பூண்ஏந்து அகலம் உரையா வழங்கும்என் நெஞ்சு - கைந்நிலை 6

'கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

வரைவு நீட்டித்தவழி யாற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

மரையா வுகளு மரம்பயில் சோலை
யுரைசான் மடமந்தி யோடி யுகளும்
புரைதீர் மலைநாடன் பூணேந் தகலம்
உரையா வழங்குமென் நெஞ்சு. 6

பொருள் விளங்க சொற்கள் பிரித்து தரப்பட்டுள்ளது.

மரையா உகளும் மரம்பயில் சோலை,
உரைசால் மடமந்தி ஓடி உகளும்
புரைதீர் மலைநாடன் பூண்ஏந்(து) அகலம்
உரையா வழங்கும்என் நெஞ்சு. 6

பொருளுரை:

காட்டுப் பசுக்கள் தாவித் திரிகின்ற மரங்கள் வளர்ந்திருக்கும் சோலையில் உயர்வாகச் சொல்லப்படுகின்ற இளம் குரங்குகள் விரைந்து தாவித் திரிகின்ற குற்றம் நீங்கிய மலை நாடனாகிய தலைவனது ஆரம் முதலிய அணிகலம் தாங்கிய மார்பானது என் மனத்தைத் தேய்த்து சொல்லாமல் சொல்லும்! என் செய்வேன் தோழி? என்றாள்.

விளக்கம்:

உகளும் என்ற பெயரெச்சம் இரண்டும் மலைநாடன் என்ற பெயர் கொண்டு முடிந்தன.

மரை ஆ உகள்வது மலையில் என்றும், மந்தியுகள்வது சோலையில் என்றும் உணர வேண்டும்.

குரங்கு அறிவினும், செயலினும் விலங்குகளின் உயர்ந்தது என்று புகழப்படுவதால் உரைசால் என அடைகொடுத்தார். மனிதர் செய்யும் செயல் பலவும் கண்டு அவ்வாறே புரியத் தொடங்குவது குரங்கின் இயற்கை என்பதும் அறியத்தக்கது.

தலைவனோடு கூடிக் கலந்த இன்பத்தை என் நெஞ்சு விழைகின்றது. அவ்விழைவால் காதல் கொண்டு கலங்குகின்றேன் என்ற குறிப்புத் தோன்ற ‘’அகலம் உரையாவழங்கும் என்னெஞ்சு’’ என்றாள்.

என் நெஞ்சைத் தேய்க்கின்றது அவன் மார்பு, அன்றியும் அதனுள் அடிக்கடி பழகி நடக்கின்றது; அதனால் என்நெஞ்சு புண்ணாகி வருத்தம் அடைகின்றேன். என் நெஞ்சு மெலிது; அவன் மார்போ கல்லினும் வலிது; அதனோடு பல பூண்களும் அணியப்பட்டது; அடிக்கடி வந்து நடக்கின்றது; தேய்க்கின்றது; எவ்வாறு ஆற்றுவேன்; ஆற்றாமையாற் புலம்புகின்றேன் என்ற குறிப்புக் காண வேண்டும்.

உழக்கும் என்ற பாடத்திற்கு மிதித்துக் கலக்குகின்றது என்று பொருள் கொள்ளவேண்டும்.

மார்பு, மாதர் நினைக்கும் சிறந்த உறுப்பு,
கொங்கை ஆடவர் நினைக்கும் சிறந்த உறுப்பு. என அறிக,

மலைநாட்டில் மரை ஆவும் மந்தியும் உகள்வது போல அவன் மார்பு என்னெஞ்சில் உகள்கின்றது என்ற குறிப்புத் தோன்றுகிறது.

உரைத்தல் - தேய்த்தல்.

இச் செய்யுள் தலைவி கூற்று நிகழுமிடத்து மறையாது வாய்விட்டுக் கூறி அழுங்குதலாகிய ‘’விட்டுயிர்த்தழுங்கல்’’ என்பதற்கு மேற்கோள் தொல். கள. சூத். 21. இளம். ‘’உழக்கும்’’ என்ற பாடமும் அவ்வுரையிற் கண்டதுவே.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jun-15, 2:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 98

மேலே