ஏகாந்தத் துயரம்

பனிக்காலம்
மரத்துப் போக வைத்த
நிலவினை
உன் காதலால்
சுட்டுச் சிவப்பித்து
இளவேனிலுக்குப்
பக்குவப்படுத்துகிற
அக்னிப்பரீட்சையில்
ஒரு கூடை வெள்ளை ரோஜாவை
தமயந்தியின்
வெள்ளன்னமென
தூதனுப்பினேன்
வந்ததா சகி ?

நிலவையும்
சப்த ரிஷிமண்டலத்தையும்
உன்னோடு கோத்துச்
சேர்த்து
துருவ நட்சத்திரத்து வேலிமுள்ளில்
செங்காந்தலை விரியவைத்து
புறாவின் சிறகுகளில்
நீ குடைவிரிக்கையில்
கடைசி விண்வெளி பயணியென
வேறொரு நட்சத்திரத்தில்
ஒளி விரித்து வளரும்
உயிரின் முனைகொண்டு
காத்திருக்கிறேன் !

பட்டாசுகளுக்கும்
பூவானங்களுக்கும்
இடையில் அமர்ந்து
நீ காதல் மத்தாப்புக்
கொளுத்துகிறாய் -
நான் கந்தகப்பூவாய் சிதறி
கைதி விழுங்குகிற
கடைசி விஷ மாத்திரையில்
எழுதப்பட்டுள்ள
எழுத்துக்கள்
கரைவதைப்போல கரைகிறேன் !

காத்திருக்கிறேன்
உன் ராஜகுமாரன்
சமுத்திரத்து அறிவுஜீவிகளைப்
பரிகசிக்கும்
கிணற்றுத் தவளையின்
ஏகாந்தத் துயரத்தோடும்
காதல் கனிந்த கண்களோடும் .

எழுதியவர் : பாலா (22-May-15, 8:42 pm)
பார்வை : 126

மேலே