வருவானா - நட்புக்கு சலாம் குலாமு மீள்பதிவு

................................................................................................................................................................................................

திங்கட் கிழமை, அதிகாலை ஐந்து மணிக்கு அமைதியை வம்புக்கு இழுத்தது அலாரம் இசை. என் ஹாஸ்டல் அறையில் என்னைத் தவிர இரு மாணவியர் இருந்தனர். ரூபா, லதா; இருவருமே என் வகுப்புத் தோழியர். அலாரத்தின் இசையில் இருவரும் பாம்பு போல் நெளிந்து அடங்கினர். கடிகாரத்தை எட்டிப் பிடித்து தலையில் தட்டியபோது மணி 5.03. ஏழு நிமிடம் தூங்கி ‘முழு எண்ணில்’ எழுந்திரிக்க ஆசைப்பட்டு போர்வையை போர்த்திக் கொண்ட சமயம் சிவகுமாரிடமிருந்து மொபைல் ஃபோனில் அழைப்பு. ‘‘குட் மார்னிங் மைதிலி’’ என்றான். அவன் சொன்ன விபரத்தை சொல்வதற்கு முன் ஒர் அறிமுகம்.

சிவகுமார் என் வகுப்புத் தோழன். நாங்கள் சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தோம். என் ஊர் தேனி மாவட்டம். அம்மா, அப்பா, ஒரு அக்கா, இரண்டு அண்ணன்கள். என்னைத் தவிர அனைவரும் செட்டில் ஆகி விட, அம்மாவும் அப்பாவும் தேனியில். அக்கா அவ்வபோது வந்து பார்த்துக் கொள்வார். நான் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஐந்து நாட்கள் சேர்ந்தாற் போல் விடுமுறை கிடைத்தால் ஊருக்குப் போவேன்.

சிவகுமார் கோயமுத்தூர்காரன். அவன் தம்பி கோயமுத்தூரில் எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்தான். அவன் அப்பாவுக்கு ஜவுளி பிசினஸ். சென்னையில் அவருக்கு ஒரு சின்ன வீடு . சின்ன வீடு என்றால் ஓரிருவர் வசிக்கும்படியான போர்ஷன். அதில் சிவகுமார் தங்கியிருந்தான். சமையலுக்கு ஒரு ஆயாம்மா.

சிவகுமார் என் நண்பன். மூன்று வருட நட்பு எந்நேரமும் தடம் மாறலாம் என்ற சக மாணவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி நட்பாகவே பயணப் பட்டுக் கொண்டிருந்தது. அதற்காக நாங்கள் இருவரும் பெரிதாக மெனக்கெடவில்லை.

அவன் அம்மாவுக்கு கர்ப்பப்பை இறங்கி விட்டது. அதற்கு ஆபரேசன் பண்ண வேண்டும். இன்றைக்கு அம்மாவும், தம்பியும் முத்துநகர் எக்ஸ்பிரஸில் சென்னை வருகிறார்கள். சிவகுமார் மாணவர் மன்றச் செயலாளன். இன்றைக்கு பார்த்து ரோட்டரி கிளப்போடு ஒரு முக்கியமான காம்ப் நடத்திக் கொடுத்தாக வேண்டிய கட்டாயமாம். அதனால் என்னிடம் அம்மாவையும், தம்பியையும் அழைத்து வரச் சொல்கிறான். அதுதான் காலையில் போன்.

நான் கிடுகிடுவென்று கிளம்பினேன். சிவகுமாரிடமிருந்து ஃபோன் வந்தால் என் க்ளாஸ்மேட் லதாவுக்கு மூக்கு வேர்த்து விடும். ஃபோன்ல யாரு, சிவாவா? என்று துருவித் துருவி விபரம் தெரிந்து கொள்வாள். ‘‘வருங்கால மாமியாரை இப்பவே தாங்கறியா?’’ என்றாள். நான் கைப்பையை எடுத்தபடி லதாவைப் பார்த்தேன். ‘‘சே, சே, சிவகுமாருக்கு உன்னை மாதிரி நல்ல வொய்ப் கிடைக்கட்டும்’’. என் பேச்சின் நக்கல் புரிந்து அவள் முகம் மாறியதை பொருட்படுத்தாமல் வேகமாகப் படியிறங்கினேன்.

எழும்பூர் ஸ்டேஷனில் சிவகுமாரின் தம்பி நந்தகோபாலை கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை, ஜூனியர் சிவகுமார் மாதிரி இருந்தான். அவன் அம்மா வெளிறிய தேகத்தோடு கொடி போலிருந்தார். சிவகுமார் அவர்களிடம் என்னைப் பற்றி முன் கூட்டியே சொல்லியிருக்கிறான் போலும். நான் போனதும் என் கையைப் பற்றி, "வாம்மா மைதிலி" என்றார் அம்மா. ‘‘நல்லா இருக்கியா? ’’ பேசிக்கொண்டே நடந்தோம்.

ஒரு ஆட்டோ வைத்து அவர்களை அழைத்து வந்தேன். இன்னொரு சக மாணவன் கண்ணனை அழைத்தேன். ஆண்கள் விடுதியில் தங்கியிருந்தான். நந்தகோபாலை அவனிடம் ஒப்படைத்து விட்டு அம்மாவுடன் ஹாஸ்டலுக்கு நடந்தேன்.

அம்மா குளித்து முடித்து சாப்பிட்டானதும் சிவகுமாருக்கு ஃபோன் செய்தேன். என்ன பிளான் வைத்திருக்கிறான், தெரிய வேண்டுமே? அம்மாவுக்கு ரத்த பரிசோதனை உட்பட அனைத்து டெஸ்ட்டுகளையும் செய்து விட்டு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவ மனையில் ஐந்தாவது யூனிட் சீஃப்பிடம் தேதி வாங்கி சர்ஜரி பண்ண வேண்டும். பே வார்டில் அட்மிட் பண்ணி டிஸ்சார்ஜ் ஆன பின் சூளையிலுள்ள அத்தை வீட்டில் கொண்டு போய் விட்டு விட வேண்டும். நந்தகோபாலை இன்றிரவு கோயமுத்தூருக்கு பார்சல் பண்ணி விட வேண்டும்.

‘‘மைதிலி, நான் வர்ற வரைக்கும் அம்மாவை பார்த்துக்கோ. நான் வந்த பிறகு வேணுமானா நீ வேற விவகாரம் பார்க்கலாம்’’ சிவகுமார் தழுதழுத்தான்.

‘‘நீ யார் கிட்ட பேசிட்டிருக்க?’’ என்றேன் நான். ‘‘அம்மா எனக்கும் அம்மாதான்’’

நந்தகோபாலுக்கு நெட்டில் கோயமுத்தூருக்கு டிக்கெட் ரிசர்வ் செய்தேன். மதியம் எங்கள் பாட்ஜுக்கு டெஸ்ட் இருந்தது. அம்மா மதிய உணவு முடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். நானும் லதாவும் சிறிது நேரம் சேர்ந்து படித்து விட்டு டெஸ்ட்டுக்கு கிளம்பி விட்டோம். சிவகுமார் பாட்ஜுக்கு டெஸ்ட் முடிந்து விட்டது.

முன்பெல்லாம் வகுப்புத் தோழர்களை வகுப்பிலேயே பார்த்து பேசிக் கொள்ளலாம். இறுதியாண்டில் முழு வகுப்பையும் ஏபிசி வரிசையில் நான்கைந்து பாட்ஜ்களாக பிரித்து விடுவார்கள். க்ளாஸ், டெஸ்ட், போஸ்டிங் எல்லாமே வேறு வேறு தேதிகளில் பாட்ஜ் பிரகாரம் நடக்கும் என்பதால் வகுப்புத் தோழன் வேறு பாட்ஜில் மாட்டிக் கொண்டால் பார்ப்பது கடினம்.

அன்று மாலை க்ளாஸ்மேட் வைதேகியிடம் காரையும் டிரைவரையும் வாங்கி, நான், ரூபா, லதா, அம்மா, நந்தகோபால் எல்லோரும் தம்புசெட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாள் கோயிலுக்குப் போனோம். ஆளுக்காள் அர்ச்சனை செய்தோம். அம்மா பேர் கமலாட்சி; பூர நட்சத்திரம், சிம்ம ராசி. சிவகுமார் மிருகசீரிசம், மிதுன ராசி; நந்து ரேவதி நட்சத்திரம், மீன ராசி. அம்மா என் ராசி நட்சத்திரத்தை ஆவலோடு கேட்டுக்கொண்டார்- சதய நட்சத்திரம், கும்ப ராசி. ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டோம்.

நந்துவை கோயமுத்தூருக்கு ரயிலேற்றி அனுப்பினேன்.

இரவு பத்து மணியளவில் சிவகுமாரிடம் போனில் விவரம் சொன்னேன். அவனுக்கு காம்ப் நல்லபடி முடிந்து விட்டது, பத்திரிக்கையில் செய்தி வரும் என்றான். காம்ப் செலவு ஐயாயிரம் ரூபாய் அதிகம் ஆகி விட்டதாம். கணக்குகளை ஒப்படைத்து அந்த எக்ஸ்ரா பணத்தை சூட்டோடு சூடாக வாங்கி விட வேண்டுமாம். காலையில் அம்மாவைப் பார்க்க வந்து விடுவதாகச் சொன்னான். நிறைய்ய்ய தேங்க்ஸ் சொன்னான்.

அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை அம்மாவை அழைத்துக்கொண்டு காலை எட்டு மணிக்கே மருத்துவமனை சென்று விட்டேன். அங்கே சுற்றி இங்கே சுற்றி எல்லாப் பரிசோதனைகளையும் முடித்தேன்.

ஐந்தாவது யூனிட் சீஃப் டாக்டர் காஞ்சனா சர்ஜரியில் இருந்தார். அவரை ஆபரேசன் தியேட்டரிலேயே போய் பார்த்தேன். காஞ்சனா மேடம் அம்மாவைப் பரிசோதித்தார். மறுநாள் புதன் கிழமை பதினோரு மணிக்கு ஆபரேசனுக்கான தேதி குறித்தார். ‘‘மைதூ, இன்னைக்கு நாலு மணிக்குள்ள எல்லா ரிசல்ட்டையும் எடுத்துகிட்டு அனஸ்தீஷியா டாக்டர் ராஜவேலு கிட்ட இவங்களுக்கு சர்ஜரி பண்ற அளவுக்கு உடம்பு நல்ல நிலையில இருக்கு, அதாவது ‘ஃபிட் ஃபார் சர்ஜரி’ன்னு ஒரு சர்ட்டிபிகேட் வாங்கிடு. சர்ட்டிபிகேட் வாங்க லேட்டானா நாளைக்கு சர்ஜரி பண்ண முடியாது. அப்புறம் நான் லீவுல போயிடுவேன்; சர்ஜரி ஒரு பத்து பதினஞ்சு நாள் தள்ளிப் போயிடும், பிற்பாடு என்னை குறை சொல்லக் கூடாது. ராத்திரி லைட்டா சாப்பிடலாம், காலைல அஞ்சு மணியிலேர்ந்து பச்சைத்தண்ணி கூட சாப்பிடக் கூடாது. இன்னைக்கு ராத்திரியே அட்மிட் பண்ணிடு; கேஸ் ஷீட் போடச் சொல்லிடு. ஏன்னா தூக்க மாத்திரை கொடுக்கணும், இன்ஜெக்சன் போடணும். நாளைக்கு காலைல பிளட் பாங்குக்கு போய் ஒரு யூனிட் ரத்தம் ரிசர்வ் பண்ணிடு’’ காஞ்சனா மேடம் சொல்லிக் கொண்டே போனார். நான் மலைத்தேன். தலைக்குள் விஷ்ணு சக்கரம் சுற்றியது. நான் வெறும் இறுதியாண்டு மாணவி; இவர் சொல்கிற வேலைகள் ஒரு ஹவுஸ் சர்ஜனுக்கோ அல்லது முதுநிலை மாணவனுக்கோ தான் சாத்தியம். சரி, எப்படியும் எந்த நேரத்திலும் உதவிக்கு சிவகுமார் வந்து விடுவானே!

அம்மாவுக்கு மாத்திரம் சாம்பார் சாதப் பொட்டலம் வாங்கித் தந்து, நான் மதிய சாப்பாட்டை மறந்து, ஓடி ஓடி ரிசல்ட் வாங்கி, செக் செய்து கமலாட்சிக்கு பதில் வந்த கமலா ரிசல்ட்டை கவுண்டரில் கொடுத்து மாற்றி, ராஜவேலு சாரிடம் அம்மாவை அழைத்துப் போய் ஃபிட் ஃபார் சர்ஜரி சர்ட்டிபிகேட் வாங்கிய போது மாலை மணி ஐந்தரை. எனக்கு சர்ஜரி போஸ்டிங். சீஃப்-ஐ பார்த்து ‘வேண்டியவருக்கு ஆபரேசன்’ என்று சொல்லி லீவ் வாங்கினேன்.

சம்பிரதாயங்கள் முடித்து, அம்மாவை கட்டண வார்டில் அட்மிட் பண்ணி மறுநாள் அவருக்கும் எனக்கும் தேவைப்படுகிற துணிமணி சோப்பு சீப்பு இத்யாதிகளை ஹாஸ்டல் போய் எடுத்து வந்த போது மணி ஏழு. மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு மூன்று இட்லி, பால் வாங்கிக் கொடுத்து ஒரு வழியாக ஒன்பது மணிக்கு உடம்பெல்லாம் அடித்து போட்டாற் போல் வலிக்க, தூங்கி விட்டேன்.

புதன் கிழமை; காலையில் அம்மா பதட்டத்துடன் இருந்தார். சர்ஜரி மட்டும் காரணமல்ல, சிவகுமார் தடியன் இன்னும் வந்து பார்க்க வில்லை. நான் சமாதானப்படுத்தினேன். சர்ஜரி செய்வதற்கு முன் ரத்த சம்பந்தம் உள்ள உறவினர்களிடம் எழுத்து மூலம் சம்மதம் வாங்கி கொள்வார்கள். அதற்காக சிவகுமாருக்கு ஃபோன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் வந்தது. பொறுத்து பொறுத்துப் பார்த்து கன்சென்ட் ஃபார்மை கீழே எடுத்துப் போய் நானே சிவகுமார் கையெழுத்தை போட்டு நர்சிடம் கொடுத்து விட்டேன்.

சிவகுமார் ஏன் வரவில்லை என்ற கேள்வி மனதை உறுத்தினாலும் அடுத்தடுத்த வேலைகள் என்னை யோசிக்க விடவில்லை. இரத்த வங்கி எட்டு மணிக்கெல்லாம் திறந்து விடுவான்.

என்னால் அம்மாவை விட்டு நகர முடியவில்லை. இரத்த வங்கிக்கு போகிற வேலையும் இருந்தது.

சிவகுமாருக்கு அரை டஜன் தடவை ஃபோன் செய்தும் ஸ்விட்ச் ஆஃப் தான் வந்தது. பத்தரை மணிக்கு சர்ஜிகல் டிரஸ் மாட்டி அம்மாவை ஆபரேசன் தியேட்டருக்கு கொண்டு போனார்கள். நான் இரத்த வங்கிக்கு ஓடினேன்.

இரத்த வங்கி முழுதும் மூடி சில்லென்ற பெட்டி போலிருந்தது. இரத்தம் கொடுத்தால்தான் இரத்தம் என்றார்கள்; எந்த குரூப்பானாலும் பரவாயில்லையாம். அந்த சமயம் இரத்தம் கொடுக்க யாரை எங்கு போய் தேடுவேன்? நானே இரத்தம் கொடுக்க சம்மதித்தேன்.

பிளட் பாங்க் ஆபிசர் எச்ஐவி டெஸ்ட் உட்பட எல்லா பரிசோதனைகளையும் பொறும்...மையாக செய்து முடித்து என்னிடமிருந்து ரத்தமெடுத்தார். அம்மாவுக்கான ரத்த பாக்கெட்டை டவலில் சுற்றியபடி நான் எழுந்து ஓடினேன். பிளட் பாங்க் ஆபிசர் என் கையைப் பிடித்து தடுத்ததில் அரை வட்டமடித்து அவர் மீதே மோதி நின்றேன். இரத்தம் கொடுத்த உடனே கிளம்பக் கூடாதாம். முக்கால் மணி நேரமாவது படுத்திருக்க வேண்டுமாம். என் அவசரத்தை சொன்னேன். கொஞ்சம் குளுக்கோஸ் பவுடரை வாயில் கொட்டினார். ‘‘டாய்லெட்டுல பிளீச்சிங் பவுடரை போடற மாதிரி இருக்கு. ’’ நான் முறைத்தேன். ‘‘சரி,சரி. அரவை மிஷின்ல அரிசி கொட்டின மாதிரி இருக்கு.’’- மூன்று தரம் குளுக்கோஸ் விழுங்கிய பிறகு பிளட் பாக்கெட்டுடன் ஓடினேன்.

பாதி தூரம் வந்திருப்பேன், பிளட் பாங்க் ஆபிசர் சொன்னது சரி. என் சக்தியெல்லாம் உறிஞ்சப்படுவதைப் போல அடி வயிற்றை சுருட்டிப் பிடித்தது. மயக்கத்தில் கால் பின்னி உடம்பு சுவரில் போய் சாய்ந்து விட்டது. குமட்டினேன். சுவரின் கீழ் வெற்றிலை கறை. தரையெல்லாம் ஒரே அழுக்கு. ரத்த பாக்கெட்டை வைத்துக் கொண்டு இங்கெல்லாம் விழுந்தால் முதலுக்கே மோசம் வரும். முடிந்தவரை தலையை கவிழ்த்தினேன்.உடம்பெல்லாம் வேர்த்து கொட்டியது. கண்ணில் பட்ட வார்டுக்குள் புகுந்து மேட்ரனிடம் பேசினேன். நர்ஸ் ஒருத்தி என்னைத் தாங்கி அழைத்துப் போய் வார்டுக்குள் படுக்க வைப்பதும், ரத்த பாக்கெட்டை மேஜையில் வைப்பதும் தெரிந்தது.

பத்து நிமிடம் போல படுத்திருந்து மீண்டும் ரத்த பாக்கெட்டுடன் ஆபரேசன் தியேட்டருக்கு ஓடினேன். திரும்பவும் குமட்டல், மயக்கம். ரத்த பாக்கெட்டை தியேட்டருக்குள் கொடுத்த போது மணி மதியம் பனிரெண்டு பத்து. ‘‘சரியான நேரத்துல வந்துட்டே; இன்னும் பத்து நிமிஷம் லேட்டாகி இருந்தா... ’’ இழுத்தார் அங்கிருந்த ஹவுஸ் சர்ஜன்.

நான் பதறினேன், ‘‘ஐயையோ, என்ன நடந்திருக்கும்?’’

‘‘மணி பன்னென்டு இருபதாகி இருக்கும்.’’ அலட்சியமாக சொல்லி விட்டு அன்ன நடை நடந்தார்.

ஈஸ்வரா, ஜோக் முக்கியமா! நெற்றியைப் பிடித்துக் கொண்டேன். டாக்டர் ரூமில் படுத்துக் கொண்டேனா, மயங்கி விழுந்தேனா தெரியவில்லை. மீண்டும் எழுந்தேன். போஸ்ட் ஆபரேடிவ் வார்டுக்கு ஓடினேன். பெட்ஷீட் போடச் சொன்னேன். தலையணை மாற்றச் சொன்னேன். வார்டு நர்ஸ் டயட் சார்ட் கேட்டாள்.

‘‘ஆபரேசன் பண்ணிட்டு வர்ற நோயாளிக்கு என்ன டயட் கொடுப்பீங்க?’’

‘‘டயட் கிடையாது, ஒரு நாள் முழுக்க டிரிப்புதான். ஆனாலும் டயட் சார்ட் வைக்கிறது சம்பிரதாயம்’’

டயட் சார்ட் கொடுக்கிறவர் பெண் பணியாளரிடம் ‘கடலை’யில் இருந்தார். ‘‘அந்த சேப்பு சாரிய எப்பதான் கட்டுவ?’’ அவள் பதில் சொல்வதற்குள் டயட் சார்ட் வாங்கினேன்.

மணி பன்னென்டு ஐம்பதுக்கு அம்மாவை போஸ்ட் ஆபரேடிவ் வார்டுக்கு கொண்டு வந்தார்கள். மயக்கத்தில் இருந்தார். சிவகுமாரின் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் -இல் இருந்தது. அவன் பாட்ஜ்மேட் ரூபாவுக்கு ஃபோன் செய்தேன்:
‘‘இந்த சிவகுமார் போஸ்டிங் வந்தானா?’’

‘‘அவன் உன்கூட இல்லையா?’’ ரூபா திருப்பிக் கேட்டாள். ‘‘அவன் ரெண்டு நாளா போஸ்டிங் வரலையே? ஆக்ஸிடெண்ட் வார்டுலதான் டியூட்டி.. அவன் அம்மாவுக்கு சர்ஜரின்னு சொல்லி லீவ் கூட மார்க் பண்ணிட்டோமே?’’

நான் குழம்பினேன். அவன் பாட்ஜ்மேட்ஸ் எல்லோரும் அவன் எங்களுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு விசயம் தெளிவாகிறது; சிவகுமாருக்கு ஆக்ஸிடெண்ட் ஏதும் ஆகவில்லை. தமிழ்நாடு - ஆந்திரா பார்டரில் ஆக்ஸிடெண்ட் நடந்திருந்தாலும் ஒரு நோயாளியாக சிவகுமார் இந்நேரம் இந்த ஆக்ஸிடெண்ட் வார்டுக்கு வந்திருக்க வேண்டும்.

அன்று மாலையில் அம்மாவை போய்ப் பார்த்தேன். கண்களில் நீர் வழிய என் கையை பற்றிக் கொண்டார். ‘‘ரெண்டு நாள்ளயே கண்ணுக்கு கீழே கருவளையம் விழுந்திடுச்சேம்மா; தலையெல்லாம் கலைஞ்சு சரியா தூங்காம கஷ்டப் படுறியேம்மா,’’ ‘என்னால உனக்கு எவ்வளவு சிரமம்’ என்கிற வார்த்தைகள் வாய் வரை வந்து அம்மா அடக்கி கொள்வது தெரிந்தது. அப்படி அவர் பேசினால் ‘இதுவே சிவகுமாரா இருந்தா இப்படி கேட்பீங்களா’ என்று நான் எகிறுவேன் என்பது அம்மாவுக்கு தெரியும்.

இங்கிதம் தெரிந்த தாயார் சிவகுமாரைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை என்றாலும் அவர் மனம் பதறுவதும், கண்கள் தேடுவதும் வெளிப்படையாகத் தெரிந்தது.

‘காம்ப்’ பற்றி நாளிதழில் செய்தி வந்திருந்தது. நாளிதழை பத்திரப்படுத்தினேன். செய்தியை நான்கு ஜெராக்ஸ் எடுத்தேன். அந்த செய்தியோடு கூடவே சில மருத்துவ மாணவர்கள் குடித்து விட்டு ரோட்டரி கிளப் அங்கத்தினர்களோடு சண்டை போட்டதாகவும், போலிஸ் அரெஸ்ட் வரை விவகாரம் போனதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதனால்தான் சிவகுமார் வரவில்லையா? ஆனால் அவன் அப்படி பட்டவன் இல்லை!

மறுநாள் காலை அம்மாவுக்குப் போட புது நைட்டியும் டவலும் கேட்டார்கள். வாங்கிக் கொடுத்தேன். மதியம் பே வார்டுக்கு மாற்றினார்கள். திரவ ஆகாரம் தொடங்கச் சொன்னார்கள். பால் குடித்து அம்மா வாந்தி எடுத்தார். இளநீர் வாங்கி வந்தேன். அதை சீவ வெட்டரிவாள் கிடைக்கவில்லை. சர்ஜிகல் நைஃப் வைத்து முயன்றதில் கையில் கீறல். வள்ளலார் நகர் முழுக்க சுற்றி வெட்டரிவாள், பிளாஸ்க், சில பாத்திரங்கள் வாங்கினேன்.

மாலை ஆறு மணிக்கு மேல் க்ளாஸ்மேட்ஸ் ரூபா, லதா, பஞ்சாட்சரம், சிந்தியா வந்து பார்த்தார்கள். ‘‘சிவகுமார் இப்பத்தான் வெளியே போனான்’’ என்று கூசாமல் பொய் சொன்னேன். அம்மாவின் பார்வையைத் தவிர்த்தேன். ஜாடை மாடையாகப் பேசிப் பார்த்ததில் ஒருவருக்கும் சிவகுமாரைப் பற்றி தெரியவில்லை. பஞ்சாட்சரம் மட்டும் சிவகுமார் போலிஸ் ஸ்டேஷன் பக்கம் அவசரமாக ஓடியதைப் பார்த்ததாகச் சொன்னான்.

காம்ப் பற்றிய செய்தியின் பிரதிகளை ரூபாவிடமும் பஞ்சாட்சரத்திடமும் கொடுத்து ஆண், பெண் ஹாஸ்டல் மற்றும் கல்லூரி நோட்டீஸ் போர்டில் போடச் சொன்னேன்.

அன்றிரவு அம்மா வெளிப்படையாகக் கேட்டார், ‘‘உன் ஃபிரண்ட் எங்கேம்மா? ’’ நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்லி நாளிதழைக் காட்டினேன்.

‘‘அவனுக்கு அசம்பாவிதம் ஏதும் ஆகியிருக்காதில்லே? ’’

ஆக்ஸிடெண்ட் வார்டும், பக்கத்து பிணவறையும் நினைவில் வந்து போனது. பஞ்சாட்சரம் புதன் கிழமை அவனைப் பார்த்திருக்கிறான்.

‘‘சேச்சே, ஒருக்காலுமில்லே.’’

அம்மா பதட்டத்துடன் வீட்டுக்கு ஃபோன் செய்வது தெரிந்தது. எதிர் முனையில் என்ன பேசினார்கள் தெரியவில்லை. அம்மா பெருமூச்சுடன் சொன்னார், ‘‘அவங்கப்பா, பையன் கை காலோட நல்லா இருக்கானா, நல்லாத் தெரியுமான்னு கேட்டார். பையன் உடம்புக்கு ஒண்ணுமில்லேன்னேன். அப்படீன்னா சந்தோசம். அவன் போலிஸ் ஸ்டேஷன் போனா என்ன, ரயில்வே ஸ்டேஷன் போனா என்ன, சுத்தி அடிச்சுட்டு வரட்டும். இன்னும் ரெண்டு மூணு நாள் பாக்கலாம். நீ கவலைப்படாதே, உடம்பை பாத்துக்கோங்கிறார்.’’

இரண்டு நாட்கள் கழிந்தது. சிவகுமார் வரவில்லை; ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் –தான். அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து சூளையில் கொண்டு போய் விட்டேன். அம்மா நெற்றியில் அழுந்த முத்தமிட்டார், ஆசிர்வதித்தார். மல்லிகைப் பந்தும் அல்வாவும் வாங்கிக் கொடுத்தார். இறுதியாண்டில் மருத்துவ மாணவர்கள் எப்படி வேண்டுமானாலும் மாறுவார்கள். சிவகுமார் விதி விலக்கில்லையோ?

யோசனையில் நானிருக்க கால் அனிச்சையாக நடந்தது.

ஹாஸ்டல் ரிசப்சன் ஹாலில் சிவகுமாரைப் பார்த்தேன். சிவகுமார் தானா அது? கண்களைக் கசக்கினேன். அந்த தடியன்தான். சூடாக நாலு கொடுக்க வேண்டும். கிட்டத்தில் போனேன். இதென்ன, உள்ளே என் அப்பா உட்கார்ந்திருக்கிறார்- அதுவும் கரடு முரடாக, தாடியும் மீசையுமாக ஐந்து வயசு கூடி விட்டவர் மாதிரி… ‘‘மைதிலி!’’ பார்த்து பத்து வருசம் ஆனது போல் அப்பா கையை நீட்டி கூவினார்.

‘‘மைதிலி, செவ்வாக்கிழமை மெட்ராஸ்ல அண்ணா வீட்டுக்கு போயிட்டு ஹாஸ்டல் வந்தேம்மா. நெஞ்சு வலி வந்துடுச்சு. சிவகுமார் தம்பி அவசரமா எங்கிட்டோ கிளம்பி கிட்டிருந்தவர் உடனே பாத்து ஆட்டோ வச்சு ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயிட்டார். ஹார்ட் அட்டாக்; டாக்டருங்க இப்ப ஏதும் சொல்ல முடியாதுன்னுட்டாங்க. சிவகுமார் தம்பி சரியா தூங்கல, ஒழுங்கா சாப்பிடல. செல் ஃபோன் எங்க வுட்டாரு, கோட் எங்க போட்டாரு, எதுவும் தெரியாது. யார் யாரோ ஸ்பெஷலிஸ்டுங்களை கூட்டிட்டு வந்து காட்டினார்; ஒரு மருந்து நாலாயிரம் ரூபாயாம். ஆறு ஊசி அப்படி போட்டுருக்கார். நேத்து சாயந்திரம் தான் எல்லாம் சரியாச்சு. இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆயிட்டேன். சிவகுமார் தம்பி இல்லேன்னா இப்ப நான் இருந்திருக்க முடியாது.’’ அப்பா சொல்லிக்கொண்டே போனார். நான் ஆடிப் போனேன்.

இதனால்தான் சிவகுமார் வரவும் இல்லை; ஃபோனும் எடுக்க வில்லையா? இருதய நிபுணர் டாக்டர் ரஞ்சனியின் வீடு போலிஸ் ஸ்டேஷன் பக்கத்தில் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது…

நான் சிவகுமாரைப் பார்த்தேன்; படவா ராஸ்கல் நமட்டுச் சிரிப்புடன் ஓரக் கண்ணால் என்னைப் பார்த்தான்!

முற்றும்

................................................................................................................................................................................................

எழுதியவர் : (13-Jun-15, 9:48 pm)
பார்வை : 370

மேலே