அவனுக்கென்று சில சூரியநிலாக்கள்

அவன் ஒரு கணக்கிற்கு
விடை எழுதுகிறான்.
உங்களுக்கு அவன்
வட்டம் வட்டமாய்
கிறுக்குகிறான்

அவன் கவிதைச்
சொல்கிறான்.
உங்களுக்கு அவன்
உளறுகிறான்.

அவன் அழுகிறான்.
உங்களுக்கு அவன்
சிரிக்கிறான்.

அவன் தியானிக்கிறான்.
உங்களுக்கு அவன்
கத்துகிறான்.

நீங்கள் தூங்கு
என்கிறீர்கள்.
அவன் எப்போதோ
தூங்கிவிட்டான்.

அந்தக் கம்பிகளை விட்டு
அவன் வெளியேறிவிட்டான்.
உங்களுக்கு அவனதில்
முட்டிக்கொள்கிறான்.

அங்கிருக்கும் காட்சியை
அவன் நின்று இரசிக்கிறான்.
உங்களுக்கு அவன் ஆடையிலேயே
சிறுநீர் கழிக்கிறான்.

அவிழ்த்துவிட்டால்
அப்பாட என்று அங்கேயே
அமர்ந்து விரலுக்கு
சொடுக்கெடுக்கிறான்.
உங்களுக்கு அவன்
ஓடிவிடுகிறான்.

அவன் நடனமாடுகிறான்.
உங்களுக்கு அவன்
எச்சில்வடித்தபடி
கைத்தட்டுகிறான்.

அவனுக்கு பிடித்த சாப்பாட்டாய்
அழகாய் ருசிக்கிறான்.
உங்களுக்கு அவன் அதை
சிந்தியபடி உண்கிறான்.

அவன் காதலிக்கிறான்.
உங்களுக்கு அந்த
பெண் சொன்னால்
அவன் கேட்பான்.

சித்த சுவாதினமுள்ள
அவன் அருவத்திற்கு
உடலென்னும் பைத்தியம்
பிடித்திருக்கிறது.

போராடி போராடி உடல்
ஒத்துழைக்காமல்
அழுது அழுது அவன்
அருவத்தின் கண்கள்
வீங்கிவிட்டன.

சிறு தயக்கத்தோடு
நீங்கள் அவனை கடக்கயில்
அழகாய் புன்னகைக்க
அருவம் கட்டளையிடும்போது..
உடல் பல்லைக் கடித்து
பயமுறுத்துகிறது.

ஆம்
உங்களுக்கு அவன் பைத்தியம்.
அவனுக்கு உடலென்னும்
பைத்தியம் பிடித்திருக்கிறது.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (19-Apr-15, 8:10 am)
பார்வை : 81

மேலே