உண்டியல்

தேவி தன் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள், மர சட்டம் அடித்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் தன் முகத்தை பார்த்து பொட்டு வைத்துக்கொண்டு, தன் அம்மாவின் படத்திற்க்கு முன்பு வந்து நின்று கும்பிட்டாள். பிறகு சாமி படத்திற்க்கு அருகில் வந்து அங்கிருந்த மண் உண்டியலை எடுத்து அதிலிருந்த பணத்தை எடுக்க குச்சிகளை விட்டு குடைந்து கொண்டிருக்க அந்த ஓட்டு வீட்டு வாசலில் ஆடுகளை இழுத்து கட்டிக் கொண்டிருந்த தேவியின் அப்பா

‘இன்னும் என்னாத்தா பண்ணிகிட்டு இருக்க... காலேஜிக்கு மணியாகலையா’

என்று குரல் கேட்டதும் தேவி பதட்டத்தில் உண்டியலை கீழே போட்டு உடைத்து
‘இதோ கிளம்பிட்டேன் பா’
‘பஸ் வந்துரும் சீக்கிரம் போத்தா...’

‘சரி பா வந்துட்டேன்’
என்று நகங்களை கடித்துக்கொண்டு பயத்தில் நிற்க, சிதறிய உண்டியலின் பாகங்களை ஒரு சாக்கின் அடியில் தள்ளி விட்டு அதில் இருந்த காசுகளை எடுத்து பையில் போட்டுக் கொண்டு வெளியே வேகமாக ஓடி வர

‘போயிட்டு வரேன்பா’

‘பைய போத்தா...’ ‘படிக்கிற புள்ளைங்க வருதேன்னு, அந்த பஸ்கார கம்னாட்டி வண்டிய நிறுத்தவே மாட்டான்...’ என்று புலம்பியபடி தேவியின் அப்பா முகத்தை தோளில் இருந்த துண்டால் துடைத்து விட்டு

‘ஏன்தா அந்த செல்போன எடுத்து வச்சுக்கிட்டியா’
என்று கேட்க தேவி தலையை அசைத்தவாறு வீட்டின் முள்வேலியை தாண்டி கால் தடுமாறியபடி ஓட தேவியின் அப்பா பதற

‘ஆத்தா பாத்து பைய... ஜாக்கிரதையா போயிட்டு வாத்தா’

இரண்டு நாட்களுக்கு முன்பு தேவி வீட்டில் படித்து கொண்டிருக்க புத்தகங்களை எடுத்து எழுந்து வந்து
‘அப்பா லட்சுமி வீட்டுக்கு போயிட்டு வரேன்பா’ என்று சொல்ல குழப்பத்துடன் தேவியின் அப்பா
‘இந்நேரத்துல எதுக்குத்தா’
‘அவகிட்ட முக்கியமான ஒரு சந்தேகம் கேக்கணும்’

‘ஏன்தா வயசுப்புள்ள கண்ட நேரத்துல வெளிய போகலாமா’ புத்தகத்தோடு நின்ற தன் மகளை பார்த்துவிட்டு ‘சரி நானும் துணைக்கு வரேன் வா போகலாம்’
என்று துண்டை உதறியவாறு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்ப இருவரும் வெறிச்சோடிய கிராமத்து சாலையில் நடந்து போகின்றனர்.

லட்சுமி வீடு அருகில் வந்ததும் தேவியின் அப்பா வெளியே நின்றுகொண்டு
‘நீ போய் பேசிட்டு வாத்தா, நான் இப்படி வெளிய நிக்கிறேன்’
‘சரிப்பா நான் சீக்கிரம் வந்துடறேன்’ என்று தேவி உள்ளே சென்று லட்சுமியை கூப்பிட பளிச் முகத்துடன் லட்சுமி வெளியே வந்ததும்

‘என்னடி இவ்வளவு தூரம் வீட்டுக்கு போயிட்டு உடனே திரும்ப வந்துருக்க’ என்று லட்சுமி கேட்க சற்று களைப்புடன் தேவி
‘ஆமாம் லட்சுமி, நாளைக்கு செமினார் இருக்குள்ள அதுல கொஞ்சம் சந்தேகம் கேக்கலாம்னு வந்தேன்’
‘வா உக்காரு என்ன சந்தேகம்னு சொல்லு’
என்று லட்சுமி கேட்க இருவரும் அங்கு தின்னையில் உட்கார்ந்து புத்தகத்தை வைத்து பேசிக்கொள்ள தேவியின் அப்பா அதனை வெளியில் நின்று கவனித்துக் கொண்டிருக்க லட்சுமி தேவிக்கு சந்தேகங்களை தீர்த்துவிட்டு

‘இது தான்டி, இதுக்கு போயா இவ்வளவு தூரம் வந்த... ஒரு ஃபோன் பண்ணி கேட்டிருக்கலாமிள்ள’ என்று புத்தகத்தை அவளிடம் கொடுக்க
‘ஏய் என்கிட்ட ஏதுடி ஃபோன்’ என்று தேவி பரிதாபமாக கேட்க அதை வருத்ததுடனும் குழப்பத்துடனும் தேவியின் அப்பா பார்த்துகொண்டிருக்க

‘ஏய் இப்போ நானே இங்க இல்லனா யார்கிட்ட கேப்ப, ஃபோன் இருந்தா யார்கிட்ட வேணாலும் கேட்டுக்கலாம்ல’
என்று லட்சுமி தேவியின் முகத்துக்கு நேராக கையை நீட்டி பேச அவளது கையில் இருந்த புது வளையல்களை தேவி கவனிக்க அவள் கையை பிடித்து

‘லட்சுமி புது வளையலா’
‘ஆமான்டி, அம்மா டவுனுக்கு போனாங்களாம் வாங்கிட்டு வந்தாங்க’
‘நல்லாருக்குடி’

என்று இருவரும் பேசிக்கொள்ள வெளியே தேவியின் அப்பா கனத்த மனதோடு எதையோ யோசித்துக்கொண்டே திரும்பி நடக்க அப்பா என்று தேவியின் குரல் கேட்க
‘வந்துட்டியாத்தா போலாமா’ என்று இருவரும் அந்த சாலையில் நடக்க தேவியை பார்த்தும் பார்க்காமலும் செருமியவாறு ‘ஏன்தா படிக்கிற புள்ளங்களுக்கு ஃபோன் ரொம்ப அவசியமோ’
‘அதெல்லாம் இல்லப்பா..... ஃபோன் இருந்தா வீட்ல இருந்தே யார்கிட்ட வேணாலும் பேசிக்கலாம்’ என்று சொல்ல ஓ என்று தலையை ஆட்டியவாறு நடந்தார்.

மறுநாள் காலையில் சாமியை கும்பிட்டு வேகமாக அங்கிருந்த உண்டியலை கையில் எடுத்து அதில் இருக்கும் காசுகளை எடுக்க முயற்சி செய்து எதோ தயக்கத்துடன் அதை மீண்டும் அங்கேயே வைத்துவிட்டு அலமாரிகளை அலசி அங்கங்கே வைத்திருந்த காசுகளை எடுத்து தனது வேட்டியில் சுருட்டி வைத்து வெளியே கிடந்த நைந்த செருப்பை போட்டுக்கொண்டு கிளம்பினார்.
டவுனில் பஸ்டாண்டில் இருந்து வெளியே நடந்து வருகையில் காலில் இருந்த செருப்பு அருந்து போக வெறுப்படைந்து அதை எறிந்துவிட்டு செல்ல மனதில் பல யோசனைகள் வர ‘புது செருப்பு வாங்கினா எப்படியும் இரநூறு ரூபா வரும் கையில இருக்க காசு பத்துமா பத்தாதானு தெரியலை’ என்று யோசித்துக்கொண்டே ஒரு கடையில் நிற்க அது செல்ஃபோன் கடையாக இருக்க அங்கு ஷோவ்கேஸ்களை உற்று கவனிக்க கடைக்காரன் அவரை பார்த்து
‘என்னங்கையா வேணும்’ என்று கேட்க

‘ஒரு ஃபோன் வேணும் தம்பி!... பொன்னுக்கு.... காலேஜ் படிக்குது’ என்று சிரித்துகொண்டே சொல்ல
‘என்ன வெலையில பாக்கறீங்க’
‘என்ன வெலையா இருந்தாலும் பரவாயில்ல, நல்ல ஃபோனா குடுங்க தம்பி’
என்றதும் கடைக்காரன் ஆளை பார்த்து நான்காயிரம் ரூபாயில் ஃபோன்களை எடுத்து காண்பிக்க ஒவ்வொன்றாக பார்க்க ஏதும் புரியதவராக தேவியின் அப்பா நிற்க கடைக்காரன் பொருமை இழந்து
‘ஐயா! என்ன வெலையில வேணும்னு சொல்லுங்க அதுக்கேத்தமாதிரி நல்ல ஃபோனா நானே எடுத்து கொடுக்கறேன்’
‘ஏன் தம்பி... ஃபோன் இம்புட்டு வெலையா’

கடுப்பான கடைக்காரன் ‘சரியா போச்சு’ என்று நக்கலாக சொல்ல சற்று அவரை பார்த்து பரிதாபப்பட்டு ‘ஐயா! எவ்வளோ பணம் வச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க’

என்றதும் தன்னுடைய வேட்டியில் முடிந்து வைத்திருந்த காசுகளை அவிழ்த்து எடுத்து ‘என்கிட்ட ஆயிரம் ரூவா தான் இருக்கு தம்பி’
என்று அப்பாவியாக சொல்ல கடைக்காரன் ஒரு சைனா ஃபோனை எடுத்து கொடுத்து
‘ஐயா!... நீங்க வச்சிருக்க காசுக்கு... இந்த ஃபோன் நல்லா இருக்கும் வாங்கிக்கோங்க, இது வெறும் தொல்லாயிரம் ரூபாய் தான்’
என்றதும் அதற்க்கான பணத்தை கொடுத்து செல்போனை வங்கிக்கொண்டு கிளம்பினார்.

கல்லூரி முடிந்து வந்து தேவி வீட்டில் அப்பாவை காணாது காத்திருக்க அவளது அப்பா தெருப்பக்கம் கையில் மஞ்சபையை சுருட்டி பிடித்தவாறு செருப்பில்லா கால்களுடன் வேகமாக நடந்து வந்து வீட்டு வேலிக்குள் நுழைய தேவி அவரையே பார்த்துகொண்டிருக்க அருகில் வந்ததும்

‘எங்கப்பா சொல்லாம போனீங்க’ என்று தேவி கேட்க லேசாக சிரித்துகொண்டே

‘டவுனுக்கு போயிட்டு வரேந்தா, அதான் கொஞ்சம் நேரமாயிட்டுது’

‘வெறும் காலோடைய போனீங்க, செருப்பு என்னாச்சு’

‘அது கிடக்கட்டும் ஆத்தா’ என்று தன் கையில் வைத்திருந்த பையை பிரித்து அதில் இருந்து தான் வாங்கிய செல்போனை எடுத்து மகளிடம் கொடுக்க தேவி அதை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அப்பாவை பார்த்து சிரித்தவாறு செல்போனை வாங்கிக்கொண்டு வீட்டினுள் ஓடினாள்.

‘இனிமே வீட்ல இருந்தே பேசிக்கலாமத்தா’ என்று மகிழ்ச்சியுடன் சத்தமாக மகளை பார்த்து கத்தினார்.

காலையில் தேவி கல்லூரிக்கு போனதும் வீட்டினுள் வந்து சாமி படத்திற்க்கு அருகில் இருந்த உண்டியல் இல்லாததை கண்டு தேட, எதார்த்தமாக சாக்கை மிதித்தும் எதோ கால்களில் குத்தியது சாக்கை எடுத்து பார்த்ததும் அதற்கு அடியில் உண்டியல் உடைந்து கிடப்பதை கண்டு கோபம் கொள்கிறார்.

கல்லூரி முடிந்து லட்சுமியும் தேவியும் நடந்து வருகையில் தேவி போனில் தோழிகளுடன் பேசிக்கொண்டே வருகிறாள். ‘ஏய் காயத்திரி இதுதாண்டி என் போன் நம்பர்’ என்று ஒவ்வொரு தோழிகளிடமும் போன் நம்பர் கொடுத்து பேசிவிட்டு, லட்சுமியிடம் அவளது வளையல்களை பற்றி கேட்க
‘லட்சுமி, எங்கடி இந்த வளையல் வாங்கின’
‘நான் எங்கடி வாங்கின, அம்மா தான் வாங்கி வந்தாங்க, இங்க டவுன்ல இருக்க எதாவது பான்சி கடையில தான் வங்கியிருபாங்க’
‘அப்போ வாடி போய் பாக்கலாம்’

என்றதும் டவுனில் கடைத்தெருவில் நடந்து செல்ல அங்குள்ள ஒரு பான்சி கடைக்குள் இருவரும் நுழைந்து கடையில் உள்ள வளையல்களை எடுத்து பார்த்துகொண்டிருக்க
‘தேவி, காசு வச்சிருகியாடி’ என்று சந்தேகத்துடன் லட்சுமி கேட்க ‘ஆங்.... வச்சுருகேன்டி’ என்றபடி தேவி வளையல்களை எடுத்து பார்த்தவாறு தலையாட்ட
‘ஏதுடி காசு’ என்று லட்சுமி தேவி தாடையில் கைவைத்து தலையை திருப்பி கேட்க
தேவி சிரித்துகொண்டே ‘காலைல அப்பாவுக்கு தெரியாம உண்டியல உடைசுட்டேன்டி’ என்றதும் லட்சுமி பயத்தில் ‘அடிப்பாவி’ என்று சொல்ல

தேவி வீட்டு வாசலில் மெதுவாக நடந்து வர அவளது அப்பா திண்ணையில் அமைதியாக உட்கார்ந்தபடி தேவி வருவதை பார்த்துகொண்டிருக்க, தேவியும் வழக்கம்போல் இல்லாமல் பயத்தோடு வேலிக்குள் நுழைந்து தலையை குனிந்தபடி நடந்து வந்து அப்பாவின் அருகில் நிற்க மெதுவாக தலையை நிமிர்த்தி அப்பாவை பார்க்க அவரும் சற்று கோபத்தோடு தேவியை பார்த்துவிட்டு திண்ணையின் மறுபுறம் பார்க்க தேவியும் அவர் பார்க்கும் இடத்தை பார்க்க அங்கே உண்டியலின் உடைந்த துண்டங்கள் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. தேவி தயக்கத்துடன் தனது பையில் விட்டு எதையோ எடுக்க அவளது அப்பா என்ன எடுக்கிறாள் என்பதை பார்க்க அதிலிருந்து புதிய செருப்புகளை எடுத்து அப்பாவிடம் வைக்க அந்த செருப்புகளை பார்த்தவர் அதிர்ச்சியோடு எழுந்து நின்று மகளை பார்க்க

‘இந்த வெயில்ல வெறும் காலோடு எங்கேயும் போகாத்தப்பா’ என்று சொன்னதும் தேவியின் அப்பா மகள் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை உணர்ந்து பேச வாய் வராமல் ஆனந்தத்தில் கண்ணீர் சிந்த மகளை தழுவினார். பெருமிதத்தோடு அந்த செருப்பை போட்டுக்கொண்டு தெருவில் மகிழ்ச்சியில் வேகமாக நடந்தார்.

எழுதியவர் : சரவணன் ஆறுமுகம் (1-May-15, 12:43 pm)
Tanglish : undiyal
பார்வை : 554

மேலே