முருகன் அருள்

முருகன் அருள்
“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!”
ஈசனின் நெற்றிக்கண்ணிலே அவதரித்து, சூரனை வீழ்த்தி தேவர் குலம் காத்து, அறுபடை வீட்டிலும் அருள்பாலித்து வருபவன் குஞ்சரிக் கணவனாம், வள்ளிமணவாளனாகிய கந்தன்.

கந்தன், கடம்பன், காங்கேயன், கார்திகேயன், சரவணன், குருபரன், குமரன் என்றெல்லாம் பல்வேறு திருநாமங்களைக் கொண்டு விளங்கும் ஷண்முகக் கடவுளின் ஏழாவது படைவீடு என்ற புகழ் பெற்ற திருத்தலமே இந்த மருதாசல மூர்த்தி குடிகொண்டு அருள் பாலிக்கும் மருதமலையாகும்.
‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என்ற பொன்மொழிக்கு இணங்கத் தன்னை நாடி வருவோர் பலரின் குறைகள் யாவற்றினையும் போக்கி நிறைவாழ்வு நல்குபவன் இத் திருமகன்.
“அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
நெஞ்சமதில் அஞ்சேலென வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்றோது வார்முன்”
ஆம்! அருள் வள்ளலாம் முருகப் பெருமானை உள்ளன்புடன் ஒருகால் நினைக்திடின் உடனே வந்து அருள்பாலிப்பவனாயிற்றே! அம் மருதாசல மூர்த்தி.
வழிநடையாய் பல இடங்களில் சுற்றி வந்த பாம்பாட்டி சித்தர் இம் மலைமீது வந்தபோது தாகம் மேலிடத் தவித்துத் துதித்தார்.
“தாயினும் சலப்பரிந்து காக்கும் ஈசனின்” திருக்குமரனாயிற்றே அவன்!
“அல்லல் போம் வல்வினைப் போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைப் போம் போகாத் துயரம் போம்
நல்ல குணமதிகர் மாமருணை கோபுரத்துள் வீற்றிருக்கும்
செல்வ கணபதியை கைதொழுதக்கால்”
என்று போற்றப்படும் முழுமுதற் கடவுளாகிய வினாயகப் பெருமானின் சோதரனும் ஆயிற்றே!
அம்மட்டுமா? சக்தி வடிவேல் ஏந்தி சிக்கல் பல போக்கும் சிங்கார வேலனல்லவா அவன்! செந்தமிழ்க் காவலனல்லவா அவன்!
எனவே, உடனே மருத மர வேரின் வழியாக, நீரூற்றாய் மலர்ந்து சித்தரின் தாகமதைத் தணித்தார்.
இவ்விறைவனின் அருள் பொங்கும் கருணை அன்பினில் தோய்ந்த திரு சின்னப்ப தேவர் அவர்களால் உதயமானதே இத்திருக்கோவில்.
இன்றைய நன்னாளில் வானளாவ உயர்ந்தோங்கும் ராஜகோபுரத்துடன் கம்பீரமாக தோற்றமளிக்கின்றது இத்திருத்தலம்.
எழில் மோகனப் புன்னகை புரியும் மாலவன் மருகனன்றோ அவன். சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று ஔவை பிராட்டியை சோதித்து அவ்வன்னையின் இன் தமிழில் திளைத்தவனாயிற்றே!
பேசும் தன்மையற்று இருந்த குமர குருபர்ருக்கு பேசும் வன்மையளித்து, அக்குழ்ந்தையின் மழலை மொழியில் கந்தர் கலிவெண்பா, முத்துக்குமார ஸ்வாமி பிள்ளைத் தமிழ் போன்ற செம்மையான பாடல்களை இசைக்கச் செய்து அச் செந்தமிழ் பாச்சரத்தினால் இன்பம் திளைத்தவனாயிற்றே!
அம்மட்டுமா? இளம் பருவத்தில் பல வழிகளில், பல தவறுகள மேற்கொண்டு சுற்றித் திரிந்து அதனால் குஷ்டரோகம் மேலிட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றத்தின் கோபுரத்தின் மீதேறி உயிர் விட எத்தனித்த அருணகிரிநாதரை தடுத்தட்கொண்டு, அவர் மனதையும் மாற்றி, இறுதியில் அவராலேயே திருப்புகழ் என்ற ஓர் அரிய பாச்சரத்தினையும் ஏற்றவனல்லவா அக்குமரன்.
இவ்வாறெல்லாம் திகழ்ந்த அம்முருகப் பெருமான் பாலமுருகனாய் விளங்கிய அந்நாளில் தந்தை ஈசனால் வைக்கப்ப்பட்ட போட்டியில், மயில் வாகனமேறி நொடிப் பொழுதில் உலகையே வலம் வந்தும், கிடைத்தற்கரிய மாங்கனி தனக்குப் பரிசாகக் கிடைக்காமையால் மனம் வருந்தி அம் மாங்கனிக்காக மனம் நொந்து, பால தண்டாயுதபாணியாக பழனியில் குடியேறி தனித்து வீற்றிருந்தவனும் அதே வடிவேலவனல்லவா?
அவன் வடிவேலன்; சிவபாலன்: தொண்டர்களுக்காக வேலைக்காரனாகக் கூட வரும் வன்மையாளன். தன்னை நாடி மனம் வருந்தி, தீராத துயர் போக்க வேண்டி, விரதமிருந்து கால்நடையாகவே பால்காவடி, பன்னீர்க்காவடி, புஷ்பக் காவடி, மச்சக்காவடி, இளனீர்க் காவடி என்ற பல காவடிகளை சுமந்தும், அதோடு அம் முருகப்பெருமானின் மனம் குளிரச் செய்ய, பால் குடம் ஏந்தியும் வரும் அடியவர்களை விரைவினில் காக்கவேயன்றோ அவனுக்கு பறக்கும் மயில் வாகனம் ஊர்தியாக அமைந்துள்ளது.
இவற்றையெல்லாம் கருதியே ஒரு மெய்யன்பர் தன் உடலின் பல்வேறு கூறுகளை அம் முருகனாகவே கருதி,
“மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியோ குகனாலயம்
என் குரலே செந்தூரின் கோவில் மணி......
அது குகனே... ஷண்முகனே.... என்றொலிக்கும் இனி....”
என்று மனம் உருகிப் பாடியுள்ளார்.
மற்றோர் அன்பர்,
“உள்ளத்திலே கோவில் கட்டி உன்னை அங்கு குடிவைத்தேனே....
எண்ணத்திலே தொட்டில் கட்டி என் அரசே தாலாட்டினேன்”
என்றும் பாடியுள்ளார்.
இன்னோர் இடத்தில், ஓர் அடியார், முருகப் பெருமான் எவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் அவன் அவ்வாறு இருக்கும் பொழுது தான் எப்படியெல்லாம் இருப்பேன் என்பதனை மிகவும் நேர்த்தியாக,
“நீயொரு தாயானால் முருகா நானுந்தன் பிள்ளை
நீயொரு சேயானால் முருகா நானொரு பொம்மை
தாயானாலும் சேயானாலும் கைகளிலே என் வாழ்வு
உன் கைகளிலே என் வாழ்வு
தொட்டுக் கொடுத்தால் சிரிப்பேன் நான்
தட்டிக் கழித்தால் அழுவேன் நான்
அழுவதும் சிரிப்பதும் என் வேலை
அடிப்பதும் அணைப்பதும் உன் பாதம்”
என்று மனம் உருகிப் பாடியுள்ளார்.
வேறோர் அடியாரோ,
சின்னப் பனித்துளி நான் முருகா
மின்னும் கதிர் ஒளி நீ.... என்றும்,
தாவ்விழும் அலை நான் முருகா
தாங்கும் அருள் கடல் நீ..
என்றும் பாடிப் பரவசமடைகின்றார்.
இவ்வாறெல்லாம் திகழும் அம்முருகன் அன்பரிடம் விரும்புவது பைந்தமிழ்ப் பாவை. ஏற்பதோ, அன்பரின் மெய்யன்பை மட்டுமே. இத்தகைய சீரும் சிறப்பும், பேரும் புகழும் பெற்ற அம் முருகப்பெருமானிடம்,
“பன்னிரு விழிகளிலே......பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலே போதும்...

வாழ்வில் இடரேது வாராது எப்போதும்..”
என்று வேண்டி வழிபடுவோம்.
இவ்விறைவன் பெரும்பாலும் மலைக் கோவில்களிலே தானே எழுந்தருள்பாலிக்கின்றான். இதைக் காணுற்ற ஒரு அன்பர் இவ்விறைவனை நோக்கி,
“ஏறிவரக் கால் நோகுதே... நீ இறங்கி வந்து அருள் செய்யப்பா
ஏனைய்யா மலைக்குச் சென்றாய்...
உனக்கு என் இடத்தில் கோவம் ஏனைய்யா?...
காவடிகள் தூக்கி வந்துதான்
வள்ளிக் கந்தன் உன்னைக் காணவேண்டுமா?
சேவற் கொடி கொண்ட முருகா...
உன் சேவடியை என்று தருவாய்?
நீ இருக்கும் இடம் தேடி வந்துதான்
இந்த ஏழை உன்னைக் காணவேண்டுமா?
நான் இருக்கும் இடம் என்று வருவாய்
பேரின்பநிலை என்று தருவாய்?
என்று கனிந்துருகிப் பாடுகின்றார்.
இது போன்ற பல அடியார்களால் பல நிலைகளில் பாடப்பெற்றவனாயிற்றே இப்பெம்மான். பக்தர்களின் அருள் வெள்ளத்தில் மிதந்து தங்க ரதத்தில் பவனி வரும் அருள் வள்ளலாயிற்றே! அவன். அவனைப் பாட உள்ளம் உருகி, ஊன் உருகுவதில் ஆச்சர்யம் ஏது? சொல்ல, சொல்ல இனிக்கும் தெள்ளமுதம் அன்றோ? தித்திக்கும் தேனமுது அன்றோ அவன்.
இதனாலன்றோ மற்றோர் அடியார், அவன் குடியிருக்கும் இடங்களிலேயே, தான் பலவாறு பிறக்க வேண்டி,
“மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்..
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்...
என்று இன்னிசைப் பாடிக் கசிந்துருகுகிறார்.
இத்தகைய சிறப்புற்ற சிவகாமி மகனை சிந்தனை செய்து நம் தீவினை யாவும் போக்குவோம். அறியாமை நீக்கி அறிவென்னும் சுடரினை நம் உள்ளத்தில் ஏற்றுவோம்.
பாட்டுக்கோர் புலவன் பாரதி பாடியதைப் போல்,
“அறிவாகிய கோவினிலே....
அருளாகிய தாய் மடிமேல்
பொரிவேலுடனே வளர்வாய் அடியார்
புது வாழ்வுபெற புவிமீதினிலே......
முருகா! முருகா! முருகா!
என்றுப் போற்றிப் பரவிடுவோம்.
வாழ்வோம்!...வாழ்விப்போம்!....
வாழ்க வையகம்!.. வாழ்க வளமுடன்.
அன்புடன்,
திருமதி
விஜயலக்ஷ்மி
கோவை-22.
“துள்ளுமத வேட்கை கணையாலே....
தொல்லை மிகும் நீலக் கடலாலே
மெல்ல வரும் சோலக் குயிலாலே..
மெய்யுருகுமானைத் தருவாயே...

தெள்ளுத் தமிழ்ப் பாடல் திரளோனே
செய்யும் குமரேச திகழோனே
வள்ளல் தொழும் ஞானக் கழலோனே..
வள்ளி மணவாளப் பெருமானே.......
சுபம்.

எழுதியவர் : திருமதி ஸ்ரீ. விஜயலட்சுமி (25-May-15, 3:05 pm)
பார்வை : 447

மேலே