யுகங்கள் தாண்டும் சிறகுகள் - 33 - முரளி

யுகங்கள் தாண்டும் சிறகுகள் - 33 'முரளி'
-------------------------------------------------------------

இலக்கியச் சோலையில் கவிதைகளும், காப்பியங்களும் பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன -காலம் காலமாய். மொழி தோன்றிய நாள் முதல், மனிதன் கண்முன் காண்பனவற்றை எழுத்தில் பதிய ஆரம்பித்த அன்று முதல் கவிதைகள் நிலைபெறத் தொடங்கின எனலாம்.

காண்பதைக் கண்டு, பகிர்ந்து, சிரித்து மகிழ்ந்ததைக் கடந்து, மொழி வீரியம் பெற கற்பனைச் சிறகு வளர்ந்தது. புரிந்ததைத் தாண்டி புரியாததையும் கவிதையில் யாத்து மகிழ்ந்தனர். அவர்களுக்குள் அளவு வைத்து, இசை வைத்து அதற்குள்ளும் வித்தைக் காட்டி வியக்க வைத்தனர். புரிந்தவற்றை எழுதினார்கள், புரியாதவற்றையும் எழுதினார்கள், அதையும் தாண்டி சட்டென்று புரியக் கூடாதென்று எழுதினார்கள், புரிந்தாலும் ஐந்து குருடர்கள் யானையப் பார்த்தது போல் குழப்பமடைய எழுதினார்கள். காலம் காலமாக பல்லாயிரம் கவிதைகள் வந்திருந்தாலும் தொடர்கிறது கவிஞனின் தீராத தாகம். இவ்வளளவு எழுதியிருப்பதால் எல்லாம் எழுதப் பட்டிருக்கும் என்று எண்ணினால் 'இல்லை' என்பதே பதில். இது ஒரு முடிவில்லாத் தொடர்ச்சி.... மனிதனின் எண்ண அலைகள் வரம்புக்குள் அடங்காத வீரியம்.

கண்ணில் தெரியும் ஒவ்வொரு காட்சியிலும் 'கவிதை' இருக்கிறது என்பது உண்மையைத் தாண்டிய யதார்த்தம். ஒரே காட்சியிலும் பல கவிதைகள் உண்டென்பதும் நிதர்சனம்.

சில யதார்த்தங்கள் கவிதையாகும் பொழுது நம் மனதுள் சில்லென்று ஆழமாய் தொடும். அப்படித் தொட்ட இரண்டு கவிதைகள் இங்கே:

முதலில் திரு ராஜன் அவர்களின் "விழித்தெழும் பெருநகரம்" என்ற கவிதை:

ஒரு சாதாரணப் பொழுது விடியலைப் பாருங்கள்:

"பிரம்ம முகூர்த்தம் முடிந்து
அடுத்த ஷிப்டுக்காய் முகம்
சிவக்கும் கதிரவன்.. "

சூரியனுக்கே முகப்பூச்சு இட்டு விடுகிறார்.

இளங்காலை இனிமையில் நடை பயில வருபவர் நிலையை....

"நன்றி விசுவாசத்தோடு
சங்கிலியை இழுத்து கொண்டு
எஜமானர்களோடு காலைநடை
பயின்று போயின உயரின நாய்கள் ! "

மனிதர்களை நாய்கள் அழைத்துச் செல்கிறதா அல்லது நாய்கள் மனிதர்களை நடை பயில அழைதுச் செல்கிறதா என்ற ஐய்யம் ஏற்படுகிறது...

நேற்றைய செயதிகள் தான் அச்சிட்டு வரும் தாள்கள் என்று அந்த காலை வேளை நடவடிக்கையைப் பதம் பார்க்கிறார்.

"தொலைக்காட்சி முந்தித் தந்த
அவலங்களையெல்லாம் அள்ளி
வரிவடிவமாக்கிய செய்தித்தாட்கள்
விநியோகத்துக்காய் தயாராயின ! "

மாணவர் அவலம், ஏழைகள் இல்லாமை, இயலாமை... நரகலைப பற்றிக் கூறுகையில் மறைந்திருக்கும் அடிப்படை வசதியில்லாச் செய்தி, ஊடே எதிர் காலம் அறியா பஞ்சு போதி கோழியின் கீச்சு.... யாதார்த்தத்தின் தாக்கல் நமக்கு புன்முருவலுடன் புருவமும் உயர்த்த வைக்கிறது...

"முந்தயநாள் குப்பைகளை
மாநகராட்சி ஊழியர்கள்
பெருக்கிக் கொண்டே சுத்தம் செய்ய
அன்றையநாள் குப்பைகொட்ட
விழித்தெழுந்தது பெருநகரம் !" ..... என்று முத்தாய்ப்பாய் முடிகிறது.

நம் கண் முன் காணும் சாதரணக் காட்சிகள் கவிஞரின் மை பட்டு மாயாஜாலக் கட்சியாக மாறுகிறது...

கவிதை படித்த நமக்கு நம்மை நாமே ஒருமுறை சுத்தம் செய்து கொள்ளத் தோன்றுகிறது...

ஒரு யதார்த்தின் தாக்கம் இதைவிட பலமாக இருக்க முடியுமோ...?

முழுக் கவிதையும் படித்து இன்புறுங்கள்:

விழித்தெழும் பெருநகரம்" திரு.G.ராஜன்
------------------------------------------------------------

பிரம்ம முகூர்த்தம் முடிந்து
அடுத்த ஷிப்டுக்காய் முகம்
சிவக்கும் கதிரவன்..
கிழக்கு நுழைவாயில் நோக்கி
கறுப்புச் சீருடை கழற்றும்
இரவுக் காவல்காரன் !

நகரத்தார்களின் பகலுணவாய்
மாறப் போவதையறியாமல்
கீச்சிக் கொண்டிருக்கும் பஞ்சுப்
பொதிக் கோழிகள் ஏற்றிய
வாகனங்கள் தூக்கக்கலக்கத்தோடு
நகர எல்லைக்குள் நுழைந்தன !

கொசுவிரட்டிப் புகை வியாபித்த
நுரையீரலுக்கு புத்துயிர் கொடுக்க
கொஞ்சமாவது நல்ல காற்றுக்காய்
"இப்போ இல்லேன்னா எப்போ"
பாடலை செவிக்குள் நுழைத்தபடியே
வீறுநடை பழகினர் நகர மாந்தர் !

நன்றி விசுவாசத்தோடு
சங்கிலியை இழுத்து கொண்டு
எஜமானர்களோடு காலைநடை
பயின்று போயின உயரின நாய்கள் !
பக்கத்து அசைவ உணவு விடுதி
குப்பைத்தொட்டியில் வீசிஎறிந்த
எஞ்சிய எலும்புத்துண்டுகளுக்காய்
சண்டையிட்டன தெருநாய்கள் !

கூட்டல் இரண்டு மாணவர்கள்
சிறப்பு கணித வகுப்புக்களுக்காய்
புத்தகமூட்டை ஏற்றிக் கொண்டு
மிதிவண்டி மிதித்துச் சென்றனர் !
தொலைக்காட்சி முந்தித் தந்த
அவலங்களையெல்லாம் அள்ளி
வரிவடிவமாக்கிய செய்தித்தாட்கள்
விநியோகத்துக்காய் தயாராயின !

குடிபோதைக் கணவர்களின்
அடிவாங்கிய தேகத்தோடு
குடிசைவாழ் தாய்குலம்
காலைக் கடன் கழித்திடவே
டப்பாக்களில் தண்ணீர் ஏந்தி
இருள்விலகும் முன்னரே
ரயில் பாதையோரத்து
மறைவு நோக்கிச் செல்லும்
அவலங்கள் அரங்கேறின !

முந்தயநாள் குப்பைகளை
மாநகராட்சி ஊழியர்கள்
பெருக்கிக் கொண்டே சுத்தம் செய்ய
அன்றையநாள் குப்பைகொட்ட
விழித்தெழுந்தது பெருநகரம் !

*** ---- ***


இரண்டாவது கவிதை, திரு விஜய் நரசிம்மன் அவர்களின் "அரை நொடியும்"

இது மிகச் சாதாரணமாக அனைவரும் தினம் காணும் காட்சி. இது கவிஞரின் பார்வையில் வீறு கொண்டு மரபுப் பாவாகியுள்ளது.

தலை தெறிக்கும் வேகம், அவசரம், விளைவாய் ஒருவர் தலை சாய்ந்து கிடப்பதை அறியாமல் மேலும் பலர் துடிப்புடன் தலை தெறிக்க ஓட, படும் அவசரத்தின் அவலம் இழையோடும் கவி நயம். சுத்தி என்ன நடந்தாலும் சொந்த கவலை மட்டுமே எவர்க்கும் என்று சாடிச் செல்கிறது..... அந்த அரை நொடியில் எட்டிப் பார்க்க இடர் பட்டவர் நம்மைச் சார்ந்தவராய் இருப்பின்...? எண்ணிப் பாருங்கள் கவிதை எவ்வளவு விபரீதமாகிறது.... அதன் வலி...?

தினம் நடக்கும் விடயம் தான். கவிஞர் மக்களின் மனதினூடே பயனிக்கிறார்.. எண்ண்ங்களில் விகல்பத்தை விண்டு வைக்கிறார். யார் எத்துயர் அடைந்தால் என்ன நம் பணி தடையின்றி நடக்க வேண்டும் என்ற மனிதனின் அடிமட்ட எண்ணத்தை சுட்டிக் காட்டுகிறார்....

ஒரு இன்னுயிர் மாண்டதும் எவற்கும் பொறுட்டல்ல என்பதே கவியின் ஆதங்கம்.. படிப்பவர் நமக்கும்....

முழுக் கவிதையும் காணுங்கள் கீழே:

"அரைநொடியும்" - திரு விஜய் நரசிம்மன்
--------------------------------------

நெடுஞ்சாலை நெரிசலிலே நீண்டு நெருங்கி
..........நின்றிருந்த வண்டிகளின் இடையில் ஒன்றாய்
.....நெடுநேரம் நிற்கவைக்கும் விதியை நொந்து
..........போக்குவரத்துத் துறையதையும் சேர்த்துத் திட்டிக்

கடுகடுத்துக் காத்திருந்து கிடைத்த வாய்ப்பில்
..........கடுகளவாய்த் தினையளவாய்ச் சிறுகச் சிறுகக்
.....கடலாமை போல்வண்டி முன்னே செல்ல,
..........காலையதன் புதுமையெலாம் கரைந்து கொள்ள,

“படுபாவி! பொறம்போக்கு! எவனோ ஒருவன்
..........பொறுப்பின்றி வண்டியோட்டி கவிழ்ந்தி ருப்பான்!
.....பாவிஅவ னால்இங்குப் பலரும் இன்று
..........பணிகளுக்குத் தாமதமாய்ப் போறோம்!” என்றே

அடுக்கடுக்காய் மனத்திற்குள் திட்டிக் கொண்டே
..........அவ்விபத்தைக் கடக்கையிலே மனத்தில் மின்னல்:
.....’அரைநொடியும் அவ்வுயிர்க்காய் இரங்கல் இன்றி
..........அவசரமாய்ப் போய்எதைத்தான் சாதித் தோமோ?!’

[பதினாறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]

மரபில் மிளிர்ந்த கவிதை நம்மை சிந்திக்க வைக்கிறது நெடு நேரம்.

----***----***----***----***-----

ஒரு கவிதை அதி காலையைக் கடக்கிறது. மற்றது விதி சாலையைக் கடக்கிறது. இரண்டும் யதார்த்தத்தில் நம்மை மயக்குகிறது.... இவை யுகங்களையும் கடக்கும்..... நிச்சயம்...

----- முரளி

எழுதியவர் : முரளி (28-May-15, 11:05 pm)
பார்வை : 211

மேலே