இசை

அலங்கார தோரணங்களால்
காற்று மண்டலத்தில்
கவிதை சிலைகளை
அமரவைத்து அழகு பார்க்கும்
நந்தவன தேர்

புத்தகத் தீவுகளில்
அடிமைகளாகிக் கிடந்த வரிகளை
விடுதலையாக்கி
தென்றல் சாகர வீதிகளின் வழியே
கரையேற்றும் படகு.

துயிலும் வாத்தியங்களின்
தூக்கம் களைகையில்
எழும்பும் ஈனஸ்வரங்கள்

வாத்திய கிளைகளில்
அமர்ந்திருக்கும்
உருவமில்லா பறவைகள்
இசைவேடர்களின்
விரலம்புகள் பட்டதும்
சிறகடித்து பறந்து மனித மரத்து
செவிக்கூட்டுக்குள் ஒளிந்துகொள்கின்றன

கவிதை நிலவுக்கு
வானவில்லை அணிவித்து
தென்றலின் வீதியில்
ஊர்வலம்போகும்
மின்மினிகள்

அடங்காத இதயத்தையும்
அடக்கிக் கட்டிப்போடும்
அன்புமிக்க காதலி தன் .
கவிதைக் காதலனை கரம்பிடித்து
முன்னால் அவன் செல்ல
பின்னால் நாணிச் செல்லும்
புதுப்பெண்ணாய் ஊர்வலம் போனவை
நேற்றைய காற்றுகளில்
கவிதைகள் சாப்பிட்டு
ஏப்பம்விடும் முதலைகளாய் இன்றுகளில்

தன்னுடைய மழையில்
கவிதைகள் நனையாமல்
குடைபிடித்த இசைமேகம்
தன்னால் நனைந்த இதயங்களில்
சுரமாய் இருந்தபோதும்
ஜுரமாய் இருந்ததில்லை

நவீனத்துவத்துள் புகுந்த
ஆரவாரங்களால்
ஆர்ப்பாட்டங்களின்
அழகிய வாள்கொண்டு
கவிதா விலாசத்தின் கழுத்தறுதக்கும்
வாத்திய கருவிகளிலாலான
கசாப்புக் கடை

தொலைந்து போவதற்கான
துணிச்சல்களுடன்
திருவிழாவுக்குச் செல்லும்
குழந்தையாய்
எழுதப்படுகின்ற வரிகளுக்கு
இரைச்சல்களால் இரதமிழுக்கும்
இசைக்கரங்கள் அறிவதில்லை
மாற்றங்களால் ஏற்படப்போகும்
ஏமாற்றங்கள்..

கவிதை காதலியை கரம்பிடித்து
காலங்கள் தாண்டி வாழவேண்டிய
இசைக்கணவன்
இம்சை கணவனாகுவதில்
தீர்க்க சுமங்கலியாதலான
பாடலின் வாழ்க்கை
விவாகரத்துக்களில் முறியும் திருமணத்தின்
விவகாரங்கள் போன்று முடிகின்றன ..

ஒலிகள் இல்லா உலகில்
ஜனிப்பதற்கான ஆசைகளுக்கு
உயிரூட்டும் பிரம்மத்துவத்தால்
இசைகளாய் பிறப்பெடுத்து
மரணிக்கின்ற பாடல்களுக்கு
சவப்பெட்டியாகி
செவிகளுள் நல்லடக்கம் காணும்
சமகால சங்கீதத்தின் ஆத்மா
ஆவியாய் அலைகின்ற வானத்தில்
இதயத்தை வருடும் எளிய ரீங்காரம்
தென்றலில் தவழ்வதற்கான சாத்தியம்
நடைமுறைகளில் சாத்தியமான பூகம்பமாய்...

தன்னுடைய சாகரத்திலிருந்து
முத்துக்களும்
முன்பின்னறியா வண்ண வண்ண
மீன்களுமென அள்ளித்தந்த
அட்சய பாத்திரம்
பிச்சைக்காரனின் தெருவோடாகியதில்
பெய்யும் கண்ணீர் மழைக்கு
உப்பாகி போனது மிக
தப்பாகிப் போனதே.

புதைந்து போனதை தோண்டும்
அகல்வாராச்சிகளில் எங்கேனும்
ஒரு பூங்காற்று புறப்படும் என்னும்
நம்பிக்கைகள் தாங்கி இருப்பதால்தான்
நாளைய ரசனைக்காய் செவிகளோடு
பிறக்கின்றன குழந்தைகள் என்பதால் இனியும்
தேன் சிந்துமோ வானம் ?

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-May-15, 2:36 am)
Tanglish : isai
பார்வை : 970

மேலே