பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வுப் போட்டி -எங்கேயும் எப்போதும்

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வுக் கட்டுரை.
’ எங்கேயும் எப்போதும் ’
-------------------------------------------------------------------------

’எங்கேயும் எப்போதும்’ , ஜனரஞ்சகமான பிரபலமான ஒரு தலைப்பைச் சூடிக்கொண்டிருக்கும் இந்தக் கதையை மூன்று வெவ்வேறான கதைச்சூழல்களில் நகர்த்தி இறுதியில் ஒரு முடிச்சு போடும் நல்லதொரு நுட்பத்தை கையாண்டு இருக்கிறார் கதாசிரியர்.

’கதைப் படிக்கும் வாசகரின் புலன்களின் கவனத்தை கதையின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கதாசிரியர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் ’என சிறுகதை விமர்சகர் அறிஞர் ஹெச்.ஜி. வெல்ஸ் சொல்வதை போல பொள்ளாச்சி அபி அவர்களும் இக்கதையில் தன் எழுத்து வன்மையில் வாசகனை ஈர்த்து இழத்து வைத்தது சிறப்பு.

மூன்று வெவ்வேறான கதைச் சூழ்ல்களிலும் அச்சூழலுக்கு ஏற்றவாறு
கள வர்ணனை , கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறை, பாவனை, உரையாடலென கதாசிரியர் மிகத் துல்லியமாக வேறுப்படுத்தி காட்டியிருக்கிறார். இதில் இந்திய தமிழக கிராமத்திற்கு ஏற்றவாறு வட்டார வழக்கு மொழியை பயன்படுத்திய கதாசிரியர் யாழ்பாண கதைச்சூழலில் இலங்கையில் பேசப்படும் உரையாடலை பயன்படுத்தியிருப்பின் கூடுதல் சிறப்பாக இக்கதைக்கு அமைந்திருக்கும்.நியூயார்க் சூழலிலும் அதற்கேற்றவாறு சில சில ஆங்கில உரையாடல்கள் உட்புகுத்தியிருக்கலாம் .

** “அங்கு நிலவிய கனத்த மௌனத்தைப் போலவே,அவர்களைச் சுற்றி இருளும் கனத்துக் கொண்டே வந்தது. ”

**“.உனது விருப்பத்திலும்,ஆசையிலும் தலையிட்டு,உனது உரிமையை எவ்விதத்திலும் கெடுத்துவிட எனக்கு எந்த உரிமையுமில்லை.அதேபோல்,எனது சுதந்திரமான
முடிவுகளிலும் நீ தலையிட மாட்டாய்”

** “நம்ம விதிக்கு நாம யாரை நோக..எல்லாம் உறுதியாத் தெரிஞ்சுக்க நாம என்ன அரசியலிலா இருக்கறோம்? “

**” கோவிலுக்கு செல்பவர்கள் சாமியைக் கும்பிட்டுவிட்டு,வெளியே வர குறைந்தது பத்துநிமிடங்களாவது வேண்டாமா..? அதுவே பரீட்சை நேரமாக இருந்தால்,இன்னும் கொஞ்சம் நேரம் கூடும்தான். ”

** ”மேலும் சில நிமிடங்கள் காத்துக் கொண்டிருந்த செல்வியை,புதரை நோக்கி விரட்டியது அவளது வயிற்றின் அவஸ்தை”
இதுப்போன்ற வர்ணனை, உரையாடல் வரிகளில் தனக்கே உரிய
முத்திரையை பதித்து, படிக்கும் வாசகர்களையும் ஈர்க்கவும் கதையின் போக்கை உணரவும் வைக்கிறார் ஆசிரியர்.

கதையின் உச்சநிலையில்தான் கதையின் கரு என்னவாக இருக்கும் என விளங்குகிறது. இறுதிவரை ஓர் எதிர்பார்ப்புடன் வாசிக்க வைத்த அளவில் இந்த சிறுகதை வெற்றிப்பெறுகிறது. இதுப்போன்ற உத்தியிலும் சிறுகதை எழுதுவதில் வல்லமையாளரே என நிருபித்து இருக்கிறார் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி.

நியூயார்க் சாரா,. யாழ்ப்பாண ரிசானா , தமிழகத்து கிராமத்துப் பெண் செல்வி ஆகிய மூன்று வெவ்வேறான பெண்கள், மூன்று வெவ்வேறான தேசத்தினர், மூன்று வெவ்வேறான மதத்தினர் ஆனால் எங்கிருந்தாலும் எந்தநேரத்திலும் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்கிற அதிர வைக்கும், நடக்ககூடிய விபரீத்தை புள்ளி விபரம் எடுக்காத குறையாக இக்கதையின் கருவாக பலமாக வாசகர்களுக்கு எடுத்துரைக்கிறது.

கதையின் உச்சநிலையில் (Climax) பகுத்தறிவு வகையிலான பகடியை எழுதி எழுத்தாளர்களுக்கே உரிய ஒரு கோபத்தை பதிவு செய்திருக்கிறார் அபி . அவ்வரிகள்
““கடவுளே.. உனக்கு இரக்கம் என்பதே இல்லையா..?” என்று.எங்கேயும் எப்போதும் நிறைந்திருக்கும் அவரவர்களின் கடவுளை எண்ணி மனதுக்குள் அங்கலாய்த்துக் கொண்டே,அந்தந்த நாட்டு மக்கள் படித்துக் கொண்டும்,பார்த்துக் கொண்டுமிருந்தனர்”

’அம்பாள் என்றடா பேசியிருக்கிறாள்? ‘ எனும் கலைஞரின் வசனத்தைப் போல ” கடவுளுக்கு என்றுதான் இரக்கம் இருந்திருக்கிறது. ? ” என கதையினூடே மறைமுக கருத்தாக உணர்த்துகிறாரோ எழுத்தாளர் பொள்ளாச்சி திரு. அபி. ? என வினா எழுகிறது . ஆம், இல்லை என்பதை வாசகர்கள் தீர்மானித்திருப்பார்கள். தீர்மானிப்பார்கள்.



------------
இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே


-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (28-May-15, 5:29 am)
பார்வை : 125

மேலே