இளைய பாரதம் எழுகவே

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்
சமூகத் தலைகளைச்
சிக்கெடுக்க முடியாது

அடித்தளத்தை வலுவாய்
அமைக்காமல்
கட்டிடத்தைக்
கனவுகாணக் கூடாது

எழுந்து வா!


தேசத்தின் வலிமையை
உட்பகைகள் உருக்குலைக்கும்
உட்பகையை உடைத்தெறிய
ஒற்றுமையே உகந்தவழி
உடைத்தெறிவோம் உட்பகையை

ஒன்றுபட்டு வா!

பேராசை கொள்ளாதே
பேராசைப் பெருங்கை
சுயமரியதையைச்
சுருட்டிக்கொள்ளும்
தன் மானத்தோடு

தலை நிமிர்ந்து வா!

நம் விடியலை மறைக்க
ஆயிரம் மேகங்கள்
ஆவலாய் துடிக்கும்

ஆக்கவேண்டிய பொழுதுகளைப்
'போக்கு' என்று
தொழிநுட்பத் தொடுதிரை
தொந்தரவு செய்யும்



ஒட்டுமொத்த
சோம்பேறிச் சொர்க்கத்திற்கு
இட்டுச்செல்ல எத்தனிக்கும்
ஓயாத சுயநலம்

உடலின் பசியும்
உள்ளத்தின் பசியும்
''உடன் வா''
என்றழைக்கும்
நீ
அறிவின் பசிக்கு மட்டும்
ஆதரவு தந்து வா!

"உனக்காக நானுள்ளேன் "
என திருட்டுத் தீமை
தன் இருட்டு உலகின்
தாழ் திறக்கும்


இளமையின் திறமையை அள்ளிக்கொள்ள
ஆசைப்படும் இந்த
அபாய வலைகளுள்
நீ மீனாய் அகப்படாமல்
தண்ணீராய்
தாண்டி வா !

வாக்குரிமையை
அலட்சியபடுத்தாதே
அது குற்றம்
அரசியல் சமூக விழிப்புணர்வின்றி
வாக்களிக்காதே
அது அதனினும் குற்றம்

''தேசத்தைப்பற்றி உனக்கென்ன?''
என்ற கேள்வியைக்
கட்டாயம் சந்திப்பாய்
அது தேவையற்ற கேள்வி
என தெளிந்து வா!

மூடர்களின் பேச்சுக்கள் உன்னை
மூடிக்கொள்ள
முயற்சிக்கும்
முட்டிக்கொண்டு
வெளிய வா!

எப்படி இருக்க வேண்டுமென்ற
கனவுக்கு முன்
எப்படி இருக்கக் கூடாதென்ற
புரிதலோடு வா!


ஒரு புதிய பாரதத்தைப்
பகுத்தறிவுக் கரங்களால்
படைப்போம்!

அதன் தூண்களாய் அல்ல
அசைக்க முடியாத
அடித்தளமாய்
நாமே இருப்போம்.

---------------------------------------------------------------
கவியமுதன்.


(நான் சமையல்காரன் என் உணவு உங்கள் கருத்துக்களே...)

எழுதியவர் : கவியமுதன் (1-Jun-15, 11:53 pm)
பார்வை : 3107

மேலே