மதிப்பு

எழுபதுகளின் துவக்கம்-
நகரில் புதியதாய் திறந்த
ஜவுளிக் கடை-
தவணை முறையில்
துணிஎடுத்தோம்
ஒரு வீட்டு விசேஷத்துக்காக -

வளர்ந்த
பிள்ளைகளின் நச்சரிப்பு-
சிறுகட்டம் போட்ட
இளநீல காட்டன் சட்டையை
முதன் முதலாய்
அணிய சம்மதித்தார் அப்பா !

அடுத்த தெரு
ஆறுமுகம் டைலர்
அவசரமாய் தைத்த சட்டை-
பெருமையாக இருக்குமென்று
கரிப்பெட்டி இஸ்திரி
துரிதகதியில் நான்போட
தீய்ந்து போனது
அப்பாவின் சட்டைக் காலர் !

அன்று மட்டுமல்ல -
அடுத்த நான்கு வருடங்கள்
அவர் அணியும்போதேல்லாம்
குறுகுறுத்தது என் குற்ற உணர்வு !
"உனக்கென்ன தெரியும் இதன் மதிப்பு"
அப்பா சொல்லிக்கொண்டே அணிவார் !

மூன்றாம் தலைமுறை -
என் மூத்த மகன்
நாலக்க விலைகொடுத்து
எருமை எனப் பெயர்கொண்ட
கருநீல கற்சலவை ஜீன்ஸ் ஒன்றை
பெருமையுடன் வாங்கி வந்தான் -
முட்டிக் கால் கிழிசலுடன்
ஓட்டும் போட்டிருக்க
என் முகசுளிப்பைக் கண்டு
அணிந்தவாறே அவன் சொன்னான்-
"உங்களுகென்ன தெரியும் இதன் மதிப்பு"

இரண்டாம் தலைமுறை
குழம்பிப் போய் கேட்கிறது -
"மதிப்பு என்றால் என்ன ?"

எழுதியவர் : ஜி ராஜன் (30-Mar-15, 1:24 pm)
Tanglish : mathippu
பார்வை : 157

மேலே