கடைசியாக காத்திருக்கும் அப்பா

அன்று அதிகாலை நான்கு மணி இருக்கும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அமுதன் அவனது மனைவி மாமா… என்று அலறுவது போல் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தான். மனம் சஞ்சலப்பட்டவனாக மறுபடியும் அவனது தூக்கத்தை தொடர்ந்தான்.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அவனது கைபேசி அலறியது, மனைவி தான் அழைத்திருந்தால்…கொஞ்சம் பதட்டப்பட்டவனாய் கைபேசி எடுத்து ஹலோ என்றான்…

அடுத்த நொடியே, அவன் மனைவி பதட்டத்துடன் வெடித்து அலறினாள் என்னங்க…என்னங்க… மாமா…மாமா… என்றாள் இவன் ரொம்பவே பதறியவனாய் அப்பாவுக்கு என்னாச்சு என்றான். மாமா நம்மள விட்டுட்டு போயிட்டாங்க என்று கதறி அழுதாள்.
மறுநொடியே கைபேசி அவன் கையை விட்டு நழுவியது…ஓவென்று கதறி அழ ஆரம்பித்தான். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தங்கியிருந்த அலுவலக நண்பர்கள் வந்துவிட்டார்கள் நிலைமையை புரிந்த நண்பர்கள் அவனுக்கு ஆறுதல் கூறி தேற்ற ஆரம்பித்தார்கள்.

அவனது பயணத்திற்காக அலுவலக மேலாளரை தொடர்பு கொண்டு சொந்த ஊருக்கு செல்வதற்கான விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்கள் பயணம் முடிவான பிறகு ஊருக்கு தொடர்பு கொண்டு எத்தனை மணிக்கு அவனால் வரமுடியும் என்பதனையும் தெரியப்படுத்தினார்கள்

இவனது வருகையை எதிர்நோக்கி தான் இறுதி சடங்கிற்கு நேரம் குறித்தார்கள். விமான டிக்கெட் மெயில் மூலமாக அவனுக்கு அனுப்பப்பட்டது. நான்கு விமானங்கள் (சான்பிரான்சிஸ்கோ-பாங்காங்-மலேசியா-சென்னை-மதுரை) மாறி தான் இவன் சொந்த ஊருக்கு செல்லவேண்டும், பயணத்திற்கான ஏற்பாடுகளை அவனது சக நண்பர்கள் செய்து முடித்தார்கள்.

மனம் முழுக்க அப்பாவின் நினைவுகளை அசை போட்டவனாய் ஏர்போர்ட் நோக்கி பயணப்பட்டான் கூடவே அவனது நண்பர்களும் வந்தார்கள். இமிக்ரேஷன் மற்றும் செக்யூரிட்டி செக் முடிந்து காத்திருந்தான் போர்டிங்கிற்கான அழைப்பு வரும் வரை…அழைப்பும் வந்தது, விமானத்தில் ஏறி அமர்ந்தான்

பக்கத்து சீட்டு பயணிகூட அவன் மொழிக்காரன் இல்லை…கவலை சொல்லி கண்ணீர் விட கூட யாரும் இல்லை. அவன் முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்டவனாய் உணர்ந்தான்.

விமானம் புறப்பட்டு அரை மணிநேரத்திற்கெல்லாம் கவலையில் கண்களை மூடியவனாய் துக்கத்தில் தூக்கத்தை வரவழைக்க முயன்று கொண்டிருந்த வேளையில், “எக்ஸ்க்யூஸ்மீ சார் வாட் வுட் யூ லைக் டு ஹேவ்” என்றொரு குரல் கேட்டு விழித்தான்…

இப்போது அவன் மனம் தைரியம் தேடி மதுவின் துணை நாடியது. அளவுக்கு அதிகமாக கேட்டு வாங்கி குடித்தான் அவர்கள் தர மறுத்தும் கூட…!!!
கண்களை மூடிய அவன் நினைவுகள் அப்படியே பின்நோக்கி நகர்ந்து அவன் அப்பாவோடு இருந்த நாட்களுக்கு இட்டுச்சென்றது.

அவனது தாயார் தவறிய பின்பு [அவன் +2 படிக்கும்போது] வீட்டில் அப்பாவும் இவனும் மட்டும் தான்…உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் வேறு துணை தேடாமல் மகனுக்கு துணையாக அவரும். அவருக்கு துணையாக மகனும் காலம் கடத்தினார்கள்.

அமுதனுக்கு அவனது அப்பா என்றால் உயிர் அவனது தேவையை அவன் கேட்கும் முன்பே நிறைவேற்றி தந்தார்.

அதனாலாயே அலுவலகம் வாய்ப்பு தந்தும் தன் அப்பாவை பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே தனது மனைவி ஆர்த்தியை சொந்த ஊரிலேயே விட்டுச் சென்றான்.அவனது அப்பா, இது தவறு என்று பலமுறை எடுத்துச்சொல்லியும் கேட்கவில்லை. தனக்கு மகள் இருந்தால் எப்படியோ அப்படி தன் மருமகளை பார்த்துக்கொண்டார். வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் சம்பந்தி வீட்டார் அனைவரையும் வரவழைத்து கூட்டுக்குடும்பம் போலவே தன் மருமளுக்கு எந்த குறைவில்லாமல் பார்த்துக்கொண்டார். ஆர்த்தியும் அப்பா என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை சொல்வதில்லை.

இந்நிலையில், துயர சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் தான், அவனது தாயாரை கனவில் கண்டான்… ”டேய் அமுதா…, இனிமேலாவது ஓம் பொண்டாட்டி பிள்ளைங்களை கூட்டிக்கிட்டு போய் சந்தோஷமாக இருடா…அப்பாவை நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லியது, நினைவில் ஒலித்தது…அவன் பதில் கூறும் முன்னே கனவும் கலைந்தது.

விமானம் பாங்காங் வந்து இறங்கிய அடுத்த ஒரு மணிநேரத்தில் அவனுக்கான மலேசியா விமானத்தில் தடுமாறியபடி ஏறி அமர்ந்தான்.

எப்பொழுது விமான பணிப்பெண்கள் வந்து கேட்பார்கள் என்று காத்திருந்து, தன்னிலை தவறும் அளவுக்கு மீண்டும் போதை ஏற்ற ஆரம்பித்தான். அவன் நிலை அறிந்து தரமறுத்தார்கள் வாக்குவாதம் செய்தான் அவனை சமாதானம் செய்து உட்கார் வைத்தார்கள்.

இதற்கிடையில் ஊரிலிருந்து தொடர்பு கொள்ள முடியாத நிலை…

அவனது அப்பா,
வெளிச்சப் பேழைக்குள்
விழிதிறக்க வாய்ப்பில்லாமல்
காத்திருந்தார்
மகன் வந்து பார்த்து விட மாட்டானா
என்ற ஏக்கத்தோடு…!!!???

மலேசியா வந்திறங்கிய அவன் அவனது விமானத்திற்கான லவுஞ் தேடி மீண்டும் போதை ஏற்ற ஆரம்பித்தான். போதையில் தடுமாறியபடியே போர்டிங் போடும் இடம் நோக்கி கால்கள் பின்ன இங்கும் அங்குமாய் அலம்பியபடி போய்ச் சேர்ந்தான்.
சிவந்த கண்களையும், இவன் தடுமாறிய நிலையையும் பார்த்து போர்டிங் அதிகாரிகள் இவனுக்கு அனுமதி மறுத்தார்கள். இவன் வாய் குளறும் நிலையிலும் அவனது நிலையை எடுத்துச்சொல்லி தான் போக வேண்டிய அவசியத்தை சொன்னான்.

சற்று அமறுங்கள், மேலதிகாரியை [கேப்டன்] கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி அவனை உட்கார சொன்னார்கள். அந்த நிலையிலும் அவன் மனது தவித்த தவிப்பு அவனுக்கும் இறந்து போன அவனது அப்பாவுக்கும் மட்டுமே தெரியும்...!!!
அவனது ஊரில் இவனது வருகை எதிர்நோக்கி மற்ற சடங்குகளுக்கு ஆயத்தமானார்கள்… சொல்லி விட வேண்டிய அனைவருக்கும் சொல்லி எல்லோரும் வர ஆரம்பித்தார்கள். இவனின் தடுமாறிய நிலை அங்கு யாருக்கும் தெரியாது.
போர்டிங் அதிகாரியை பரிதாபத்தோடு பார்த்தான்… அவனை பரிசோதித்த பிறகு… விமானத்தில் அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள் அவனது செக்-இன் பேக்கேஜையும் ஆப்லோட் செய்து விட்டார்கள்.

ஆயிரம் மின்னல்கள் அவனின் தலையில் தாக்கியது போல் வலியில் துடித்தான்… மதி மயங்கும் போதை அவன் தலைவிதியை மாற்றியது…!!!

தனக்காக கடைசியாக முகம் காட்ட காத்திருக்கும் அப்பாவை கூட அவனால் பார்க்க முடியவில்லையே என்ற தவிப்பு அவனை நிலைகுலையச் செய்தது.
நீ எங்க இருந்தாலும் அப்பாவுக்கு கொள்ளி வைக்க வந்திரனும்னு சொன்ன அப்பாவின் குரல் மண்டைக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது…!!!

நேராக ரெஸ்ட்ரூமுக்கு சென்று பூட்டிக்கொண்டு அழுது தீர்த்தான்.
குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணப்படவில்லை என்று தெரிந்ததும் அவனது மகனை வைத்து சடங்குகளை ஆரம்பித்தார்கள்…

அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியாத மகனின் மகன் தன் அப்பாவின் கடமையை நிறைவேற்றினான். ஆம், அமுதனின் மகன் தாத்தாவிற்கு கொள்ளி வைத்து, தன் அப்பாவின் கடமையை சரி செய்தான்.
ஊரில் உள்ள அனைவரும் சொல்லிய வார்த்தை பெத்த புள்ள கொள்ளி வைக்க வரலையே…?

பாசக்கார மகனின் இந்த பரிதாப நிலை எதனால்…??? போதையினால்…
இழந்தது…அவனது உரிமையை…!!!

எழுதியவர் : சகா (சலீம் கான்) (16-May-15, 11:30 am)
பார்வை : 762

மேலே