ஓட்டைச் சகடம்

அவருக்குத் தெரிந்து பேசினாரோ என்னவோ அவசரத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டார். மனப்பிராந்தியங்களின் அழுத்த நடவுகளில் வீசிச் சென்ற நாற்றுகளின் ஒழுங்கீனம் போல் அப்பப்ப அவருக்கும் அப்படித்தான் நடக்கிறது அதற்கப்புறம் தனிமையில் இருக்கும் போது அவருக்குள்ளாகவே அவருக்குள் குறை பட்டுக் கொள்வார் . ''அவசரப் பட்டுவி ட்டோமோ அப்படி பேசி இருக்கக் கூடாதோ "
பக்கத்தில பள்ளிக்கூட மணி அடித்தது ..மணி நான்கு ஆகிவிட்டது கல்லூரிக்குப் போன மகன் இப்ப வந்துடுவான் அப்புறம் கொஞ்சம் நேரம் கழித்து பள்ளியிலிருந்து மகள் வந்திடுவாள் ....பசங்க வந்ததும் அம்மா எங்கே என்று கேட்பாங்க .
''திட்டிப் போட்டேன் ..நல்லா ஏசி விட்டேன் ..கோபித்துக்கொண்டு அவ அக்கா வீட்டுக்கு போய் விட்டாளென்று " எப்படி சொல்றது. அவர் மனசுக்குள்ளே கிடந்தது உழன்று கொண்டிருந்தார்

அவரும்தான் என்ன செய்வார் அவர்தான் எங்கும் போகாமல் வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கிறார் ...நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை .தனியார் நிறுவனத்தில் நிர்வாகியாக உள் மாநிலத்திலும் வெளிமாநிலத்திலும் வேலை பார்த்து வந்தவர்தான் .எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ஆனாலும் அந்த வயிற்று வலி வந்து அவர் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது .ஆசுபத்திரியில் இரண்டு முறை அறுவை சிகிட்சை செய்து மிக அவதிப் பட்டதில் கையிலிருந்த இருப்பெல்லாம் போய், இருந்த வேலையும் போய் - எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறார்.

இவருக்கு வயசில எல்லாரும் பேரன் பேத்தி எடுக்கிறப்போ இவருடைய பிள்ளைகள் இப்பதான் படிக்குது.குடும்ப சூழல் காரணமா தாமதமா கல்யாணம் பண்ணினா அதனுடைய சோகங்களை அவராலே ஜீரணிக்க முடியவில்லை...அறுவை சிகிச்சைக்கு பிறகு உடம்பு முன்னைப் போல இயங்க மறுக்கிறது.. வயது குறைவாக இருந்தாலும் அவருடைய பள்ளிக்கூட சான்றிதழில் குறிப்பிட்டிருக்கிற பிரகாரம் அவருடைய மூத்த அண்ணன் அவருக்கு இளையவராக இருக்கிறார் .இதுதெரிய வரும்போது காலங்கள் ரொம்ப ஓடிவிட்டது.அதன் பிரகாரமே ரிட்டையர் ஆவதற்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது .
வேலை தேடினா விரக்திதான் மிஞ்சுது .

''நாங்கள் உங்களுக்கு தரக்கூடிய சம்பளத்தில் புதியவர்கள் இரண்டு பேரை நியமித்து அவர்களிடம் உங்களைவிட அதிகமாக வேலை வாங்கிக் கொள்வோமே" என்று சொல்லி விடுகிறார்கள்.சிலர்,'' ஒய்வு பெறப் போற வயசுல இப்ப யாரு வேலை தருவாங்க"என்று நேருக்கு நேர அறைஞ்சு அனுப்பிடுறாங்க.
ஏதாவது கடை கன்னி வைக்கலாமென்றாலும் பணமும் தேவை .முன் பின் தெரியாமல் எதை ஆரம்பிக்கிறது

இப்படிப்பட்ட சூழலில்தான் அவருடைய பொழுதையெல்லாம் வீட்டில இருக்கும் கணிணியோடுதான் கழிப்பார் . சின்ன பிராயத்திலிருந்தே கவிதை- பாடல்கள் எழுதுவதில் திறமை உள்ளவர் இடைப்பட்ட இருபது வருஷமாக அதற்கு நேரமில்லாமல் இப்ப எழுத ஆரம்பிச்சார் எல்லோரும் நல்லா இருக்குது என்று சொல்ல சொல்ல மேலும் தன்னை வளர்த்துக் கொண்டார்

ஆனால் அதற்கு அப்பாலும் ஒரு வளர்ச்சி அடையலாமென்றால் புத்தகம் போடணும் ..பதிப்பகத்துக் காரங்களே சொல்றாங்க ''கவிதையெல்லாம் யார் இப்ப படிக்கிறாங்க.."
''கவிதைகள் மலிஞ்சு போச்சு.."
''நூற்றுக்கு எண்பது பேர் கவிஞர் என்று சொல்லிக்கிட்டு வாராங்க...நாங்க எவ்வளவு புத்தகம் அச்சடிக்க முடியும் .
விற்கவேன்டாமா"
''வேணுமுன்னா நீங்க சொந்த காசில புத்தகமா போடுங்க ....அதுவும் கவிதையெல்லாம் போடாதீங்க.கதை என்றால் போடுங்க"என்று சொல்லி விடுறாங்க.

கதையோ கவிதையோ எழுத வேண்டுமென்றால் மனசு நிறைந்து வேறு எந்த பிரச்சினைகள் இருக்கக்கூடாத சூழல் வேண்டும்.ஆனால் மனசு பூரா கவலைகள் வச்சுகிட்டு இருக்கிற அவரால முன்னைப்போல் கவிதைகள் எழுத முடியவில்லை. அவருடைய வீட்டுக்கார அம்மாவுக்கும் இந்த கவிதை கருமாந்திரமெல்லாம் கொஞ்சமும் பிடிக்காது அடிக்கடி சண்டைதான்.

பிள்ளைகள் கிட்டயும் கோபப்பட முடியவில்லை..தோளுக்கு மேல் வளர்ந்துட்டாங்க .கல்லூரியில் படிக்கிற பெரிய பிள்ளை ஆகியும் வீட்டு கஷ்டம் பையனுக்கு புரிய மாட்டேங்குது.எப்பப் பார்த்தாலும் கையில அலைபேசி தான்...சாப்பிடும் போதும் ...படுக்கையில் இருக்கும்போதும் கையில செல் இருந்துகிட்டே இருக்கணும்...அப்படி என்னதான் பண்றானோ ...கவனக் குறைவு வேற . இதில காட்டிற வேகம் கொஞ்சம் படிப்பிலும் காட்டினால் நல்லா இருக்கும்....இப்படித்தான் கவனக் குறைவால இதற்கு முன் வைத்திருந்த அலைபேசியை கீழ போட்டு உடைத்து விட்டான் .புது செல் வாங்கித் தரனுமென்று ஒரே தொந்தரவு...

''சரிப்பா..கொஞ்சம் விலை குறைவா உள்ளத வாங்கிக்கப்பா "என்றால்
இல்லை ...மார்க்கெட்டில அன்றைக்குத்தான் வந்த புது செல் தான் வேண்டுமென்கிறான்....
அவருடையா சம்சாரத்தின் நகைகள் ஒன்று ஒன்றாக விற்றுத்தான் வீட்டுல செலவு நடக்குது. இதையெல்லாம் சொல்லி கொஞ்சம் பொறுப்பா இருப்பா என்று சொன்னால் அவன் டென்ஷன் ஆகிறான் ...
.பிள்ளைகளுக்கு நிறைய செய்யவேண்டுமென்று அவருக்கு ஆசை ஆசை யாகத்தான் இருக்குது ..ஆனால் நிலவரம் சரி இல்லையே .பசங்க புரிந்து கொள்ள வில்லையே என்று அவருக்கு வருத்தம்.

ஆக எல்லா கோபத்தையும் சம்சாரத்துக்கு மேல காட்டிடுவார் .அப்படிதான் இன்று சண்டையில கொஞ்சம் அதிகமா திட்டிவிட்டார் பாவம் அந்த அம்மா ...வீட்டில வருமானம் இல்லைஎன்றால் நிம்மதி எங்கிருந்து வரும் . கோபத்தில் அந்த அம்மா அவங்க அக்கா வீட்டிற்கே போய் விட்டாங்க .பசங்க பெரியவங்க ஆனாலும் பொம்பளைகள் குணத்தில கல்யாணமாகி வரும்போது எப்படி இருந்தாங்களோ அப்படியேதான் இருக்காங்க ..கொஞ்சம் கூட மாறவில்லை

மகள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்து விட்டாள் . வாசலில் காலுறை கழற்றும் சத்தம் கேட்கிறது.
''அம்மா எங்கப்பா.. "
''உங்க பெரியம்மா வீட்டிற்குப் போயிருக்காமா."
அவளுக்குப் புரிந்து விட்டது...ஏதோ சண்டை நடந்திருக்கிறது.
''ஏம்பா இந்த மாதிரி பண்றீங்க ....போய் அம்மாவை கூட்டிகிட்டு வாங்க.."
வாசலில் கூரியர் காரர் ,''சார் கொரியர்"என்று சப்தம் கொடுத்தார்

ஆற்காட்டிலிருந்து பார்சல் வந்தது.அவருடைய முகநூல் நண்பர் ஒருவர் அவர் நடத்தும் =அருவி= இதழின் காலாண்டிதழ் அனுப்பி இருக்கிறார் ...அவருடைய படைப்பு இருக்கும் பக்கத்தை அவர் கண்கள் மேய்ந்தது .

!! நெருப்பாற்றில் நடந்தவலி
என் வயற்காட்டின் கரை முழுதும்
ஏக்கங்களை விழுங்கி உயிர்ப்பித்தலில்
எச்சமாகிப் போனேன் நானும்
இறுதியில் மிஞ்சியது
கேட்பாரற்றுக் கிடந்த என் கவிதைத் தாள்களும்
அனாதையான என் எழுதுகோலும்...!!

என்று துவங்கியது அந்த கவிதை...இதழோரங்களில் மெல்ல அரும்பிய வருத்தம் கலந்த புன்னகையோடு கால் சட்டைக்கு மாறி கிளம்பத் தயாரானார் கோபித்துவிட்டுப் போன மனைவியைக் கூட்டிக்கொண்டு வர.
வானில் மூன்றாம் பிறை மெல்ல எட்டிப் பார்த்தது .

எழுதியவர் : சுசீந்திரன். (19-May-15, 1:13 pm)
பார்வை : 1585

மேலே