மமசாரற் கானக நாடன் கலந்தான் - கைந்நிலை 1

'கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

வரைவு நீட்டித்தவழி யாற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

நுகர்த லிவருங் கிளிகடி யேன
னிகரின் மடமா னெரியு - மம....சாரற்
கானக நாடன் கலந்தா னிலனென்று
மேனி சிதையும் பசந்து.

இந்தப்பாடலில் நான்காவது சீர் முழுவதும் தெரியாமல், 'மம..சாரற்' என்றிருக்கிறது. எரியும் என்ற ஈரசைச் சீருக்குப் பின், நிரையசை வர வேண்டும். மலைச்சாரல் என்று அசையும், 'மடமா னெரியும் மலைச்சாரல் என்று மோனையும் இசைவாய் அமைத்தால், குறிஞ்சித் திணைக்கு ஏதுவாகவும் அமையும் என்று கருதுகிறேன்.

நுகர்த லிவருங் கிளிகடி யேன
னிகரின் மடமா னெரியும் மலைச்சாரற்
கானக நாடன் கலந்தா னிலனென்று
மேனி சிதையும் பசந்து.

பொருளுரை:

தினைக்கதிரைத் தின்பதற்காகத் தினைத்தாளின் மேல் ஏறுங் கிளிகளை யோட்டுகின்ற தினைப்புனத்தில் ஒப்பில்லாத இளமையான மான்கள் நெருங்கித் திரியும் மலைச்சாரலில் காட்டிற்கு உள்ளாகிய நாட்டையுடைய தலைவன் என்னுடன் சேர்ந்தான்; அவ்வாறு சேர்ந்த தலைவன் இப்பொழுது அருகில் இல்லாது பிரிந்தான் என்பதையறிந்து என் உடல் பசலை நிறமாகி எழிலழிந்தது என்று தலைவி தோழிக்குக் கூறினாள்.

விளக்கம்:

நுகர்தல் - தின்னுதல். இவரும் - ஏறுகின்ற. கடி - ஓட்டுகின்ற.

ஒன்றற்கொன்று உயர்ந்ததும் தாழ்ந்ததுமாய், கன்றும் பிணையும் கலை (தலைமை ஆண் மான்) யுமாய்ப் பலவகையாக வரும் மான்கள் என்பதை விளக்க ‘’நிகரில்மடமான்’’ என்றார்.

நிகரில் - ஒன்றற்கொன்று ஒப்பில்லாத

நுகர்தல் இவரும் - நுகர்தற்கு இவரும்,

ஏனல் - தினை. இது தினை விளையும் இடத்தை யுணர்த்தியது:

அமர் சாரல் - ஒப்பில்லாத இளமையான மான்கள் நெருங்கித் திரியும் விரும்புகின்ற மலைச்சாரலில்;

அமர் சாரல் என்ற சொல் பொருத்தமாயிருக்குமா அல்லது மலைச்சாரல் என்ற சொல் பொருத்தமாயிருக்குமா என்று சிந்திக்க வேண்டியது.

கானக நாடன் என்பது தலைவனையுணர்த்தியது.

மலைச்சாரலில் வந்து சேர்ந்தான், தினைப்புனத்திற்கு வந்து சேர்ந்தான் எனக் கொள்ள வேண்டும்.

பகற்குறியிற் பல இடங்களில் வந்து கலந்திருப்பான் ஆதலால் ‘’ஏனல், சாரல்’’ என்றார்.

சாரலிலுள்ள ஏனலில் எனினும் ஏனல்களையுடைய சாரலில் எனினும் பொருந்தும்.

என்னையறியாதே என்மேனி பசந்து சிதையும் என்று வியப்பாகக் கூறினள் எனக் கொள்ள வேண்டும்.

கடியேனல்; அமர் சாரல்: வினைத்தொகைகள்.

விவாதம்:

கரின் மடமா னெரியு - மம....சாரற்---என்ற சொற் தொடருக்கு அமர் சாரல் என்றுதான் tvu தளத்திலும் குறிப்பிட்டுள்ளது; அதையே எடுத்து வழிமொழிந்துள்ளார் திரு.ஆவுடையப்பன்.

"மம என்ற சொல்லுக்கு நீர் என்ற பொருள் இருப்பதாக அதே tvu தளத்தின் அகராதியில் பொருள் கண்டேன். அதனால் இங்கு மமசாரல் என்றே ஏன் பொருள் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் என்னுள் எழுகிறது.

அமர் என்ற சொல்லின் ஆரம்பம் ஒத்துப் போவதாகக் காணப்படினும், 'ர்' என்ற எழுத்தை வலிந்து சேர்க்கிறோமோ என்ற எண்ணம் என்னுள் எழுகின்றது. அதிகப்படியான எழுத்துச் சேர்க்காமல் மமசாரல் என்று கொண்டு இதற்கு நீர் வளமுள்ள மலைச் சாரல் என்று பொருள் கொள்ளலாம் என்பது எனது எண்ணம்.

மான்கள் நெருங்கித் திரிவதுவும், மலைச்சரலில் (மலையோரத்தில்) உள்ள நீர் நிலையின் காரணமாகவும் இருக்கலாமே!

அல்லாமலும், தினைக்கதிரினை உண்பதற்காகத் தினைத்தாளின்மேல் ஏறும் கிளிகளும், இளைய மான்கள் நீர்வளமுள்ள மலைப் பக்கங்களில் நெருங்கிக் காணப்படுகின்றன என்பதும், தலைவியின்பால் காமச் சுவையை எதிர்பார்த்து நெருங்கியிருந்த தலைவனைப் பற்றிய குறிப்பாகவும் கொள்ள இடமிருக்கும்தானே!. நீங்களும் இதை யோசித்தால் மமசாரல் என்றிருப்பதாகவே கொள்ளலாம் என்று என்னோடு ஒத்துப் போவீர்கள் என்று நம்புகிறேன்" என்கிறார் சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த திரு.காளியப்பன் எசேக்கியல்.

என் கருத்து:

தமிழ் lexicon: ல் கீழேயுள்ள பொருள்களில் வருகிறது. மம - Mine - என்னுடைய - மமவிநாயகன் (திருப்பு. 16) என்ற உதாரணமும் தரப்படுகிறது.

மம என்பதும் மமசாரல் என்பதுவே முற்றிலும் சரி.

மம - Mine - என்னுடைய - மமவிநாயகன் (திருப்பு. 16).
மம - n. (யாழ். அக.)
1. Luck - அதிட்டம்.
2. Water - நீர்.

எனவே, திரு.காளியப்பன் எசேக்கியல் அளிக்கும் விளக்கம் முற்றிலும் ஏற்புடையதே என்ற கருத்துப்படி, பாடல் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும். .

நுகர்த லிவருங் கிளிகடி யேன
னிகரின் மடமா னெரியும் மமசாரற்
கானக நாடன் கலந்தா னிலனென்று
மேனி சிதையும் பசந்து. - கைந்நிலை 1

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-May-15, 3:14 pm)
பார்வை : 138

சிறந்த கட்டுரைகள்

மேலே