்கு ஆசிரியர் சிவனிசதீஸ் அவர்களின் பதிப்புரையும் மதிப்புரையாக உள்ளது. நூலாசிரியர் நாவல் காந்தி மாற்றுத் திறனாளி. தனி முத்திரை பதித்து வரும் படைப்பாளி. மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பெருமை கொள்ளும் விதமாக படைத்து வரும் படைப்பாளி. முகநூலிலும் முத்திரை பதித்து வருபவர். முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வது போல, எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் திறனாளி, படைப்பாளி, பாராட்டுக்கள்.

முதியவர்கள் படித்தாலும், அவர்களை இளையவர்களாக்கி மலரும் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைக்கு உண்டு என்பதை உணர்த்தும் விதமாக கவிதைகள் உள்ளன. இளையவர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் படிக்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன்.
கவிதைக்கு கற்பனை அழகு, கற்பனையும் வாசிக்க அழகு என்பதை மெய்ப்பிக்கும் கவிதை.

தங்கம்
வெட்டி எடுக்கப்படுகிறது
என்று
யார் சொன்னது
பெற்றெடுக்கப்படுகிறது
நான் சொல்கிறேன்
உனைப் பார்த்து.

காதலின் முன்னுரை கண்களில் தொடங்கி, சிந்தையில் கலந்து, உயிரோடு உறவாடுகின்றது. விழி வழி வழியும் காதலை உணர்த்திடும் கவிதை ஹைக்கூ வடிவில் மிக நன்று.

விழிகள் நான்கும்
விளையாடுகிறது
காதல் கபடி !

இந்த வரிகளை இப்படி மாற்றினால் சிறந்த ஹைக்கூ ஆகி விடும்.
இதனை.

விளையாடுகிறது
காதல் கபடி
விழிகள் நான்கு !

என்று எழுதினாலும் ஹைக்கூ நுட்பம் கிடைக்கும்.

நூலாசிரியர் கவிஞர் நாவல் காந்திக்கு வேண்டுகோள் : அடுத்த நூல் ஹைக்கூ வடிவில் முயற்சி செய்ய்யுங்கள். முயன்றால் முடியும்.

பரிசு நிச்சயம்.
காதலில் வென்றால்
காதலி அல்லது காதலன் !

காதலுக்காக கொடி பிடித்து கவிதை வடித்த நூலாசிரியர் கவிஞர் நாவல் காந்திக்கு பாராட்டுக்கள். கௌரவக்கொலை செய்யத் துடிக்கும் மனித விலங்குகள் அனைவருக்கும் இந்த நூலை வழங்கி கட்டாயமாக படிக்க வைத்தால் காதலின் மேன்மையை உணருவார்கள் என்று உறுதி கூறலாம்.

மழையை நெசவாளிகள், வியாபாரிகள் விரும்புவதில்லை. ஆனால் விவசாயிகள் விரும்புவார்கள். காதலர்களும் மழையை நேசிப்பார்கள். காரணம் என்ன? பதில் கூறும் விதமான கவிதை ஒன்று.

பொழிகிறது அடைமழை
நம் இருவரையும்
ஒன்றினைக்கிறது
ஒரு குடை!

காதலன் காதலிக்குப் பரிசளிப்பதும், காதலி காதலனுக்குப் பரிசளிப்பதும், காதலில் வாடிக்கை. அது குறித்த கவிதை ஒன்று.

கை கடிகாரம்
வாங்கித் தந்தாய்
நேரம் காட்டுவதை விட
அதிக நேரம்
காதலையே
காட்டுகிறது !

அழகியல் சார்ந்த கவிதைகளும் உள்ளன. காதல் பற்றியே அதிகம் சிந்தித்து, அசை போட்டு வடித்த கவிதைகள் நன்று. சிற்பி சிலை செதுக்கும் கவனத்துடன் கவிதைகள் எழுதி உள்ளார். தேவையற்ற சொற்கள் எதுவுமில்லாமல் செதுக்கி இருப்பது சிறப்பு!

இரும்பானவர்களும்
துரும்பாய்
தான்
போவார்கள்
காதல் உருக்கம்
வந்து விட்டால்.

திருவள்ளுவர் காமத்துப்பாலில் வடித்தது போல வடித்துள்ளார்.காதல் நோயில் பிரிவு வந்தால் வாடி விடுவார்கள் என்பதையும் கவிதையில் உணர்த்தியது சிறப்பு. காதலியின் முகத்தை மலர் என்று பல கவிஞர்கள் வர்ணித்து விட்டார்கள். நூலாசிரியர் கவிஞர் நாவல் காந்தி வித்தியாசமாக எழுதி உள்ளார்.


நொடிக்கு நொடி
பூக்கும் பூ
உன் முகம் ...

காதலியின் முகத்தை நிலவு என்றும் பல கவிஞர்கள் எழுதி விட்டனர். இவரும் காதலி முகத்தை நிலவு என்றதோடு நிற்காமல் நிலவை விட உயர்வானது என்கிறார். எப்படி?

வளர்பிறை
தேய்பிறை
காணாத
முழு நிலவு
உன் முகம்!

காதலிக்கும் காதலனுக்கு தன் காதலி எப்படி இருந்தாலும் தேவதையாகவே தெரியும் என்பது உண்மை.

தேவதையின் முகவரி கேட்டாள்
ஒருத்தி
கொடுத்து விட்டேன்
உன் முகவரியை!

காதல் வந்தால் கவிதை வரும் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் போல வடித்த கவிதை இதோ!

காதல் கருவுற்ற
உடனேயே
பிரசவிக்க
தொடங்கி விடுகிறது
கவிதைகளாக...

இன்றைய காதலர்களின் தனிப்பெரும் தகவல் தொடர்பு சாதனமாக இருப்பது அளப்பரிய அலைபேசி. காதலர்களுக்குள் ஊடல் வந்து விட்டால் அலைபேசி ஓய்வெடுக்கும் என்பதை உணர்த்தியது சிறப்பு.

உன்னோடு
சண்டையில் மட்டுமே
ஓய்வெடுத்து
கொள்கிறது
என் கைபேசி.

உழைத்துக் கொண்டே இருக்கும் அலைபேசி ஊடலின் போதாது ஓய்வெடுக்கப்படும்.

77-ம் பக்கம் மிகப்பெரிய என்பதற்கு பதிலாக மிகப்பொரிய என்று உள்ளது. அடுத்த பதிப்பில் திருத்தி விடுங்கள். காதல் மணம் பரப்பும் கவிதைகள் நன்று. பாராட்டுக்கள். அட்டைப்பட வடிவமைப்பு உள்ள அச்சு யாவும் நன்று. பதிப்பாளருக்கும் பாராட்டுக்கள்.நூலாசிரியர் நாவல் காந்தி அவர்கள் தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .அடுத்த நூல் சமுதாயக் கவிதைகள் நூலாகட்டும்



.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (27-Mar-15, 8:52 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 720

சிறந்த கட்டுரைகள்

மேலே