சரித்திரம் படைப்போம் வா

சரித்திரம் படைப்போம் வா..
=========================

பாகிஸ்தானியனாக நீ இரு
இந்தியனாகவே நானிருக்கிறேன்
"வாகா பார்டர்" எனும்
எல்லைக் கதவுகளுக்குள்
நீ உனது எல்லைக்குள்ளும்
நான் எனது எல்லைக்குள்ளும்
எப்போதும் போல்...!

கொடிக் கம்பங்களில்
அவரவர் தேசியக் கொடிகளையும்
ஏற்றி பறக்கவிடும்
அந்த காலை பொழுதுகளிலெல்லாம்
தேசியக் கொடிகளுக்கு
மரியாதை செலுத்துவதுபோல்
ஒருவருக்கொருவர்
வீர வணக்கம் செலுத்திக் கொள்ளலாம்
மௌனமாகவே...

தேசிய எல்லையில்
அந்தி சாயும் வேளைகளில்
தேசியக் கொடிகள் இறக்கப்படும்போதான
மரியாதைகளைப் போலவே
வணக்கம் செலுத்தியே பிரிவோம்...

நம் இருவரின் சந்திப்பின்போதான
நேரங்களில் எல்லாம்
காற்றில் பரவிடும்
பாஸ்பரஸ் போல் இல்லாமல்
பரஸ்பரம் பரிமாறிக் கொள்வோம்
கவிதையாகட்டும்... துன்பமாகட்டும்...

ஆங்காங்கே கலகக்காரர்களாகட்டும்
அல்லது தீவிரவாதிகளாகட்டும்
கண்களுக்கு புலப்படுபவர்களாயின்
கட்டுப்படுத்துவோம் இயன்றவரை...

இல்லையேல்
விட்டு விலகுவோம்
உன்னை விட்டு நானோ அல்லது
என்னை விட்டு நீயோ அல்ல
அவர்களை விட்டு நாம்...

கலகக்காரர்களாகவோ
தீவிரவாதிகளாகவோ
நாமிருக்கப் போவதில்லை..
இருந்ததும் இல்லை....!!

தேசத் தலைவர்கள் சுதந்திரதிற்காக
கத்தியுடனும், கத்தியும்
யுத்தமிட்டது போல் அல்லாமல்
கவிதையில் சத்தமிட்டு - நாட்டின்
தரித்திரங்கள் துடைப்போம் வா...
தோழா...
சரித்திரங்கள் படைப்போம் வா..

எழுதியவர் : சொ.சாந்தி (28-May-15, 11:00 pm)
பார்வை : 259

மேலே