கிருஷ்ண லீலை

"இந்த அர்ச்சுனனுக்கும் துரியோதனுக்கும் அப்படி என்னதான் விரோதம்..ஒருத்தனை ஒருத்தன் வெட்டி விடுவது போல் எப்போது பார்த்தாலும் திரிகின்றார்களே" என்றார் திருதராஷ்ட்ரன்.

சிரித்தபடி சொல்லத்தொடங்கினார் விதுரர்.."சக்ரவர்த்தி.. அர்ச்சுனனும் துரியோதனனும் துரோணாச்சாரியாரிடம் பல ஆண்டுகளாக C++, டாட் நெட் , யூனிக்ஸ் , டேட்டா வேர் ஹவுசிங், மைக்ரோ ஸ்ட்ரேட்டஜி எல்லாம் கற்றாலும் அவுட்புட் கொடுப்பதில் அர்ச்சுனனை இதுவரை வெல்ல முடியவில்லை துரியோதனனால் .. விஷயம் அதோடு முடிந்து விடவில்லை.. அர்ச்சுனன் தூக்கத்தில் கூட அல்கோரிதங்களையும் புரோகிராம்களையும் வரி பிசகாமல் கொடுத்து விடும் வல்லமை உள்ளவன்..இப்போது கர்ணனை தயார் செய்து வருகிறான் துரியோதனன் .."என்றார்.

மறு நாள்..

பரசுராமரிடம் கோச்சிங் சென்ற கர்ணன், தான் இதுவரையில் எந்த சாப்ட் வேர் கம்பெனியிலும் பணி புரிந்ததில்லை என்றும் தனக்கு (அர்ச்சுனனுக்கு தெரியாத ) ஜாவா கோடிங் கற்றுத் தர வேண்டுமென்றும் கூறி அவரது காலில் விழுந்தான்.. கண்டபடி சம்பளம் வாங்கிக் கொண்டு ஊரை சுற்றும் ஐ .டி ஆட்களை பிடிக்காத பரசுராமரும் (அவர் எண்ணம் அப்படி) ..சரியென்று பயிற்ச்சியை ஆரம்பித்தார்..

ஏற்கெனவே அதில் சர்டிபிகேட் வாங்கிய கர்ணன் இன்னும் பல சூட்ச்சுமங்களுக்காகவே வந்திருக்கிறான் என்பதை முத இரண்டு நாட்களிலேயே தெரிந்து கொண்ட பரசுராமர், " கர்ணா..என்னை ஏமாற்றி விட்டாய்..நீ.மேலும் ஆன்சைட்டில் இருந்து வந்தவன் என்பதையும் மறைத்து விட்டாய்..நல்ல வேளை.. கிருஷ்ணன் எனக்கு அனுப்பிய WHATSAPP மெசேஜ் ம்.. FACEBOOK ல் உனது நண்பர்கள் கொடுத்திருந்த லைக்குகளும் கமன்ட்டுகளும் உன்னை காட்டிக் கொடுத்து விட்டன..உனக்கு நான் தரும் சாபம்..இதோ.. உன் கிளையன்ட் உன்னை விரட்டி விரட்டி அடிப்பான்..முக்கியமான நேரத்தில் கோடிங் மறந்து நீ அவுட்புட்டோ ரிசட்டோ தர முடியாமல் எல்லாம் மறந்து போவாய்..ஓடிப் போ ..என் முன் நில்லாதே" என்று சொல்லி விட்டு இந்த விஷயத்தை கையேடு தனது ட்வீட்டரிலும் பதிவு செய்து விட்டார்..

கர்ணன் குனிந்த தலையோடு திரும்பி வந்து துரியோதனனின் கம்ப்யூடர் முன் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டான்..

ம்.. எல்லாம் கிருஷ்ணனின் லீலைதான்!

எழுதியவர் : கருணா (27-May-15, 5:39 pm)
பார்வை : 366

மேலே