வேண்டாம் தகராறில் முடியும்

தகராறு

இந்த கதையை நீங்கள் முழுவதும் படித்து முடிக்கும் போது ............ வேண்டாம் முடிவில் தகராறு வரும்.

என் பெயர் ராஜேந்திரன். நான் கோவை கலைக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன்.சங்கரன் தெருவில் வாடகை வீட்டில் இருக்கும் போதுதான் சந்தித்தேன் என் அழகு தேவதை ரஞ்ஜனியை. மாநிறம் கொள்ளை அழகு. கண்களில் எப்போதும் ஒரு காந்தம். என்னை அவள் கவர்வதற்கு அதுவும் ஒரு காரணம். ஹவுஸ் ஒனேரின் ஒரே செல்ல மகள். +2 படித்துகொண்டு இருந்தாள். என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு நியூஸ் பேப்பர் படிப்பது. என் வீட்டில் எப்பொழுதும் மலர்கள் இருக்கும் (தினமலர், மாலைமலர் போன்ற செய்தித்தாள்களை சொல்கிறேன்). ரஞ்ஜனி தினமும் என்னிடம் ஒரு டயலாக் பேசுவாள்.
அது “ஏங்க தினமலர் தர்றீங்களா?” என்பதுதான்.
அவள் “ஏங்க” என்று என்னை அழைக்கும்போதே இதயத்தை ஏங்க வைத்து விடுவாள். அவள் பேப்பரை புரட்டும் அழகே என் மனதை புரட்டிபோடும். crossword puzzle அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கடையில் விற்கும் எல்லா பேப்பர்களையும் வாங்கி வைத்து விடுவேன். நமது M.G.R , முரசொலியை கூட விட்டு வைக்கவில்லை. எங்கள் வீட்டின் மொட்டைமாடியில் ஒரு சிறிய அறையுண்டு. அதுதான் எங்கள் காதலை வளர்த்த வளர்ப்பு அறை. மொட்டைமாடிக்கு பெரும்பாலும் யாரும் வரமாட்டார்கள். ரஞ்ஜனியின் அம்மா எப்போதாவது வடாம் காயப்போட வருவார்.
சிலசமயம் ரஞ்ஜனியின் தாத்தா இருட்டில் சரக்கடித்து (மது அருந்தி) பார்த்துஇருக்கிறேன். அவரின் பட்ட பெயரே சற்று வினோதமானது. தகராறு என்பதே அவரின் காரணப்பெயர். எதற்கெடுத்தாலும் எல்லோரிடமும் தகராருக்கு போவார். அதுவே நாளடைவில் தகராறு என்ற அடைமொழியை தந்துவிட்டது. ஒரு பெண்ணை அவள் கண்ணை பார்த்து பேசுவது என்பது எனக்கு பாகிஸ்தான் இந்தியாவை உலககோப்பையில் வெல்வது போன்ற இயலாத ஒன்றாகவே இருந்தது.

ரஞ்ஜனியை எப்படி இம்ப்ரெஸ் செய்வது என்று யோசிக்கும்போது கவிதை எழுதி அவளை கவர்வது என்று தீர்மானித்தேன். அவளின் நெற்றியில் சரிந்துவிழும் மூன்று ஒற்றை முடிகள் என்னை மிகவும் கவரும்.
எடுத்தேன் ஒரு நோட்டை, அதில் வடித்தேன் என் கவிதையை

உன் நெற்றியின்
முன்புற முடி என்ன
முப்பரிமாண 3D யா?

இல்லை
முப்பொழுதும் என்னை
சொக்கிடசெய்யும்
திருடியா ?

என்று தத்தக்கா பித்தக்கா கவிதையை எழுதி வைத்தேன். கூடவே ஒரு பேனாவையும் நோட்டின் மேல் வைத்தேன். பதில் கிடைக்கும் என்ற நப்பாசையில். பதிலும் கிடைத்தது. இந்த கவிதையை எழுதிய கவிபேரரசு யார்? என்று.
(என் மூளை news paper ஐ நீ use பண்ணு என்று சொன்னது)

ஒரு மலரால் பூஜித்து
மோட்ஷம் பெற்றான்
கஜேந்திரன்

தினமலரால் உன்னை
நேசித்து தின இதழால்
உன்னை யாசிக்கும்
ராஜேந்திரன்.
என்று எழுதி வைத்தேன்.
பதிலுக்கு அவள் உங்கள் கவிதைக்கொலைக்கு பாவமன்னிப்பு தர நான் ஒன்றும் பாதிரியார் அல்ல என்று அந்த நோட்டில் எழுதினாள். இப்படியே நேராக பேசாமல் ஒரு கேணத்தனமான chatting அந்த நோட்டில் வளர்ந்துகொன்டே போனது.

ஒரு நாள் கதை கேட்க ரொம்ப பிடிக்கும் முடிந்தால் நேரில் சொல்லவும் என்று எழுதி இருந்தாள்.

கதையின் மூலம் என் காதலை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அதே மொட்டைமாடி அறை. யாரும் அங்கில்லை ரஞ்சனியை தவிர.

“ரஞ்ஜனி நான் ஒரு கதை சொல்லட்டுமா”

“ம்ம்...... சொல்லுங்க “

ஒரு கதை இல்ல நான்கு கதை சொல்ல போறேன்”

“அய்யய்யோ..... எனக்கு டியூஷனுக்கு நேரமாயிரும். ஒன்னே போதும்.”

“இல்லை ரஞ்ஜனி ஒவ்வொரு கதையும் 2 நிமிடம் தான் ஆகும் பத்து நிமிஷத்தில் மொத்த கதையையும் சொல்லிவிடுவேன்.”

“சரி சொல்லுங்க” என்றாள்.

“ஒரு ஊர்ல ஒரு அன்பான கணவன் மனைவி இருந்தாங்க. அவங்களுக்குள்ள எப்பவும் சண்டையே வந்ததில்லை. எப்பவாவது கணவனுக்கு கோபம் வந்தா, கோபத்தை கட்டுபடுத்த மனைவிக்கு அன்பா ஒரு முத்தம் கொடுப்பார். அதேபோல மனைவிக்கு கோபம் வந்தால் அன்பாக கணவருக்கு ஒரு முத்தம் கொடுத்து சண்டை வராமல் பார்த்து கொள்வார். அவங்க ரெண்டு பேருக்கும் இடையே நடக்கபோற 4 குட்டி கதைகளை இப்ப உனக்கு சொல்ல போகிறேன்.” என்று நிறுத்தினேன். அவள் என் கதையில் சுவாரசியமாக இருப்பதை உணர்ந்து, மேலும் தொடர்ந்தேன்.
“ஆனால் ஒரே ஒரு கண்டிசன்” என்றேன்.
“என்ன” என்றாள்.
“நான் 4 கதையும் சொல்லி முடிப்பதற்கு முன் எதுவும் பேச கூடாது. எந்த கேள்வியும் கேட்க கூடாது. ஏதாவது கேட்க தோன்றினால் நான்காவது கதையை நான் சொல்லி முடித்த பிறகே கேட்கவேண்டும்.” என்று சொன்னேன்.
“சரி’ என்று சம்மதித்தாள்.

முதல் கதை
அந்த அன்பான கணவன் மனைவி ஒரு நாள் சினிமாவுக்கு பைக்கில் போய்கொண்டிருன்தனர். வழியில் ஒரு ஸ்பீட் பிரேக் இருப்பதை அவன் கவனிக்கவில்லை, எனவே வண்டி தடுமாறி மனைவி கீழே விழ போனாள். நல்லவேளை எதுவும் ஆகவில்லை.
“ஏங்க இப்படியா வண்டி ஓட்டறது? பாத்து ஓட்ட தெரியாதா ? என்றாள் மனைவி.
கணவனுக்கு கோபம் வந்துவிட்டது. உடனே அவன் “வண்டி ஓட்டறது என் வேலை, வாயை மூடிகிட்டு வரணும் அதுதான் உன் வேலை.” என்று கூறி கோபத்தை கட்டுபடுத்த அவள் கன்னத்தில் முத்தம் ஒன்று கொடுத்துவிட்டான்.
இது முதல் கதை. அடுத்து இரண்டாவது கதை

ஒருநாள் கணவன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சாதத்தில் கல் ஒன்று இருந்தது.உடனே கணவன் “கல்லிருப்பது கூட தெரியாமல் இப்படியா சமைப்பது? பாத்து சமைக்க தெரியாதா?” என்றான். மனைவிக்கு கோபம் வந்துவிட்டது.
“சமைக்கிறது என் வேலை. சாப்பிடறது உங்க வேலை.” என்று கூறி கோபத்தை கட்டுபடுத்த அவரின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டாள்.
இது இரண்டாவது கதை

அடுத்து நான்காவது கதை

“அவர்களுக்கு அறுபதாம் கல்யாணம் நடந்தது.அப்போது”
என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போது குறுக்கிட்டாள் ரஞ்ஜனி.
“ஏங்க 3 வது கதையை விட்டுடீங்க” என்று அவசரபட்டாள்.

உடனே நான் “ கதை சொல்லறது என் வேலை, கேட்கறது மட்டும்தான் உன் வேலை” என்று கூறி அவள் கன்னத்தில் முத்தம் ஒன்று கொடுத்து விட்டேன். உடனே ரஞ்ஜனி முகம் சிவக்க ஓடிப்போய்விட்டாள். நான் செய்த செயல் எனக்கே வெறுப்பாக இருந்தது. அப்போது திடிரென அந்த அறைக்கு தகராறு தாத்தா வந்துவிட்டார். அந்த அறையில் நடந்த எல்லாமும் அவருக்கு தெரிந்து விட்டது. என்னை பார்த்து அவர் முறைத்தார். பயத்தில் நானும் ஓடிபோய் விட்டேன். பிறகு ரஞ்ஜனி என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பேப்பர் கூட கேட்பதில்லை. ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. என்னை பார்த்தாலே தூர ஓடி போய்விடுகிறாள். ஒரு நாள் அந்த மொட்டை மாடி அறையில் இருந்த அந்த நோட்டை
எடுத்து பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
“ராஸ்கல், கதை கேட்க வந்தால் இப்படியா நடந்துகிறது. நீ எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கல. அதான் இப்படி எச்சகல மாதிரி நடந்துக்கிற” கதையா சொல்ற, நான் சொல்றண்டா அந்த 3 வது கதையை “காதலிக்கிறது உன் வேலை, செருப்பால் அடிப்பது என் வேலை” என்று எழுதி இருந்தாள். அவள் என்னை திட்டியது கூட பரவாயில்லை, அக்கா தங்கச்சி மாதிரி என்று அவள் எழுதியது என் காதல் கற்பனை கோட்டை சின்னாபின்னமானது. வெகுநாளுக்கு பிறகு ஒருநாள் அன்று பிப்ரவரி 14 ரஞ்ஜனி என்னிடம் பேசினாள். மாடியில் உள்ள அந்த நோட்டை பார்க்குமாறு கூறினாள். திட்டுவதர்க்கு மிச்சம் மீதி இருந்தால் அதை எழுதிஇருப்பாள் என்று எண்ணி நோட்டை திறந்தால் அதில் I love you என்று எழுதி இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு ஏன் 3 வது கதையில் என்னை கேவலமாக எழுதினாய் என நோட்டில் எழுதி வைத்தேன். மறுநாள் அதற்கு அவள் எழுதிய பதில் “ நான் அந்த கதையை எழுதவில்லை, அந்த கதையை எழுதியது “தகராறு”

எழுதியவர் : MURALI (1-Apr-15, 10:02 pm)
பார்வை : 309

மேலே