தல புராணம் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி

பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகளை படித்து திறனாய்வு செய்பவன் என்ற ரீதியில்' உள்ளத்தின் உணர்வுகளை செதுக்கிய கதை எனும் கல்வெட்டாய் பதிக்கும்' வண்ணம் அவரது கதைகள் காணப்படுகின்றது.அந்த வகையில் தான் 'தல புராணம்' எனும் சிறு-நெடுங்-கதையும் அமைந்து காணப்பட்டாலும் சிறுகதைக்குரிய சுவைகள் ஒரு துளியளவும் குறைந்ததாக காணப்படவில்லை.கதைகள் தொடங்கும் இடம் வளரும் பாதை முடியும் விதம் என்பவற்றை சற்று அலசலாக ஆராய்வோம்.

முதலில் கதையின் கருவிற்கும் தலைப்பிற்குமிடையிலான பொருத்தப்பாட்டை நோக்குவோமானால் அதை நான் இரு கோலங்களில் கண்டு கொண்டேன்.ஒன்று தலைப்பின் பொருத்தம் மற்றொன்று கதை எழுதப்பட்ட தினத்தின் மகிமை என்று நான் ஆய்வு செய்தேன்.அவ்வகையில் தலைப்பின் பொருத்தப்பாட்டை நோக்குவோமானால்...........,

தமிழ் இலக்கண மரபில் 'தலம்' என்றால் கோயில் என்றும் புராணம் என்றால் பழங்கதைகள் என்றும் அர்த்தமுண்டு.அதற்கேற்றால் போல் கதையின் போக்கு நகர்வதால் தலைப்போடு கதை பொருந்திக் காணப்படுகிறது.குறிப்பாக வேல்முருகன் பூசாரியிடம் கோயிலின் புராணத்தை சொல்லச்சொல்லி வேண்டுதல் அதன் போது 500 வருடங்கள் பழமையானது இக்கோயில் என்று பூச்சாரி சொல்லுதல் அதனை இந்துமதி ஏற்க மறுத்தல்,இறுதியில் கணவன் வேல்முருகன் 50 வருடங்கள் பழமையானது என்றால் வெறும் சம்பவம் என்று நினைக்கப்படும் என்று 500 வருடங்கள் என்று சொல்கின்றனர் என்று கூறி அவள் ஐயத்தை போக்குதல் மூலம் நவீன யுக மனிதர்கள் புராணங்களை எந்த விதத்தில் நோக்குகின்றனர் என்பதை அபி படிக்கும் போது என் மதியில் கற்றுத்தந்து விட்டார்,

அடுத்து கதை அமைந்த தினத்தை நோக்குவோமானால் ஒரு மகளிர் தினத்தில் என்பதால் அதற்கேற்றால் போல் கதையில் வரும் கொடுரமான எஜமானால் அழகான கோதை விபச்சார தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு நந்தவனத்திற்குள் அவள் கற்பை பறிக்க அவன் முனையும் போது அவள் பத்திரகாளியாக எழுந்தழல் மற்றும் இந்துமதி ,வழியில் மயங்கி கிடந்த கிழவி ஆகிய பெண் பாத்திரங்கள் மையப்படுத்தி கதை இறுதிவரை நகர்ந்து முற்றுப்பெருவதால் கதையோடு தலைப்பும் ,எழுதப்பட்ட நோக்கமும் பொருந்திக் காணப்படுவதே கதாசிரியர் அபி அவர்களின் எழுத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றால் பழியாகாது.

மேலும் இச்சிறுகதையில் சிலகாட்சிகள் அழகாக சொல்லப்படுவதோடு வாழ்வியல் படிப்பினைகளையும்
கற்றுத்தருகிறது.குறிப்பாக கதை தொடக்கத்தில் பயணத்திலிருந்து ஆரம்பிக்கும் போது கோடையின் உஷ்ணத்தால் இரு குழந்தைகளும் கூல் டிரிங்ஸ்வாங்கி கேட்டு அடம்பிடித்தல் பின் தாய் கிராமப்புற கலாசாரத்தை பிரதிபளிக்கும் வண்ணம் இளநீர் வாங்கிக் கொடுத்தல்,இரு பிள்ளைச் செல்வங்களின் செயற்கையான அழுகை என்பன ஒரு அழகான பாசமான குடும்பத்தின் உள்ள மகிழ்வை படம்பிடிக்கிறது என்றால் அது ஒரு போதும் மிகையாகாது.மேலும் அவர்கள் ஊருக்கு புதிது என்பதால் நாங்கள் செல்லும் இடத்தை சென்றைடைய தூரம் காட்டும் மைல்கல்கள் தான் பாதையை அடையாளம் காட்டுதல் மூலம் ஒரு மனித வாழ்வை நிதர்சனமாக சொல்கிறது கதை..,இது போன்ற அனுபவங்களை உணராதவர்கள் யாரும் இருக்கமுடியாது என்னையும் சேர்த்து..........,

வளர்ச்சியில் அவர்கள் செல்லும் பாதையில் மயங்கி கிடக்கும் ஒரு கிழவியின் நிலையைக்கண்டு மனம் சோர்ந்து கண்களில் ஓரளவு ஈரம் தென்பட்டும் படாமலும் அந்த வழியில் ஆயிரம் வாகனங்கள் வேகம் குறையாமல் அம்மூதாட்டியை பார்த்தும் பார்க்காமலும் சென்றாலும் வேல்முருகன் மற்றும் அவன் மனைவி இந்துமதி அவளிடம் அரவணைக்க ஓடுதல் என்பன மூலம் 21ம் நூற்றாண்டில் வாழும் அதி நவீன தொழிநுட்ப மாற்றத்தால் செத்துப்போன 100ற்றில் 99சதவிதமான உள்ளத்தை சித்தரிப்பதோடு
பாவமான இந்த உலகிலும் ஒரு சில நல்ல மனிதர்கள் இருக்கின்றனர் என்பதை கதை கற்றுத்தருகிறது.

கிழவியை அன்போடு வேல்முருகன் தனது வலது தொடையில் தலையை வைத்து அரவணைத்தல் அவன் மனைவியும் தண்ணீர் புகட்டல் மூலம் மனிதாபிமானம் சொல்லப்படுவதோடு வேல்முருகன் மற்றும் இந்து மதி ஆகியோரின் கணவன்மனைவி பொருத்தத்தையும் அழகாய் சொல்லாமல் சொல்கின்றார் படைப்பாளர் அதாவது மலருக்கு ஏற்ற வண்ணம் போல................,

இறுதியாய் அவர்கள் உதவியோடு கிழவி தான் செல்ல நினைத்த இடத்திற்கு செல்லுதல்..............,
சாமி சிலையை புகைப்படம் எடுக்க வேல்முருகன் கேமராவை பயன்படுத்திய போது அம்மன் சிலையின் அருகில் கிழவில் நிற்றல் என்பன மூலம் கதையின் வளர்ச்சி தொடங்கி முடிவு வரை தாக்கம் செலுத்துவதோடு பூசாரி கதை சொன்ன போது வேல்முருகன் சொன்ன 50 வருட நிகழ்வு சம்பவம், அவள் மனைவி நினைத்த போலிஸ் நிலையம் எப்படி இருந்தது என்ற ஐயம் உண்மை என்று என்னால் உணரக்கூடியதாக போயிற்று...,

காரணம் அம்மன் சிலையாய் உள்ள பெண் கொடுரமான மன்னனை பலிவாங்கினாலும் அவள் தந்தை நியாயம் கேட்க அவர் உயிரை அவன் மாய்த்தாலும் அவளது தாய் யார்? அவள் எங்கே? என்ற கேள்விகளை எழுப்பி அம்மன் சிலை மேல் கைவைத்து அந்தக்கிழவி கண்களால் பேசுவதால் அவ் அம்மன் சிலையிலுள்ள பெண் இவளது மகளாக இருக்குமோ? என்று என் மனதுக்குள் கேள்வி படித்த பின்னர் ஓடிக்கொண்ட இருக்கிறது,கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை பல திருப்பங்களோடு கதை நகர்வதால் 'தல புராணம்'என்ற சிறுகதை அருமையிலும் மிக அருமை.

இது போன்ற ஆழமான படைப்புக்களை அபி அவர்கள் இன்னும் எழுதுவார்கள் மற்றும் எழுதுவார் என்ற நம்பிக்கையோடும் இத் திறனாய்வை முற்றுப்பெறச்செய்கிறேன்.


இது எனது சொந்த படைப்பு என்பதை உறுதி செய்கிறேன்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Jun-15, 1:49 pm)
பார்வை : 323

மேலே