என் இரவு ஒரு தேநீர்க் கோப்பையாகிறது --நூல் விமர்சனம்-பொள்ளாச்சி அபி--

என் இரவு ஒரு தேநீர்க் கோப்பையாகிறது.!-க.அம்சப்ரியா
--நூல் விமர்சனம்-பொள்ளாச்சி அபி--
-- -- - --- --------- -------

மொழியின் வேர்களை உலுக்கி உலுக்கி,கவிப் பூக்களைக் கொட்டுகின்ற வித்தை கவிஞனைத் தவிர யாருக்கும் வாய்ப்பதில்லை. விஞ்ஞானிகளுக்கு முன்னோடியா கவும்,அஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாகவும் அவதாரங்களை எடுக்கும் வரமும் அவனுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது.

உலகத்தின் இயக்கம் ஒப்படைக்கப் பட்டிருக்கிற காலத்தின் பரிமாணம்,இந்த உலகத்தைவிடவும் மிகப்பெரியது. ஆனால்,காலத்தைக் களிமண்ணாக்கவும், அதனைக் குதிரைகளாக்கி விளையாடவும்,தனக்கு வேலை செய்யுமாறு பணிக்கவும்,கவிஞர்களால் மட்டும்தான் முடிகிறது.

இவ்வுலகம் வழிநடக்க வேண்டிய பாதைகளை தனது கனவுகள் மூலம் உருவாக்கி விடுவதோடு மட்டும் நிற்பதல்ல அவனது பணி.அவனுடைய கனவுப் பிரதிகள் எல்லாவற்றையும் நமக்கு காட்சிப்படுத்துவதன் மூலம் நம்மையும் அந்தப் பாதை வழியே செல்ல அழைப்பு விடுகிறான்.அவ்வழியே செல்வதும்,செல்லாததும் அவரவர் விருப்பு வெறுப்பு சார்ந்ததாக இருக்கலாம்.ஆனால்,கவிஞர் க.அம்சப்ரியாவைப் பொறுத்தவரை,தப்பிக்க முடியாதபடி நம்மை இழுத்துச் செல்பவராகவே எப்போதும் இருக்கிறார்.

கடந்த ஜனவரியில்,பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பில்,வெளியிடப்பட்ட ஆறு நூல்களில் ஒன்றான கவிஞர் அம்சப்ரியாவின் -என் இரவு ஒரு தேநீர்க் கோப்பையாகிறது - என்ற கவிதைத் தொகுப்பும்,“சிறுமி அதிஸ்யாவின் பின்செல்லும் ரோஜாச் செடியைப் போல,”கவிதைப் பிரியர்களைக் கட்டியிழுத்துச் செல்கிறது.

பொருட்களை,படைப்புகளின் கருவாக்கி வழமையாய் எழுதும் கவிதைகளிலிருந்து மாறுபட்ட வகையில்,காலத்தையும் ஒரு பாத்திரமாக்கி குழந்தைகளோடு விளையாட வைத்திருக்கும் மிகவும் வித்தியாசமான கவிதையாக, “சிறுமி அதிஸ்யாவின் விடுமுறை” எனும் கவிதையிருக்கிறது.

“விடுமுறையை”
தனக்குப் பிடித்த களிமண்ணாக்கி
இரண்டு குதிரைப் பொம்மைகள் செய்கிறாள்
ஒன்றில் அவளும்
இன்னொன்றில் தோழியுமாக
ஊரெல்லாம் சுற்றி வருகிறார்கள்.

குதிரையைப் பிறகு
பறவைகளாக்கி
ஆளுக்கொன்றில் அமர்ந்து
தூரத்து மலையைப் பார்க்க
மகிழ்ச்சியாகப் புறப்படுகிறார்கள்.

விடுமுறையை
மதியத்துக்கு மேல் சற்றுநேரம்
வீட்டுத் தோட்டத்தில்
வேலைசெய்யுமாறு பணிக்கிறாள்.
அதுவும் கட்டளைக்கு உடன்பட்டு
செடிகளுக்கு சேவகம் செய்கிறது.

ஆற்றுக்கு விடுமுறையை
அழைத்துச் செல்கிறாள்
சில சொற்களை உச்சரித்து
மீன்களாக மாற்றி
தண்ணீரில் விடுகிறாள்
நீந்திக் களிக்கும் அழகில்
இந்த நாளை இனிதாக்குகிறாள்

சற்றுநேரம்
கதை சொல்லுமாறு கெஞ்சுகிறாள்
தான் யாரையெல்லாம்
மகிழ்வித்தோமென்று
பிரியமாக கதை சொல்லத் தொடங்குகிறது
விடுமுறை

இரவாகிவிட்டது
போய் வரட்டுமாவென்று
கெஞ்சத் தொடங்குகிறது விடுமுறை
போகத்தான் வேண்டுமாவென்று
கண்களில் நீர் ததும்ப நோக்குகிறாள்

இரண்டு அழுகைகளைக் கண்ணுற்றும்
மனமிரங்காத இரவு
இரக்கமற்று விடியத் தொடங்குகிறது..!”—என்று முடிகிறது அந்தக் கவிதை.

குழந்தைகளை எப்போதும் தனது தோழர்களாகவே மதிக்கின்ற கவிஞர் அம்சப்ரியா, அவர்களுடைய கனவுகளையும்,ஆசைகளையும்,எதிர்பார்ப்புகளையும் தனக்குள் வாங்கிக் கொண்டு,அதனைத் தன் மொழியில் வெளிப்படுத்தியுள்ள மேற்கண்ட கவிதையைப் போலவே சுவாரஸ்யமான கவிதைகளாக,பொம்மு பொம்மாரோ, அதிஸ்யாவின் ரோஜாச் செடி,அதிஸ்யாவின் வானம்,வண்ணங்களின் அதிஸ்யா, கீழிறங்கும் சொற்கள் உள்ளிட்ட பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.

பொதுவாகக் குழந்தைகளின் மீதான இச்சமூகத்தின் அடக்குமுறையை, அதுவொரு அடக்குமுறை என்றே தெரியாத அளவில் கலாச்சாரம், பண்பாடு,பாரம்பரிய வழக்கம்,குடும்ப ஒழுக்கம்,ஒழுக்கத்தின் பகுதி..,என இன்னும் என்னன்னவோ இத்யாதிகளின் பெயரால்,நாம் வயதில் பெரியவர்களாக வளர்ந்துவிட்டோம் என்ற ஒரேயொரு சலுகையின் காரணமாக, குழந்தைகளுக்கு,அதுவும் பெண்குழந்தை களுக்கு செய்யும் துரோகங்கள் இந்த சமூகக் கட்டமைப்பில் நீடித்தே வருகிறது. அவர்களின் உரிமைகளைப் பறிப்பதும் மிக இயல்பான வாடிக்கையாகி இருக்கிறது.

சமூகம் அப்படியிருப்பதால் இப்படி நீடிக்கிறது என்றும்,தனிமனிதன் இப்படியிருப்பதால் தான் சமூகம் அப்படியிருக்கிறது என்றும்,இருதரப்பாக நின்று வாதங்களைச் சொல்லித் தப்பித்துக் கொள்வதில் முனைப்பாக இருக்கவும்,ஒவ்வொரு செயலிலும் குழந்தைகளை வளர்ப்புப் பிராணிகளைப் போல ‘டிரில்’ வாங்கவும் தெரிந்த நமக்கு, அவர்களின் இடத்தில் எப்போதும் நம்மை நிறுத்திப் பார்க்கத் தோன்றுவதே இல்லை..எனும் கவலையைச் சொல்லவரும் கவிதையாக,

“மெல்லிய ஊசிதானே என்கிறீர்கள்
சிறிது நேரம்தானே என்கிறீர்கள்
எனக்காக என்று பசப்புகிறீர்கள்
சகித்துக் கொள்ளுதலும்
பொறுமையும் வாழ்வின்
படிக்கட்டென்று
உழுத்துப்போன சொற்கள்
உபதேசங்களாகின்றன

மெல்லிய பலூனை உடைக்க
பச்சைப்புல் போதுமென்று
தெரிந்தவர்கள்தான் நீங்கள்
எனினும்.. ..,
- என்று முடிகிற கவிதையை நாம் அடையாளம் காணலாம்.

அலைபேசி வைத்திருப்பவர்கள் அனைவரும் எப்போதேனும் சந்தித்திருக்கும் அல்லது என்றேனும் சந்திக்கவேண்டியதாயிருக்கும் ஒரு அனுபவமாக விரிந்திருக்கிறது“தவறான அழைப்பு”என்ற கவிதை.

எங்கள் வங்கியின் கடன்வசதி வேண்டுமா.? நீங்கள் உபயோகப் படுத்திக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தின் எண் போலவே எங்களிடமும் சில எண்கள் உள்ளன.உங்களுக்கு வேண்டுமா..? என்பதைப் போன்று வழக்கமான விளம்பர அழைப்புகள்,அல்லது “எட்டுமணிக்கு வண்டியேறிட்டு,இன்னும் வீடு வந்து சேரலையே எங்கடா “ஏறிக்கிட்டு” போனே..?” என்ற ஆண்குரலின் வசவுகளோ, “இன்னைக்கு உனக்குப் புடிச்ச புளிக்கொழம்பு வெக்கட்டுமா..? கத்தரிக்கா போடவா, கருவாடு போடவா..?” என்று பாசம் மிகுந்த பெண்குரலிலோ தவறான அழைப்புகள் நம் அலைபேசியில் வந்து விழுவதும் வாடிக்கையாகத்தான் இருக்கிறது. ஆனால்,கவிஞருக்கு ஏற்பட்ட “தவறான அழைப்பு” அனுபவம் வித்தியாசமானது மட்டுமில்லை.மனதைக் கனக்கவும் வைக்கிறது.

ஒவ்வொரு குடும்பமும் வசிப்பதற்கு,வசதியான பெரியவீடு..என்பதொரு லட்சியம்தான். ஆனால்,வீட்டைப் பெரியதாகக் கட்டியபின்பும் கவிஞருக்கு ஏற்பட்டுள்ள மன நெருக்கடியையும்;,கவலையையும் “இழந்த காதலைப் போல உயிருக்குள் ஊடுருவி என்னென்னவோ” செய்வதாகச் சொல்லும்“எனது செடிகள்”என்ற கவிதை,நமது யோசனைகளின் நீள அகலங்களுக்குள் சிறை வைப்பதாக இருக்கிறது.

அதேபோல் மற்றொரு கவிதையான,
-“குளிர் இரவில்
நடுங்கும் இலைகளுடன்
கனவுகள் பரிமாறும் காற்று
இந்தப்பாதையில் இல்லை இப்போது

மரங்களற்ற நெடும்பாதையில்
விரைகின்றன வாகனங்கள்
குழந்தைகளுக்கு காட்டவென
பறவைகளின் படங்களை
வாங்கிப் போகிறான் ஒருவன்,

இந்த இடத்தில்
ஒரு மலை நின்றிருந்ததெனவும்
இங்கொரு பெருங்காடு
குடியிருந்ததெனவும்
யாரேனும் ஒருவன்
அதிகாரப்பூர்வமாய் வாசிக்க
இந்தக் கவிதையை
வழி தவறவிடுகிறேன் இப்போது..!”---நியூட்ரினோ துகள்,மனித குலத்திற்கு நன்மையைத் தருமா,தீமையைத் தருமா..? என்று பரபர பட்டிமன்றம் நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் வேளையில்,ஒரு மலையைப் பிளப்பதும்,அது சார்ந்த காட்டுப்பகுதியை அழிப்பதும் என்பதாக,அதன் பணிகள் துவங்கும் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.இதுவரை அழிக்கப்பட்ட காடுகளும் மலைகளும் என்ற வரிசையில் இன்னொரு மலையும் காடும் சேர்வதென்னவோ உறுதி.அது நடந்துவிட்டால்,மேற்சொன்ன கவிதை இன்னொரு சாட்சியாகவே காலம்தோறும் நிற்கும்.இதுபோன்றே சூழலியல் தொடர்பாக நம்மை பரிசீலிக்கச் சொல்லும் சில கவிதைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன.

“எங்கோ ஓர் இடத்தில்..” என்று துவங்குகின்ற கவிதையொன்று,உள்@ர் முதல் உலகளாவிய நிலையில் பெண்கள் படும் துயரங்களை உணர்த்திப் போகின்ற அதே நேரத்தில்,ஒரு தேசத்தின் அறம் வீழ்வதையும்,அது அழிந்து போகும் பாதை குறித்தும் நமக்கு சொல்கிறது.

மேற்கண்ட கவிதை நமக்குள் கிளர்த்தும் சிந்தனைகளாக,நாட்டின் நிரந்தர பிரச்சினைகளுள் ஒன்றாக இருக்கிறது பெண்ணடிமைத்தனம்.ஆணாதிக்கப் பண்பாட்டுக் கலாச்சாரத்திற்குள் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்ட,“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த” மகாகவி பாரதி காலம் முதல் லட்சோப லட்சம் பேர் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால்,இன்னும் தீர்க்கவியலாத சிக்கலாகவே அது நீடிக்கிறது.பெண்விடுதலையின் பாதையை சிறிய அளவிலேனும் அடையாளப் படுத்துகின்ற அவர்களுக்கான முழுமையான இட ஒதுக்கீடும் கனவாகவே கழிந்து வருகிறது.

தங்களுக்கான சட்டங்களை தாங்களே வகுத்துக் கொண்டுவிடும் நிலை வந்துவிட்டால்,அது ஆணாதிக்கத்தினை தகர்த்துவிடும் முதல் படியாக இருக்கும்.ஆனால்,அதுவொன்றும் லேசுப்பட்ட காரியமல்ல,தங்கள் மதத்திற்கென்று, இனத்திற்கென்று தனிப்பட்ட சில சிறப்புக்கள் உண்டு.அதன்படிதான் ஒழுக வேண்டும் என்று,கண்ணுக்குத் தெரியாத வலைகளின் பின்னலுக்குள் அவர்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆண்கள்தான் அவர்களுக்கான பாதுகாப்பு என்று கற்பிக்கப் பட்டிருக்கிறார்கள்.ஆண்களின் பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்பதாலேயே பெண்கள் கைதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். கைதிகளாக்கப் படுபவர்கள் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப் படுவார்கள் என்பதும், இனி எப்போதுதான் அவர்களுக்கான முழுமையான விடுதலை..? என்பதுமாக,பல கேள்விகளையும் நமக்குள் ஏற்படுத்திப் போவதை,தவிர்க்கவே முடியாது.

சமூகத்தின் முகமாகவும்.தனிமனித உணர்ச்சி வெளிப்பாடுகளாகவும் ஏராளமான கவிதைகள் இத்தொகுப்பு முழுவதும் விரவிக் கிடக்கின்றன.கவிஞர் அம்சப்ரியாவின் செறிந்த இலக்கிய அனுபவம்,மென்மையான வார்த்தைகளில் வன்மையான கவிதைகள் செய்வதெப்படி..? என்ற அனுபவத்தை வாசகரும் கற்றுக் கொள்ள வழியமைத்துக் கொடுத்திருக்கிறார்..என்று சொன்னால்,அது மிகையில்லை.!

--பொள்ளாச்சி அபி--
நன்றி - "புதுப்புனல்" -கலை இலக்கிய மாத இதழ். மே-2015

------வெளியீடு-பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பில்சின்னாம்பாளையம்
சமத்தூர்-பொள்ளாச்சி
கோவை-642123
தொடர்புக்கு-9095507547-9842275662-

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (7-May-15, 8:32 pm)
பார்வை : 246

சிறந்த கட்டுரைகள்

மேலே