முகவரி தந்த பாவலன்

முகவரி தந்த பாவலன்
பாவலர் கருமலைத்தமிழாழன்

வரிகளிலே முருகனையே முதலில் பாடி
வளர்ந்திட்ட அறிவாலே பாதை மாற்றிப்
பெரியாரின் பகுத்தறிவை நெஞ்சில் ஏற்றுப்
பெரும்புரட்சி செய்தவர்தாம் பாவின் வேந்தர்
அரிதான பாரதியின் தாச னாகி
அடியொற்றி அவரைப்போல் எளிமை யாக
உரிமைக்குக் குரல்கொடுக்கும் உணர்ச்சிப் பாட்டால்
ஊரினையே மாற்றியவர் பாவின் வேந்தர் !

சாட்டையிலே சொற்களினை வீசி மூட
சாதிகளின் தோலினையே உரித்த வர்தாம்
வேட்டெஃக சொற்களிலே தமிழை வீழ்த்த
வெறிகொண்ட பகைவரினைச் சுட்ட வர்தாம்
கூட்டிற்குள் இருந்தபெண்ணைக் கல்வி கற்கக்
கூட்டிவந்தே ஏட்டினையே தந்த வர்தாம்
பாட்டாளித் தோழர்க்குத் தோளாய் நின்று
பாட்டாலே விடியலினை விதைத்த வர்தாம் !

கவிஞரெனும் பரம்பரைதாம் இவருக் கன்றிக்
கவியுலகில் பெற்றவர்கள் யாரு மில்லை
புவிதன்னில் புரட்சிப்பா வேந்தர் என்று
புகழ்பெற்றோர் இவரைப்போல் யாரு மில்லை
செவிகளிலே நுழையுமிவர் பாட்டைப் போல
செந்தமிழை உயர்த்துமெந்த பாட்டு மில்லை
நவின்றிட்ட இவர்பாட்டே தமிழ னுக்கு
நாட்டினிலே முகவரியைத் தந்த பாட்டு !

( ஏப்ரல் 21 பாவேந்தரின் நினைவு நாள் )

எழுதியவர் : (21-Apr-15, 1:04 pm)
பார்வை : 92

மேலே