அவள் அப்படித்தான் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி

சிறுகதைகளும் கதாசிரியர்களும் ஏராளமாய் வந்து கொண்டிருக்கும் காலம் இதுவென்றாலும் பத்தோடு
பதினொன்றாய் 'அவள் அப்படித்தான்'இச் சிறுகதையை தூக்கி வீசி விடமுடியாது.இருபதாம்நூற்றாண்டில்
தமிழ் இலக்கணத்தை வாசத்திலும்,வண்ணத்திலும்,வடிவத்திலும் பூக்கச்செய்து தனக்கென தனிப்பாணியை அமைத்துக்கொண்டு இலக்கிய அகிலத்தில் புகழ்மாறாமல் இன்று வரை நிலைத்துக்கொண்டிருப்பவர் அபி என்றால் மிகையாகாது.படைப்பாளர் என்ன சொல்ல முயல்கின்றார் என்பதைப்போல அதை எப்படிச் சொல்ல விரைகிறார் என்பதும் கதைகளின்முகாமைகளில் ஒன்றாகும்.அதனை அபி வர்களின் படைப்புக்களில் பழியில்லாமல் காணக்கூடியதாகவுள்ளது.

"ஒரு பொம்பளையா இருந்துகிட்டு,எத்தனை உசுரைக் கொன்னுருப்பா.., இவளுக்கெல்லாம் இந்த கெதி வராம...? ஆண்டவன் ஏதோ பரிதாபப்பட்டு இதோட வுட்டானேன்னு..,பொழச்சா சந்தோசப் பட்டுக்கட்டும்..!"பாவம் செய்த பாவிகளை சமுதாயம் சபிப்பதை போன்று மேற்படி வரிகள் அமைந்துள்ள போதிலும் இதனை செவியுற்ற கோபாலின் உதிரனாடிகளில் கோபம் பொங்கி எழுதலும்,அறுபது வயது பெண்ணுக்கு இக்கோரமான விபத்து நடந்திருக்கக்கூடாது விதி யாரை விட்டது என்று உணர்வுகள் மொழி பேச மனதோடு விழிகளும் சோர்வடைந்து பாரமான பழைய நினைவுகளுக்கு கோபாலின் ஏக்கம் கொண்டு செல்லப்படுகின்றது.கதையை தொடக்கத்தில் படிக்கும் போது யார் இந்த கொடுமை செய்த பெண்மணி என்று அறிதலில் ஆவலை தூண்டி என்னை கதைக்குள் இழுக்கும் போது கோபாலின் வருடல்கள் வரிகளுக்குள் மூழ்கடிக்கச்செய்து விட்டது.ஒரு வாசகனை படைப்பாளர் தன் பக்கம் இழுப்பதற்கு அவர் பற்றிய விளம்பரம் தேவையில்லை,அவரின் வருடல்களே உயர்வானது என்று உணர்ந்து கொண்டேன்.

கதையின் வளர்ச்சிப்போக்கில் சில வருடல்களில் மனதை தத்தளிக்க விட்டுவிட்டேன்.சில வேளைகளில் விழிகளும் ததும்பி காட்சிகளை படமாய்க்காட்டியது."வழக்கமாய் மனிதனின் கையில் கயிற்றைக் கண்டால்,தனது கழுத்தை நீட்டி நிற்கப் பழகியிருந்த அந்த ஆடு,தனது முன்னங்கால்களை அவன் கட்டுவதைக் கண்டு, பரிதாபமாய் விழித்தது" மேற்கூறப்பட்ட வரிகள் ஐந்தறிவு ஜீவன்கள் மனிதர்களைப் போல் கள்ளம் கொண்டிருப்பது இல்லை என்பதை எனக்கு உணர்த்துகிறது,அதாவது மனிதர்களாய் பிறந்த நாம் தம் தோழன் விருந்துக்கு அழைத்தால் கூட ஏன் இவன் எம்மை அழைக்கவேண்டும்?,என்னை கொல்ல சதி தீட்டுகின்றானோ? என்று ஐயப்படுகின்றோம் இருத்தியோராம் நூற்றாண்டின் உண்மைக்கதையும் இதுவே! ஆனால் அவ்வாடுகள் தன்னை வளர்த்தவன் தான் கழுத்துக்கு கயிறிட்டு
தொழுவத்தில் கட்டப்போகின்றான் என்று நம்பி அறுப்பவனுக்கு தலையை கொடுத்து இறுதி நொடிகள் தன்னை நாடப்போகிறது என்று என்னை விட்டுவிடச் சொல்லி அவன் காலில் முகத்தை உரசி உயிர் பிச்சை கேட்கும் தருணம் மனிதனின் கள்ளமான கல்மனம் கரைவதில்லை என்பதன் மூலம் மனிதனின் வன்மம்,நப்பிக்கை துரோகம் என்பவற்றை ஐயறிவு ஜீவனுடன் ஒப்பிட்டு படிப்பினையாய் மதியினுள் புகுத்துகின்றார் எழுத்தாளர்.

ஏனைய ஆடுகள் தன் இனம் கொல்லப்படுவதை கண்டும் ஒன்றும் செய்யமுடியாமல் மனதுக்குள் போராடிக் கொண்டிருக்க அவற்றின் கண்களின் முன்பே ஆட்டின் தலை 'க்ளக்'என்ற சப்தத்துடன் காமாட்சியால் வெட்டப்பட்ட நிகழ்வோடு இறை நியதியை ஒப்பிடலாம் என்று நான் நினைக்கிறேன்.பாவம் போக்கும் திருமறையான அல்குரான் வசனமொன்றில் ஒரு உயிர் பலி கொடுக்கப்படும் நேரம் அதனை மற்றைய ஜீவன்கள் காணக்கூடாது .கூர்மையான ஆயுதத்தால் ஒருமுறை அதன் கழுத்தை ஓங்கி வெட்டாமல் மிருதுவாக உயிர் போகும் வண்ணம் பலியிட வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் காமாட்சியால் ஒரே வெட்டில் ஆடு உயிரிழந்தது என்று வருடிய காட்சிகள் மடுவத்தில் ஐயறிவு ஜீவன்களை பலி கொடுக்கும் நிகழ்வினை கண்ணில் தோன்றிற்று.

காமாட்சி கசாப்புத்தொழிலை பரம்பரை பரம்பரையாய் செய்து வருகிறாள் என்பதை அவளது குடும்ப நிலை,ஆட்டை அறுக்கும் போது கைகள் நடுங்காத உறுதியான தன்மை,பையனை படிக்க வைத்து ஆளாக்கியதும் தொழில் கிடைத்த வருமானத்தால் என்பதால் அவள் தொழில் மீது கொண்ட தெய்வீக பற்று வெளிக்காட்டப்படுவதோடு அவளிடம் கறி வாங்க வருபவர்கள் பை கொண்டு வர வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்,தராசை நிறைய விட்டும் அதிகமாய் நிறுத்தல் என்பவற்றின் மூலம் அவளது உயரிய பண்பினை காட்டுகின்றார்,

யாரிடமும் ஒத்த சதத்தைக்கூட விட்டுக்கொடுக்காத காமாட்சி ஆத்தா விற்கப்படாமல் மீதப்படும் கறிகளை பக்கத்து வீட்டாருக்கு பிரித்து இலவசமாய் கொடுத்தல் மற்றும் ஆடை வாங்கும் போது கடைக்கார பையன் தவறுதலாய் அதிகமாக கொடுத்த நூறு ரூபாவை அவனிடம் திருப்பிக்கொடுத்தல் போன்ற வருடல்களில் காமாட்சி தன் பணத்தில் அநீதிக்கு துணைபோக மாட்டாள் என்றும் அக்கம் பக்கத்தை பேணி நடக்கும் வாழ்க்கை படிப்பினையையும் கற்றுத்தருகிறாள்.அதாவது காய்கறிகாரன் ஒத்த சதத்தை மேலதிகமாய் எடுத்த போது அதனை கொடுக்க மறுத்ததன் மூலம் அவன் இன்னும் பல ஆயிரம் பேரிடம் இதுபோல் தவறினை செய்ய முயலமாட்டான் என்பதையும் பிறரின் உடமைகள் மீது ஆசை கொள்ளாத புதுமைப்பெண்ணாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

கதையின் ஓட்டத்தில் இரக்கமான பெண்கள் இது போன்று உயிரைக் கொள்வார்களா?அதையும் ஒரு தொழிலாகவே செய்வார்களா?என்று படைப்பாளர் வாசகனான என்னிடம் ஒரு வினாவை எழுப்பி இருந்தார் உணர்ந்ததை பதிலாய்ச்சொல்கிறேன்.காமாட்சி தன் இறுதிக்காலத்தில் அன்றாட சீவியத்திற்காகத்தான் கசாப்புத்தொழிலை தேர்வு செய்தல் காரணம் தன் மகனால் கைவிடப்பட்ட அனாதையாதல்,ஆட்டுக்களை அறுப்பது பாவம் என்று அவள் தனிமையில் கூனிக்குருகி அழுததால் தான் தன் உடலிலுள்ள கண்ணு,கிட்னி,இதயம்,கல்லீரன்னு மற்றைய அங்கங்களையும் தானம் செய்தால் என்று என் மதிகளில் தென்படுவதோடு தன்னோடு....,அனாதையாக இருப்பினும் தன் வயிற்றில் பிறக்காத மகன் கோபால் என்று அவள் எண்ணி அவனுக்கு வீட்டையும்,2லட்சம் பணத்தையும் உயிலாய் எழுதிய போதிலும் அவன் ஏற்க மறுத்தல்,தன் செவிலித்தாய் இறந்த செய்தியும் அறியாமல் ஆபரேஷன் பண்ண செலவு செய்யுங்கள் என்ற ஆழமான வருடல்கள் கண்களில் கன்னீராவதால் காமாட்சி ஒரு பெண்ணுக்குரிய உயரிய பன்ன்பினை கொண்ட உத்தமி தான் என்று தென்படச்செய்கிறது.

கோபாலின் மனது தன் செவிலியிடம் ஒரு கேள்விகேட்க வேண்டும் என்று நினைத்தாலும் காலம் செய்த கோலத்தில் அவள் உயிர் இறைவனால் கைப்பற்றப்பட்ட பின் அவள் மகன் சண்முகனை அழைக்கலாமா?ஆத்தா என்னோடு கோபப்படமாட்டாலா? என்ற நீண்ட போராட்டத்தின் பின் அவனை அழைத்தலும் மேற்படி காட்சிகளின் வருடல்கள் உணர்ச்சிகளை மெய்யாய் அனுபவத்தில் செதுக்கியது என்று தான் உணரச் செய்திற்று.திறனாய்வின் முடிவும் 'புரியாதவர்களுக்கு புதிராய் இருந்த ஆத்தா,புரிந்தவர்களுக்கு புனிதமாகியிருந்தாள். எப்போதும் அவள் அப்படித்தான்..! ' என்ற மேற்படி கதையின் முற்றுப்புள்ளி தான் என்று சொல்வதே சாலச்சிறந்தது.

மேற்படி திறனாய்வு என் சொந்த படைப்பாகும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (5-Jun-15, 1:48 am)
பார்வை : 487

சிறந்த கட்டுரைகள்

மேலே