வஞ்ச மலைநாடன் வாரான்கொல் தோழி - கைந்நிலை 2

'கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

வரைவு நீட்டித்தவழி யாற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச்
சந்தன மேந்தி யருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலைநாடன் வாரான்கொ றோழியென்
நெஞ்ச நடுங்கி வரும். 2

பொருளுரை:

என் தோழியே! நெருப்பால் வெந்து கருகிய காட்டிற்கு மணம் உண்டாகும்படி, மலையிலிருந்து வரும் அருவி சந்தனக் கட்டைகளை ஏந்திக்கொண்டு வந்து போடுகின்ற வஞ்சகமுள்ள மலைநாட்டுத் தலைவன் இனி வருவானோ வரமாட்டானோ நான் அறியேன் என்று எனது மனம் அதை எண்ணி நடுங்கி வருகின்றது என்று தலைவி கூறுகிறாள்.

விளக்கம்:

வெந்த புனம்: காடு அகிலும் சந்தனமும் வளர்ந்து மணமுடையதாய் இருந்தது. அம்மரங்களையெல்லாம் வெட்டித் தீயினாற் சுட்டுத் தினை விதைத்த புனம் என்பது குறிப்பால் தோன்றியது. சுட்டெரித்ததனால் மணமின்றி இருந்தது என்றும், அப்புனத்துக்கு மணமுண்டாக்கக் கருதி அருவி சந்தன மரத்துண்டுகளைக் கொண்டு வந்து போடும் என்றும் கூறுகிறார்.

இயற்கையாக அருவி சந்தனம் கொண்டு வருவதை மணமுண்டாக்கக் கருதி எனக் கற்பித்தனர். அன்றியும் வஞ்சம் உடையது என்றார்.

வஞ்சம் என்பது ஒருவரும் அறியாமல் ஒரு செயலைச் செய்வது. புனத்திற்கு மணமில்லை யென்பதை மனத்துட்கொண்டு, புனத்திற்குங் கூறாமல், ஒருவர்க்குந் தெரியாமற் சந்தனக் கட்டைகளை இழுத்துக்கொண்டு வந்து போட்டது அருவியின் செயல்; ஆதலால் அச்செயல் வஞ்சம் எனக் கூறினர். மலைநாடு வஞ்சகச் செயலுடையது. அது போலவே அந்நாட்டுத் தலைவனும் இருப்பான் போலும் எனத் தலைவி தோழிக்குக் கூறினாள்.

வெந்த புனம் போன்ற எனக்கு அருவிபோல வாழ்வதற்குப் பொருளீட்டி வந்து மணம் தருவான் என்று எண்ணுவதைக் குறிப்பாலுணர்த்தினாள் எனப்படுகிறது. வந்து மணம் புரிவான் என்று துணிகின்றேன்; ஆயினும் என்நெஞ்சம் நடுங்குகின்றது. அதற்குக் காரணம் என்ன என்று வினவினாள் என்றும், இதனால் தன் மனத்துயரத்தையும் துணிவையும் தோழிக்குத் தலைவி கூறினாள் என்றும் கொள்ள வேண்டும்.

கொல் - ஐயப் பொருளில் வந்தது. இடூஉம் நாடன் எனக் கூட்ட வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-15, 10:43 am)
பார்வை : 100

சிறந்த கட்டுரைகள்

மேலே