புயலின் மறுபக்கம் - திறனாய்வு - கே-எஸ்-கலை

புயலின் மறுபக்கம்....

பொதுவாக படைப்பாளிகள் எழுத விரும்பும் வகையிலான தலைப்பு. வேறுபட்ட எண்ணங்களை தலைப்பில் சுட்டிக் காட்டுவது வாசகனை ஈர்க்கும் ஒரு யுக்தி ! அந்த அடிப்படையில் “புயலின் மறுபக்கம்” என்ற தலைப்பும் குறிப்பிடத்தக்கது!

பல படைப்பாளிகள் எழுதிய, எழுதப்போகின்ற ஒரு கருப்பொருள். இன்று இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மியன்மார், ஈராக் என்று பல நாடுகளின் அடையாளமாய் இருக்கும் “பிரிவினை” சார்ந்த வன்முறை நிகழ்வொன்றின் நேரடி வர்ணனையாக இருக்கிறது கதைக்கான களம் !

தேவகி என்ற ஒரு இளம்பெண்ணை பிரதான பாத்திரமாக கதை சுமந்துச் செல்கிறது. அவளது காதல் கணவன் அப்துல் காதர் மத வன்முறைகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றான். இந்த நிகழ்வையே கதையாக்கி செய்தி சொல்ல முனைந்திருக்கிறார் அபி !

தேவகி + அப்துல் காதர் என்ற முரண்பாடுடைய சமன்பாட்டின் கீழ் மத நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதோடு.. மதம் சார்ந்த வன்முறைகளின் கோர தாண்டவத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் !

ஒரு வன்முறை நிகழ்வு நடந்த சூழல் எப்படியிருக்கும் என்பதை அனுபவப் பூர்வமாக சித்தரிப்பது கதையின் உயிரோட்டமாக அமைகிறது. அபி ஒரு செய்தி நிறுவனத்தில் நிருபராக பணியாற்றி இருக்கிறார். எனவே இதுபோன்ற சம்பவங்கள் ஏராளம் அவரது பார்வையில் பட்டிருக்கலாம். அது அவரது கதையின் காட்சியமைப்புக்கு உதவி இருக்கிறது என்றெண்ணுகிறேன்.

கதையின் கரு. காட்சியமைப்பு, சொல்லவரும் செய்தி என்பன சமூகத்திற்கு மிக அவசியமான கருத்துகளை உணர்த்துகின்றன.
ஒரு படைப்பாளியின் கடமை அபியின் கதையில் துல்லியமாய் கையாளப்பட்டிருகின்றது.

கதை சொல்லிய விதம் பற்றி எடுத்துக் கொள்ளும் போது ஆங்காங்கே கொஞ்சம் தள்ளாட்டங்களை காண முடிகிறது.

ஒரு கதையின் (இலக்கியத்தின்) பிரதான உணர்வு உச்சம் தொட வேண்டும். அது மகிழ்ச்சியாக இருந்தால் முழுமையான மகிழ்ச்சியாகவும், துயரமாக இருப்பின் அது அதிக பட்சமான துயரமாகவும் சித்தரிக்கப்படல் வேண்டும்.

இந்த விடயத்தில் இந்தக் கதையில் அபி கொஞ்சம் சறுக்கியிருக்கிறார்.

தேவகி தன் கணவன் படுகொலை செய்யப்பட்ட சூழலில் இருக்கிறாள். திருமணம் முடித்து ஆறே மாதம் ஆகியிருக்கும் நிலையில் தன் காதல் கணவனை இழந்த ஒரு பெண்ணின் துயரம் எந்தளவு கொடுமையானது? பெற்றோரை விட்டுவிட்டு கணவனையே நம்பி வந்தவள் இன்று கணவனைப் பலிகொடுத்து விட்டு நிர்க்கதியாய் நிற்கும் நிலை எவ்வளவு கொடூரமானது ?

அந்த அளவுகடந்த ரணத்தில் செத்துக் கொண்டிருக்கும் ஒருத்திக்கு பாடசாலையில் படித்துக் கொடுத்த ஆசிரியரும் அவர் படிப்பித்த பாடமும் எந்தவகையில் ஞாபகத்திற்கு வரும் ?

(இந்த இடத்தில் கதாசிரியர் சொல்லும் மேற்கோள் நல்ல விளக்கமே. ஆனாலும் அதைச் சொல்லும் களம் பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதை சொல்லுவதற்காக உபயோகிக்கும் பாத்திரம் பொருத்தமானதாக இருக்க வேண்டும்..அல்லது கதாசிரியர் தனக்கு தெரிந்த விடயமொன்றை கதையின் மூலம் வலுகட்டாயமாக திணிக்க முயன்றிருக்கிறார் என்ற எண்ணம் உருவாகிவிடும்)

இன்னொரு விடயம்...
“நீ நாசமாத் தான் போவ...” என்று இருமுறை சுட்டிக்காட்டப்படுகின்ற தேவகியின் தாயை கதையின் ஈற்றில் கொண்டுவந்து கதையை முடித்திருக்கலாமோ என்றொரு எண்ணமும் எழுகிறது.

தேவகியின் தாயை நல்ல முறையிலோ தீய முறையிலோ ஒரு பாத்திரமாக கொண்டு வந்திருந்தால் ஒருவேளை என் போன்றவர்கள் திருப்தியடைந்திருக்கலாம். ஏனெனில் கதையின் முக்கிய புள்ளியாக கலப்பு திருமணம் இருகின்றது.

கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேவகியின் தாய் அப்துல் காதர் இறந்துவிட்டான் என்பதை அறிந்து..அந்த சம்பவ இடத்திற்கு வந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மகளுக்காக பரிந்து பேசி கொந்தளிப்பதைப் போலான ஒரு நிகழ்வை காட்சிப் படுத்தி இருந்தால்...கலப்பு திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் காலப்போக்கில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு மறைமுகமான செய்தியையும் சொல்லியிருக்கலாம். அது இளைய தலைமுறையினருக்கு கலப்பு திருமணம் செய்ய ஊக்கமளிக்கும் விதமாக இருந்திருக்கும்.

அல்லது “நீ நாசமாத் தான் போவ” என்ற தன் சொல் பலித்துவிட்டதாய், மகளைக் கடவுள் பழிவாங்கி விட்டதாய் முட்டாள்தனமாக பிதற்றும் வகையில் கதையில் காட்சியமைத்து வேறுவிதமான ஒரு செய்தியைச் சொல்லி இருக்கலாம்.

அதேபோல கதையில் தேவகியின் மீது வாசகருக்கு இன்னும் கொஞ்சம் நெகிழ்ச்சியான உருக்கம் வரும்வகையில் அவளை ஒரு கர்ப்பிணியாக சித்தரித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால்..கலப்பு திருமணம் செய்துக் கொண்டு கணவனை பறிகொடுத்தாலும் அவனோடு வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு சான்று கிடைத்த அதேவேளை கலப்பு திருமணத்தின் வெற்றியாகவும் அது காட்டப்பட்டிருக்கலாம் என்பது எனது கோணம் !

மத கலவரம் நடந்து பதினேழு பேர் படுகொலைச் செய்யப்பட்டு பிரேதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் குறித்த இரு மதத்தை சேர்ந்த இருபிரிவு மக்களும் சுமூகமாக துயரத்தைப் பகிர்ந்துக் கொள்வதும், ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் இருப்பதும் போன்ற கள விவரிப்பு கொஞ்சம் தர்க்கிக்கும் விதமாகவே இருக்கிறது. அதனையும் கொஞ்சம் வேறுவிதமாக கதாசிரியர் சித்தரித்திருக்கலாம் போலிருக்கிறது.

கதை சொல்லிய விதம் கொஞ்சம் தள்ளாடிய படி சென்றாலும் கருப்பொருளின் வீரியம் “சிறந்த கதை” என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

(இந்த கதை அபி எழுதிய ஆரம்பகால கதைகளில் ஒன்று என்பதைக் குறிப்பிடுவது முக்கியம்.!)

எழுதியவர் : கே-எஸ்-கலை (29-May-15, 12:04 am)
பார்வை : 196

மேலே