பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி--இதுதான் விதியா

ஒரு மாபெரும் புளிய மரத்தின் கதையை அந்த மரமே சொல்வது போல் அமைத்துள்ளார் எழுத்தாளர் அபி! இதில் மிகவும் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவென்றால், புளிய மரம்தான் தன்மையில் தன் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை கதை முடியும் தறுவாய் வரை நாம் கண்டுபிடித்து விடாதபடி எச்சரிக்கையாய் கையாண்டிருக்கிறார் .
அது வரையில் நெடுஞ்சாலை நடை மேடையில் வசிக்கும் ஒரு மனிதர் தன் கதையை சொல்வதாக நாம் நினைத்துக் கொண்டே இருக்கிறோம். “என்னால் பேச முடியாது ” என்று பொருள்படும் வார்த்தைகளை அந்த மரம் அடிக்கடி சொல்லும்போது கூட, நமக்கு கதை சொல்வது மரம் என்ற ஐயம் வருவதில்லை. நடை மேடை ஊமை மனிதர் என்றே நினைக்கிறோம் .
இரண்டாம் முறை, கதையை முதலிலிருந்து கடைசிவரை படித்தால், புளியமரம்தான் தன் கதை சொல்கிறது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது .
இருந்தாலும், "எனது கால்பகுதியில் வெட்டியதில்..நான்தான் அலறினேன்.வலியால்" என்ற வாக்கியத்தை தவிர்த்திருக்கலாம். ஏனெனில், கதை முடிவில் மரம் என்று தெரியும்போது, மரம் எப்படி அலற முடியும் என்ற கேள்வி வாசகர் மனதில் ஏற்படும். “ வலித்தும் அலற முடியாமல் துடித்தேன் ” என்று எழுதியுக்கலாம்.
முதலில் புளியமரம் இருந்த சாலையோரத்தில் வெறிச்சோடிக் கிடந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி பெரிய வியாபார இடமாக, கலகலப்பாக மாறுகிறது!
ஆகா! இந்த மாற்றத்தை, அபி அவர்கள் சுவாரசியம் குன்றாமல் எவ்வளவு அழகாக விவரித்திருக்கிறார்! அதை, திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது. முதலில் பரமசிவம் ஆட்டோ மட்டும், பின் பெரிய ஆட்டோ ஸ்டாண்டு, பின் டிபன் கடை, இளநீர் கடை, தள்ளு வண்டிகளில் வியாபாரம், செருப்புக் கடை, இன்னும் சிறிதும் பெரிதுமாக மற்ற வியாபாரங்கள் என்று அவர் வர்ணிக்கும் விதம் , வர்ணனை இலக்கியத்தை விரும்பாதவரையும் விரும்ப வைக்கும். பொறுமை இன்றி வேகமாக கதை படிக்க விரும்பும் இன்றைய வாசகர்களை, மெதுவாகப் படிக்க வைத்து, வர்ணனை இலக்கியத்தில் தன்னை மறந்து மூழ்க வைக்கும் திறமையில் பொள்ளாச்சி அபிக்கு நிகர் அவரேதான் !
ஆகா! கோவில் பொங்கல் திருவிழாவை ,கோவிலோடு சேர்த்து நம் மனதில் நிறுவி விட்டாரே அபி அவர்கள்! அதற்கு அவரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.
அடுத்து,இந்த கதை முழுதும் யதார்த்தத்திலிருந்து சிறிதும் பிறழாமல் எழுதப்பட்டிருக்கிறது! உதாரணமாக ,புளிய மரத்தை அரசு அதிகாரிகள் சாலையை அகலப் படுத்துவதற்காக ,வெட்டப் போகிறார்கள் என்பது தெரிந்ததுமே, அந்த மரத்தடியை நம்பியிருக்கும் வியாபாரிகள் அனைவரும் ஒன்று கூடி பேசும்போது, மரம் வெட்டுவதை தடுக்க, என்னென்ன திட்டங்கள் போடுகிறார்கள்; யார் யார் முக்கியப் பங்கேற்று பேசுகிறார்கள் என்று கவனிக்கிறோம்; அரசு அதிகாரிகளிடம் யார் யார் வலியச்சென்று விசாரிக்கிறார்கள் என்று பார்க்கிறோம்; அது உண்மையில் அந்த மாதிரி பிரச்னை வரும்போது எப்படி நடக்குமோ, அதே மாதிரி, யதார்த்தம் பிறழாமல் நடக்கிறது.
மரம் வெட்டுபவர்கள் வரும்போது, யார் யார் தன் கடையை எப்படி காலி செய்கிறார்கள் என்பதில் கூட அபி அவர்கள் யதார்த்தத்தை காப்பாற்றியிருக்கிறார். உதாரணமாக, “தள்ளுவண்டிகள் கிழக்கில் சிலவும்,மேற்கில் சிலவும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.” என்ற வரியையே எடுத்துக் கொள்ளலாம் .
மொத்தத்தில், இலக்கிய ஆராய்ச்சிப் பாடமாக தமிழ் பட்டப் படிப்பில் வைக்க மிகவும் தகுதியான , அவசியமான கதை!
வாழ்க; வளர்க; பொள்ளாச்சி அபி அவர்களின் இலக்கியத் தொண்டு!

இது என் சொந்த படைப்பே என்று உறுதி கூறுகிறேன் .
ம .கைலாஸ்

எழுதியவர் : ம .கைலாஸ் (7-Jun-15, 7:04 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே